'நாளை உன்னை அழைத்துச் செல்வேன் என கனவில் வந்து கணவர் கூறினார்'
றிப்தி அலி
இலங்கை வாழ் முஸ்லிம்களினால் மறக்க முடியாதா ஆண்டாக 2019ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகிவிட்டது. சில முஸ்லிம் பெயர் தாங்கிய நபர்களினால் நாட்டின் சில பிரதேசங்கங்களில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குலும் அதன் பின்னரான விளைவுகளுமே இதற்கான காரணமாகும்.
சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டேல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலினால் 259 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பல நூற்றாண்டு கால வரலாற்றினைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீதான தப்பெண்ணமொன்று ஏனைய சமூகத்தினர் மாத்தியில் ஏற்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த சம்பவத்தினை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை இன்று வரை அனுபவித்து வருகின்றனர்.
அதில் ஒன்று தான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இடம்பெற்று சில வாரங்களில் வட மேல் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலாகும்.
அதாவது, குறித்த மாகாணத்திலுள்ள புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள், ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமையாகும். இதனால் பல பள்ளிவாசல்கள், நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் பாரியளவில் சேதமாக்கப்பட்டன.
நாட்டின் தலைநகரான கொழும்பிலிருந்து 60 கிலோ கிலோ மீற்றர் தூரத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தின் கொட்டரமுல்ல கிராத்தினைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பௌசுல் அமீன் என்பவர் இந்த கலவரத்தின் போது இனவாதிகளின் வால் வெட்டுக்குள்ளாகி மரணமானார்.
"தனது சகோதரர் சிங்கள குண்டர்களினால் அவருடைய வீட்டுக்கு முன்பாக வைத்து கூரிய ஆயுதங்களில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக" அவருடைய உடன் பிறந்த சகோதரரான முகம்மத் நஜீம், பி.பி.சி செய்தி சேவைக்கு அச்சமயத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தின் போது பௌசுல் அமீனின் மர ஆலை மற்றும் சிறிய ரக லொறியொன்றும் குண்டர்களினால் பகுதியளவில் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எனது சகோதரர் கொல்லப்பட்டதை அவருடைய மனைவியும், பிள்ளைகளும் பார்த்துக்கொண்டிருந்தாக" முகம்மத் நஜீம் மேலும் தெரிவித்தார்.
இந்த படுகொலை மேற்கொண்டார்கள் என்ற குற்;றச்சாட்டிக் கீழ் கைது செய்யப்பட்ட நால்வர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் மாரவில நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், "கொட்டராமுல்லை பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இனவாதத் தாக்குதலில் மரணமடைந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மர்ஹும் பௌசுல் அமீனின் மனைவியான பாத்திமா ஜிப்ரியா உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்" எனும் செய்தி கடந்த மே 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் வட்ஸ்அபின் ஊடாக நாடெங்கு பரவியது.
இந்த தகவலினை அப்பிரதேசத்தினை சேர்ந்த சமூக செயற்பட்டாளரான ஏ.எஸ்.எம். றிழ்வான் உறுதிப்படுத்தினார். அம்பாறை மாவட்டத்தின் இறக்காம் பிரதேசத்தினைச் சேர்ந்த பாத்திமா ஜிப்ரியா கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் கொட்டரமுல்லையினைச் சேர்ந்த பௌசுல் அமீனினை திருமணம் செய்துகொண்டார்.
பௌசுல் அமீன், குவைத்தில் தொழில் செய்த காலப் பகுதியில் தன்னுடன் கடமையாற்றிய நண்பரொருவரின் ஊடாகவே பாத்திமா ஜிப்ரியாவினை திருமணம் செய்துகொண்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு 18, 17, 8 ஆகிய வயதுகளில் மூன்று ஆண் குழந்தைகளும், 11 வயதில் பெண் குழந்தையொன்றும் உள்ளனர். இஸ்லாமிய கலண்டரின் படி பௌசுல் அமீன் கொல்லப்பட்ட தினத்திலேயே பாத்திமா ஜிப்ரியா காலமானார் என்பது அவர்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பின் வலிமையை நமக்குச் சொல்லி நிற்கிறது.
அதாவது கடந்த வருடம் பௌசுல் அமீன் கொல்லப்பட்ட மே 13ஆம் திகதி புனித ரமழான் மாதத்தின் 7ஆம் நாளாகும். அது போன்று ஜிப்ரியா காலமான மே 1ஆம் திகதியும் புனித ரமழான் மாதத்தின் 7ஆம் நாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
"தனது கணவர் கொலை செய்யப்பட்டதை பாத்திமா ஜிப்ரியா நேரடியாக பார்த்தமையினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஏற்பட்டதாக" அவருடைய அயல் வீட்டில் வசிக்கும் திருமதி றிழ்வான் தெரிவித்தார்.
"பௌசுல் அமீன் கொல்லப்பட்டு சுமார் ஆறு மாதங்களின் பின்னர் ஜிப்ரியாவுக்கு வயிற்று வலியொன்று ஏற்பட்டு வைத்தியரிடம் சென்ற போது வயிற்றில் கட்டியொன்றுள்ளமை கண்டறியப்பட்டது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குறித்த கட்டி தற்போது புற்று நோயாக மாறியுள்ளது. ஆனாலும், இதனை குணப்படுத்த இவருக்கு எந்தவித மருந்துகளும் செய்ய முடியாது என வைத்தியர் உறவினர்களிடம் தெரிவித்திருந்தனர்.
இதனால் குறித்த நோய்க்கு சிகிச்சை பெற இவர் மறுத்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டிலுடன் காலத்தை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் மரணிக்கும் வரை இவர் பிள்ளைகளுடனும் உறவினருடனும் நன்றாகவே உரையாடிக் கொண்டிருந்தார்" என்றும் அயல் வீட்டினர் குறிப்பிட்டனர்.
இவர் மரணமாவத்தற்கு ஒரு தினத்திற்கு முன்னர் இவருடைய கணவர் பௌசுல் அமீன் கனவில் தோன்றி, இந்த நோய்க்கு மருத்து எடுக்கத் தேவையில்லை என்றும் நாளை நான் வந்து உங்களை அழைத்துச் செல்வேன் என கூறியதாகவும் பாத்திமா ஜிப்ரியா உறவினர்களுடன் கூறியுள்ளமை இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
ஒரு வருட காலத்தினுள் தந்தையையும், தாயையும் பறிகொடுத்து நிற்கும் நான்கு பிள்ளைகளும் இன்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த குழந்தைகளை தத்தெடுப்பதற்கான கோரிக்கை நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் பலரும் முன்வைத்துள்ளனர்.
எனினும் இதற்கு தாம் சம்மதிக்கவில்லை என மர்ஹும் பௌசுல் அமீனின் சகோதரரான முகம்மத் நஜீம் தெரிவித்தார்.
"இந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக அவர்களுடைய தாயின் தாய், தந்தையின் சகோதர, சகோதரிகள் எனப் பலர் உள்ளனர்' என அவர் குறிப்பிட்டார்.
"தத்தெடுப்பதற்கான கோரிக்கை முன்வைத்தவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டால், கடந்த பல வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்த இந்த குழந்தைகள பிரியக் கூடிய சூழலுள்ளது. இதனால் சகோதர பாசம் இல்லாமல் போகும்" என அவர் கூறினார்.
"இவற்றினை கவனத்திற்கொண்டு எமது குடும்பத்தினரும், பிரதேசத்தினரும் இந்த குழந்தைகளை தங்களின் குழந்தைகள் போன்று பராமரிக்க முன்வந்துள்ளனர்" என முகம்மத் நஜீம் மேலும் தெரிவித்தார்.
தற்போது இந்த குழந்தைகளை பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலமொன்றினை உருவாக்குவதற்காகவும் வேண்டி கும்பத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து நிதியமொன்றினை உருவாக்கியுள்ளனர்.
'பௌசுல் அமீன் குடும்பத்துக்கான நிதியம்' எனும் இந்த அமைப்பு பாத்திமா ஜிப்ரியாவின் மறைவினை அடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு பேர் உறுப்பினர்களாக கொண்டந்த இந்த நிதியத்தில் பௌசுல் அமீனின் சகோதரர்கள் மூவர், கொட்டரமுல்ல பள்ளிவாசல் தலைவர், நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினரான சமூக செயற்பட்டாளர் ஏ.எல்.எம்.றிழ்வான் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் மூவரும் உள்ளனர்.
இந்த நிதியத்தினால் அமானா வங்கியின் நீர்கொழும்பு கிளையில் இணைப்பு வங்கிக் கணக்கொன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்புதாரிகளாக பௌசுல் அமீனின் உடன் பிறவா சகோதரரான நாத்தான்டிய நேஹா பெஷன் உரிமையாளர் மஸாஹிம் ஹாஜியார் மற்றும் பிரதேச முக்கியஸ்தரான நாத்தான்டிய ரூபில் ஜுவலரி உரிமையாளர் பாரிஸ் ஹாஜியார் ஆகியோர் செயற்படுகின்றனர்.
"'பௌசுல் அமீனின் மறைவினை அடுத்து பல்வேறு தரப்பினர் அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்தனர். எனினும் இந்த உதவிகள் வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படவில்லை. இதனாலேயே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது" என நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினரான சமூக செயற்பட்டாளர் ஏ.எல்.எம். றிழ்வான் தெரிவித்தார்.
"மர்ஹும் பௌசுல் அமீனின் பிள்ளைகளுக்கு உதவ விரும்புகின்றனவர்கள் இந்த நிதியத்தின் ஊடாக உதவ முடியும் அல்லது அமானா வங்கியின் நீர்கொழும்பு கிளையிலுள்ள 010 – 0415551 – 001 எனும் இணைப்பு வங்கிக் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்ய முடியும்" என அவர் குறிப்பிட்டார்.
"இந்த நிதியத்திற்கு கிடைக்கும் அனைத்து நிதியுதவிகளும் பௌசுல் அமீனின் பிள்ளைகளின் நலன்களிற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும். அத்துடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலமொன்றினை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எமது நிதியத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது" என றிழ்வான் ஹாஜியார் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பௌசுல் அமீன் குடும்பத்துக்கான நிதியம் எமது பிரதேச பள்ளிவாசலின் அனுமதியுடனே உருவாக்கப்பட்டுள்ளது என வங்கிக் கணக்கின் பொறுப்புதாரிகளில் ஒருவரான தொழிலதிபர் பாரிஸ் ஹாஜியார் தெரிவித்தார்.
"கிடைக்கும் நிதியுதவிகளை ஒழுங்கான முறையில் திட்டமிடுவதே இந்த நிதியத்தின் பிரதான பணியாகும். அது போன்று, பௌசுல் அமீனின் இறுதிப் பிள்ளை 18 வயதினை அடையும் வரை இந்த நிதியத்தினை முன்னெடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈவிரக்கமற்ற இனவாதிகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலினால் இன்று பெற்றோரை இழந்து அநாதைகளாக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்க உதவுவது முஸ்லிம் சமூகத்திலுள்ள அனைவரதும் கடமையாகும்.
எனவே இந்த குழந்தைகளுக்கு எம்மால் முடிந்த சிறு உதவியினைக் கூட வழங்க முடியும். அவ்வாறு விரும்புபவர்ககள் அமானா வங்கியின் நீர்கொழும்பு கிளையிலுள்ள 010 – 0415551 – 001 எனும் இணைப்பு வங்கிக் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்ய முடியும் அல்லது இந்த நிதியத்தின் உறுப்பினர்களான றிழ்வான் ஹாஜி – 0772201036 மற்றும் பாரிஸ் ஹாஜி – 0777899290 ஆகியோரை குறித்த கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தங்களின் உதவிகளை வழங்க முடியும்.
Comments (0)
Facebook Comments (0)