தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க சம்பள நிர்ணய சபை தீர்மானம்
பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா என்ற நாளாந்த சம்பளத்தினை வழங்க சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளது என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இந்த தீர்மானம் இன்று (08) திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும், வரவு – செலவுத் திட்ட சலுக்கை கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்குவதற்கான யோசனையினை தொழில் ஆணையாளர் சம்பள நிர்ணய சபையில் முன்வைத்துள்ளார்.
இதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் இது தொடர்பில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த யோசனைக்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைக்கப் பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த தீர்மானம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்னும் ஒரு வார காலப் பகுதிக்குள் வெளியிடவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், துணைத் தலைவரும் பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் பிரதமரை விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)