எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவு: ஏறக்குறைய 3 ஆண்டுகளாகியும் தொடரும் அதன் விளைவுகள்
றிப்தி அலி
அன்று 2021.05.19ஆம் திகதி சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட EOS RO எனும் தனியார் கம்பனிக்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பு துறைமுகத்தின் வெளி துறைமுகப் பகுதிக்குள் (துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கிலோ மீற்றர்) நுழைந்து சிறிது நேரத்திலேயே பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இக்கப்பலில் உரம் மற்றும் வெடிபொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடிய 25 தொன் நைத்திரிக்கு அமிலம், ஏனைய இரசாயனப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், குறை அடர்த்தி கொண்ட பாலி எத்திலீன் (LDPE) மற்றும் பிளாஸ்டிக் பிளேட் அடங்கிய பொருட்களைக் கொண்ட 1,486 கொள்கலன்களை ஏற்றியவாறு பயணித்துள்ளதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட கடுமையான தீ, கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ச்சியாக எட்டு நாட்களுக்கு மேல் நீடித்தது. இதனால், கப்பலில் இருந்த கொள்கலன்கள் அனைத்தும் கடலில் விழுந்ததுடன் கப்பலில் இருந்து பாரியளவில் எண்ணெய் மற்றும் இரசாயனக் கசிவுகளும் ஏற்பட்டன.
இக்கப்பல் மூழ்கியமையானது இலங்கை வரலாற்றில் மட்டுமல்லாது உலக வரலாற்றிலும் மிகவும் பாரதூரமான ஒரு கடல்சார் சுற்றுச்சூழல் அழிவாகக் கருதப்படுகின்றது.
இந்த அனர்த்தத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற விடயத்தில் கடற்றொழில் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன தாமதம் செலுத்துகின்ற விடயம் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் வெளியாகியது.
இன்னும் இழப்பீடில்லை
இந்த அனர்த்தத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்ற பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதனால், கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையினை இன்று வரை பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அனர்த்தத்தினை அடுத்து களுத்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையான மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அரசாங்கம் அறிவித்தது. பல மாதங்கள் நீடித்த இந்த அறிவிப்பினால் மீனவர்களின் வருமானத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
மீனவர்களின் ஆதங்கம்
இந்த அனர்த்தம் காரணமாக எங்களது பிரதேசத்தில் காணப்பட்ட சால, சூட, கும்புலா போன்ற சிறிய வகையான மீன்கள் எல்லாம் அழிவடைந்துள்ளன. இதனால் மிகுந்த சிரமத்துடனேயே தற்போது மீன்பிடித் தொழிலை முன்னெடுத்து வருகின்றோம் என வத்தளை பிரதேசத்தினைச் சேர்ந்த 61 வயதான மீனவர் மொரிஸ் டொனல்ட் தெரிவித்தார்.
"இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை" என அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஜனவரியில் பணவீக்கம் 2.4 சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையிலும் எமக்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நஷ்டஈட்டுத் தொகை எங்களது தேவைகளுக்கு போதுமானதல்ல என மீனவர் மொரிஸ் மேலும் கூறினார்.
இதேவேளை, இப்பேரழிவினை அடுத்து எமது கிராமத்தில் எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கின. இதனால், எமது பிரதேசத்திற்கான சுற்றுல்லாப் பிரயாணிகள் வருகை பெரியளவில் குறைந்ததுடன் மீன் கொள்வனவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக வத்தளை பிரித்திபுர கிராமத்தினைச் சேர்ந்த டிஸ்னா குமாரி கூறுகின்றார்.
இதனால், கடந்த 15 வருடங்களாக இக்கிரமத்தில் மேற்கொண்டு வந்த சுயதொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சில்லறைக் கடை நடத்தி வரும் அவர் குறிப்பிட்டார்.
"முன்னரைப் போல் தற்போது வியாபாரம் எதுவும் நடைபெறுவதில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நஷ்டஈடு வழங்குவதாக தெரிவித்து எங்களது பெயர்கள் பதிவுசெய்யப்பட்ட போதிலும், இதுவரை கொடுப்பனவு எதுவும் வழங்கப்படவில்லை" என டிஸ்னா மேலும் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ள அனைத்து மீனவர்களும் நஷ்டஈடு வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டனர். எனினும், கடல்சார் பேரழிவின் விளைவினால் ஏற்பட்ட அழிவுகளைப் பொறுத்தே அவர்களுக்கான தொகை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
நஷ்டஈட்டுக்கான போராட்டம்
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 15,000 மீனவர்களும் மீன்பிடித் தொழிலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய சுமார் 5,000 பேரும் இழப்பீடுகளைப் பெற முடியாமல், தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான லண்டனினைத் தளமாகக் கொண்டு செயற்படும் London P & I Club எனும் காப்புறுதிக் கம்பனியினால் வழங்கப்பட்ட 3,068 மில்லின் ரூபா நஷ்டஈட்டுத் தொகை போதுமானதாக இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நிதியினை பெறுவதற்காக காப்புறுதி கம்பனியிடம் ஏழு தடவைகள் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவலறியும் கோரிக்கைக்கான பதிலில் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வரையறுக்கப்பட்ட நிதியே இருப்பதனால், 19.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் மாத்திரமே இழப்பீடாக வழங்க முடியும் என குறித்த காப்புறுதி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மேலதிக நஷ்டஈட்டுத் தொகையினை பெறுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனினும், இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி முகவரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அண்மையில் நிராகரித்துள்ளது.
இக்கப்பலின் பேரழிவிற்கு நஷ்டஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் ஒரு வரையரை விதித்துள்ளமையினால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு காப்புறுதி முகவரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
இவ்வாறான நிலையில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாரதூரமான குற்றச்சாட்டொன்றினை கடந்த வருடம் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அதாவது, குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை தடுப்பதற்கு வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 15,117 மீனவர்களுக்கு 266 கோடி 71 இலட்சத்து 66 ஆயிரத்து 956 ரூபா நஷ்டஈடு இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் கடற்றொழில் அமைச்சு தெரிவித்தது.
இதற்கு மேலதிகமாக மேல் மாகாணத்திலுள்ள மீன்பிடியுடன் நேரடித் தொடர்பற்ற 23 பிரிவுகளைச் சேர்ந்த 3,947 பேருக்கு 76 கோடி 98 இலட்சத்து 39 ஆயிரத்து 616 ரூபா இழப்பீடு கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலின் ஊடாக வெளியாகியுள்ளது.
பேரழிவுக் கழிவுகளை அகற்றல்
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைத்து கடற்கரையைப் தூய்மைப்படுத்தும் திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடல்சார் சுழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸின் சுற்றாடல் பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
எவ்வாறாயினும், இக்கப்பலினால் கொண்டுவரப்பட்ட கொள்கலன்கள் இதுவரை முற்றாக அகற்றப்படவில்லை. இதனால் மிகுந்த அச்சத்துடனேயே நாம் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம் என மீனவர் மொரிஸ் டெனால்ட் தெரிவித்தார்.
"கடலில் மூழ்கியுள்ள ஒரு கொள்கலனில் விச வாயு இருப்பதாக எங்களுக்கு செய்திகள் கிடைக்கின்றன. இதன் உண்மைத் தன்மை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. எனினும், குறித்த கொள்கலன் வெடித்தால், மிகுதியாக உள்ள மீனினங்களும் அழிந்துவிடும். இதனால் எங்களது தொழிலும் அழிந்துவிடும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான முன்னாள் சுற்றாடல் இராஜங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும, குறித்த கப்பல் அனர்த்தம் இடம்பெற்ற கடற் பகுதிக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
"இதன்போது கடல் மேற்பரப்பில் எண்ணெய்க் கசிவுகளைக் கண்டேன். கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கூறுவது போன்று கடலில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவுகள் இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை" எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும கடந்த வருடம் ஜூன் மாதத்தில் மேற்கொண்ட கள விஜயத்தின் பிறகு தெரிவித்தார்.
இந்த அனர்த்தம் ஏற்பட்ட கடற் பரப்பில் மீன்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த அனர்த்தத்திற்கு பின்னரான மீன்பிடி தொடர்பில் வருடாந்த மதீப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அலங்கார மீன் ஏற்றுமதியாளர்களினால் முன்னர் போன்று இலகுவில் அலங்கார மீன்களை பிடிப்பது மிகவும் கஷ்டமாகவுள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, இந்த அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, இந்த கப்பலின் 'மெனிபெஸ்ட' (தகவல் களஞ்சியம்) விடயத்தில் பாரிய சர்ச்சை நிலவுகின்றது. எனினும், கப்பலில் காணப்பட்ட பொருட்கள் தொடர்பில் பல ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் அவற்றின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்த முடியாதுள்ளது என வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சூழலியலாளருமான பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தெரிவித்தார்.
இந்தக் கப்பலில் காணப்பட்ட கொள்கலன்களில் உள்ள விடயங்களில் இன்று வரை தெளிவில்லாமல் உள்ளது. இதேவேளை, தீயினை ஏற்படுத்தக்கூடிய கொமிக்கலும் இந்த கப்பலில் காணப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
"இந்த அனர்த்ததினால் குறுகிய காலத்தை வீட நீண்ட கால பிரச்சினையே அதிகம் காணப்படுகின்றது. உயிரிழந்த உயிரினங்களை விட, தற்போது வாழ்கின்ற உயிரினங்களினாலேயே அதிக பாதிப்புள்ளது. குறித்த உயிரினங்களின் உடலில் இந்த நஞ்சுப் பொருட்கள் சென்றுள்ளன" என பேராசிரியர் மேலும் கூறினார்.
பதில்களை விட கேள்விகள் அதிகம்
இவ்வாறான சூழ்நிலையில், இந்த அனர்தத்தினால் சூழிலியல் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கலாநிதி அஜந்தா பெரேரா, காலநிலை நீதிக்கான மையம் மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா ஆகியவற்றினால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த அனர்த்தம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில் அமைச்சரினாலும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினாலும் இரு வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு அதன் இறுதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை காலநிலை நீதிக்கான மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இக்கப்பல் அனர்த்தம் தொடர்பிலான விசாரணைகளை பாராளுமன்றத்தின் இரண்டு குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தலைமையில் சுற்றாடல் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவும், அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இதனை மேற்கொண்டு வருகின்றன.
இதில் பாராளுமன்ற மேற்பார்வைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அத்திணைக்களம் இதுவரை ஆஜராகவில்லை. எனினும், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகள், முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் மற்றும் அதன் எதிர்காலத் தேவை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் வினவியிருந்தபோதும், இது தொடர்பில் தமக்கு எவ்விதமான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தபோதும் பாதிப்பை மதிப்பீடு செய்யும் பணியைத் தொடர சர்வதேச, சுயாதீன நிபுணர் குழு நியமிக்கப்பட்டு மேலதிக பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சிடமிருந்து தமக்குத் தகவல் வழங்கப்பட்டிருப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவில் அண்மையில் தெரிவித்திருந்தது.
இதன் விளைவாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் உறுதியான முடிவொன்று இல்லையென்றும் அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வரும் பணிகளை தமது நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருப்பதும் பிரச்சினையாக உள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"இவ்வாறு பல குழுக்கள் நியமிக்கப்பட்டும், நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டும் நேர வீணடிப்பு இடம்பெறுகின்றதே தவிர சூற்றுச்சூழல் பாதிப்பிற்கோ, மீனவர்கள் பாதிக்கப்பட்டதற்கோ இதுவரை எந்தத் தீர்வுமில்லை. ஆனால் பொன்னான நேரங்கள் மாத்திரமே வீணடிக்கப்படுகின்றது" என சூற்றுச்சூழல் ஆர்வளரொருவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, இந்த அனர்த்தம் தொடர்பில் நீண்ட கால அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்காது, எதிர்காலத்தில் இது போன்ற பேரழிவுகள் இடம்பெறாதிருக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தெரிவித்தார்
எவ்வாறாயினும், பூர்த்தி செய்யப்பட்ட அல்லது பூர்த்தி செய்யப்படாமல் செயல்பாட்டிலுள்ள இதனுடன் தொடர்புடைய அனைத்து அறிக்கைகளையும் பொதுமக்கள் அணுக முடியாதுள்ளது.
மாறாக, இந்த பேரழிவினால் ஒரு சிறிய நாடு, பெரியதொரு நிறுவனத்துடன் சண்டையிட நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இதன் செயற்பாட்டில் சிறியளவிலாவது வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். இதற்காக பேரழிவு இடம்பெற்று மூன்று ஆண்டுகள் எடுப்பது என்பது அசாதாரனமான நிலையாகும்.
இந்த கட்டுரை இன்டர்நியூஸின் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க்கின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)