மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவோம்
N.M.நௌஸாத்
உளவள ஆலோசகர்
மனித இனம் படைக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போது நாகரீகமுள்ள சமூகமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சியானது அறிவிலும், உடலியல் அமைப்பிலும் ஏற்பட்டுவருகின்றது.
இதற்கு காரணம் மற்றய உயிரினங்களில் காணப்படாத பகுத்தறிவு மனிதனிடம் உள்ளது. எது நல்லது எது கெட்டது என்று பகுப்பாய்ந்து, தீய செயல்களிலிருந்து விலகி அதிக நல்ல செயலின் பக்கம் சென்றிட உதவுகிறது.
இவ்வாறு சிந்திக்கும் சக்தி கொண்ட மனிதன் அவனது பகுத்தறிவு தன்மையின் குறைவு காரணமாக மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்தி குடும்ப சமூக உறவுகளை இழந்து நோயாளியாக மாறி மரணிக்கும் நிலை ஏற்படுகிறது.
மனிதனின் வளர்ச்சிக்கட்டத்தில் கட்டிளமைப்பருவம் பல நல்ல தீய பழக்கங்களை கற்றுக் கொள்ளும் காலமாகும் அதிகமான இளம்பருவத்தினர் தங்கள்வாழ்வில் நண்பர்களின் தூண்டுதல் காரணமாக பரீட்சார்த்த முயற்சியினால் மதுப் பழக்கத்தினை ஆரம்பிக்கின்றார்கள்.
இப்பழக்கமானது காலப்போக்கில் தொடரான ஓர் செயலாக மாறிவிடுகிறது. இவர்களின் வாழ்க்கையில் சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வதற்காக மதுசாரத்தை பாவிக்கின்ற நிலை உருவாகி அது பிரச்சினையாக மாறுவதனால் அவருக்கு உடல், உள தேவையாக மதுப் பாவனை மாறுகின்றது.
இது அவர்களை அடிமையாதல் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இவர்களுக்கு மதுபானம் கிடைக்காதபோது உடல் நோய்க்குள்ளான ஒருவரைப்போன்று ஆகிவிடுகின்றார்கள்
ஒருவரின் குடிப்பழக்கத்தின் காரணமாக குடும்பத்திலுள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். சில குடும்ப உறவினர்கள் இந்த நிலைக்கு நான்தான் காரணம் என தம்மையே குறைகூறிக் கொள்வார்கள்.
பொருளாதாரப் பிரச்சினைகள், ஆண்மைக்குறைவு, வீட்டுவன்முறை, வண்புணர்ச்சி போன்ற காரணங்களினால் கணவன் மனைவிக்கிடையே உறவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் குடும்பஉறவினர்கள் மனச்சோர்வு நிலைக்குச் செல்கின்றார்கள்.
இவ்வாறான மதுநோய்க்குள்ளானவர்களுக்கு சிகிக்சை அளிக்காவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிலிருந்து விடுபடமுடியாத நிலைக்கு வந்துவிடுவார்கள்;. இவ்வாறானவர்களைக் குணப்படுத்துவதற்கு 3 படிநிலை சிகிச்சை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இதற்காக வைத்தியர்கள், உளவள ஆலோசகர்களின் வழிகாட்டல்கள் அவசியமாகும் மேலும் குடும்பத்திலுள்ளவர்களும் இப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உதவியும் ஊக்கமும் வழங்குதல் வேண்டும்.
படிநிலை - 01
முதலில் மதுப்பழக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினையை ஏற்றுக் கொள்ளச் செய்தல் வேண்டும்.
படிநிலை - 02
இதனூடாக மது அருந்துவதை நிறுத்துதல் அல்லது குறைக்கச் செய்ய வேண்டும்
படிநிலை - 03
பின்னர் இவரை தொடர்ந்து குடிக்காது இருக்கச் செய்தல் வேண்டும்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாவரின் இலக்கு அப்பழக்கத்தை முற்றாக நிறுத்தி அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் படியாக கட்டுப்பாடான மதுப்பழக்கத்தினை செயற்படுத்த முடியும்.
இதனை வெற்றிகொள்ளும் போது முழுமையாக அப்பழக்கத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கியவாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். கட்டுப்பாடான மதுப்பழக்கத்தை கடைப்பிடிப்பதற்கு பின்வரும் விடயங்கள் வாழ்வில் செயற்படுத்துவது சிறந்ததாகும்.
- ஒவ்வொரு நாளும் மது அருந்தும் அளவை ஒரு தாளில் பதிவு செய்துகொள்ளுதல்
- ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் மது அருந்தாதிருத்தல்
- மதுபானத்திற்குப் பதிலாக மதுசாரம் இல்லாத பானங்களை அருந்துதல்.
- மதுபானத்தை நீருடன் அல்லது சோடாவுடன் கலந்து அருந்துதல்
- பகலில் மது அருந்தவதை முற்றாக நிறுத்துதல்
- மதுக் கடைகள் மற்றும் விடுதிகளில் நண்பர்களுடன் கழிக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுதல்.
இவ்வாறான செயற்பாடுகளை வாழ்வில் பழக்கமாக கொண்டுவரும்போது காலப்போக்கில் மதுப்பாவனையிலிருந்து முற்றாக விலகியிருக்க முடியும். மதுப் பாவனைக்கு அடிமையான ஒருவர் அப்பழக்கத்தை திடீரென விடும்போது கைகால்களில் நடுக்கம், தூக்கம் குறைதல், குமட்டல் நிலை, மனப் பதட்டம், எரிச்சல் தன்மை, ஒவ்வாமை போன்ற அறிகுறிகள் 24 மணித்தியாலங்களில் தோன்றத் தொடங்கும்.
இது 4 - 10 நாட்கள் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறான நிலைமையை வெற்றி கொள்வதற்கான மருத்துவ உதவி உடன் வழங்குதல் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்காக மீண்டும் மதுப்பழக்கத்திற்கு செல்லவேண்டிய நிலை தோன்றும்.
எனவே, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவரை அவரது பிரச்சினை என்று பாராது, அது ஒரு சமூகப்பிரச்சினையாக பார்த்தல் வேண்டும். இதிலிருந்து இவர்களை விடுபடச் செய்வதற்கு சமயத்தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் தொடர்ச்சியான வழிகாட்டல்களை மேற்கொண்டு மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியான குடும்ப அலகுகளையும், ஆரோக்கியமான சமூகத்தையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)