சீனக் கடன்: தவறு எங்கே நடந்தது?

சீனக் கடன்: தவறு எங்கே நடந்தது?

எட்வேட் உதயதாஸ்

உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப் பகுதியில், பெருமளவு நிதி செலவிடப்பட்ட நிலையில், 2009இல் உள்நாட்டுப் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கியது அப்போதைய அரசு.

குறிப்பாக வடக்கைப் பொறுத்த வரையில், நீண்ட காலம் புனரமைக்கப்படாதிருந்த வீதிகள் காபட் வீதிகளாகவும், புகையிரதப் பாதைகள் மீளமைக்கப்பட்டதும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பாரிய இரு அபிவிருத்தித் திட்டங்களாகும்.

நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களும் வலு சக்தி துறையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் உள்ளடக்கப்பட்டன.  

அதிவேக வீதிக் கட்டுமானங்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம், கொழும்புத்துறைமுக அபிவிருத்தி போன்றன அதிக செலவில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களாகும்.

2010 முதல் 2016 வரையான காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 முதல் 7 வீதத்தை பொது முதலீட்டிற்காக செலவிடுவதற்கு அப்போதைய அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால், தான் எதிர்பார்த்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2013இல் பொது முதலீடுகளுக்குத் தேவையான 40% நிதியானது வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்து பெறப்பட்டது.

ஒரு ஏற்றுமதிக் கடன் வழங்கும் நாடானது, தன்னிடம் பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்யவேண்டுமெனத் தன்னிடம் கடன்வாங்கும் நாட்டை நிர்பந்திக்கும்.

இவ்வாறான நிலையில், சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டபோது அக்கடன்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை சீன நிறுவனங்களுக்கே வழங்க வேண்டியிருந்தது.

2010 முதல், 2016 வரையான காலப்பகுதியில் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களில் 53%மானவை போட்டிக் கேள்விமனு மூலம் முன்னெடுக்கப்படாமல், அமைச்சரவையின் ஒப்புதலுடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.

1971 முதல் 2005 வரையான காலப் பகுதியில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட மொத்தக் கடன் பெறுமதி 362 மில்லியன் அமெரிக்க டொலர்.

2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் மட்டும் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கடன்தொகை 1,964 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை.

இந்நிலையில், 2010 முதல் 2016 வரையான காலப்பகுதியில் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கடன்தொகை 5,895 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை.

அத்துடன் இக்காலப்பகுதியில் இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலிருந்ததுடன், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கடன்தொகையில் சீனாவின் பங்கு 37 சதவீதம்.

வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் படி, 2005 முதல் 2010 வரையான காலப் பகுதியில் போட்டித் தன்மையின்றி சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கடன் தொகை 1,558 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை.

பாரம்பரியமாக இருதரப்பு மற்றும் பலதரப்பு நிதி மூலங்களிடமிருந்து சலுகை அடிப்படையில் கிடைக்கும் நிதியுதவிகளை மட்டுப்படுத்தி, தான் விரும்பும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், சீனா போன்ற நாடுகளிடமிருந்து  கிடைக்கக்கூடிய ஏற்றுமதி கடன்களைப் பெறுவதற்கான அணுகலை இலகுபடுத்துவதற்கும், விண்ணப்ப கோரலுக்கு (Bidding) அப்பால் சென்று திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடனும் ஒரு சிறப்புப் பொறிமுறையொன்றை 2010 இல், அரசாங்கம் உருவாக்கியது. (Standing Cabinet Appointed Review Committee (SCARC) என்ற இக் குழுவினால் போட்டித்தன்மையின்றி பிரேரிக்கப்பட்ட (Unsolicited Proposals) முன்மொழிவுத் திட்டங்கள் அமைச்சரவையின்  அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டன. இக்கட்டமைப்பில் காணப்பட்ட குறைபாடுகள், தவறான நிதி முகாமைத்துவம் மற்றும் ஊழலுக்கு வழிவகுத்தன.

இப்பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட முன்னரும், விண்ணப்பம் கோரப்படாத முன்மொழிவுகளூடாக அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சரவையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டன.

உதாரணத்திற்கு, விண்ணப்பம் கோரப்படாத முன்மொழிவூடாக அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டு, போதிய அனுபவமும் நிபுணத்துவமும் இல்லாத சீன மெஷினரி இன்ஜினியரிங் கோப்பரேஷன் (CMEC) எனும் நிறுவனத்துக்கு 2013இல் வழங்கப்பட்ட 229.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கம்பஹா, அத்தனகல, மினுவன்கொட ஒன்றிணைந்த நீர் வளங்கள் திட்டம் (GAMWSS) பல குறைபாடுகளுடன் இன்று வரை பூரணப்படுத்தப்படவில்லை. அதற்கான செலவு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது.

பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இவ்வாறான செலவினங்கள் பொருளாதாரச்சுமையை மென்மேலும் அதிகரிப்பதாகவே அமையும். வெளிப்படைத் தன்மையுடன், ஊழலற்ற, சிறப்பான திட்டமிடலுடனும் சிறந்த முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் திட்டங்களே இலங்கைக்கு நன்மை பயக்கும்.

முழுமையான அறிக்கையை பார்வையிட: