பலஸ்தீன மக்கள் கொவிட் தடுப்பூசியை பெறும் உரிமையைக் கூட இஸ்ரேல் மறுக்கிறது: தூதுவர்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் பல தசாப்தங்களாக நெருக்கடிகளைச் சந்தித்துவரும் பலஸ்தீன மக்களுக்கு கொவிட் 19 மேலும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் வாழும் பலஸ்தீனர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையைக் கூட இஸ்ரேல் மறுக்கிறது என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி தார் ஹம்தல்லா ஸைத் தெரிவித்தார்.
இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உலக முஸ்லிம்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்குத் தீர்வு காண்பதற்கான எம்மாலியன்ற முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பலஸ்தீன விவகாரம், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் தூதுவர் விடிவெள்ளிக்கு வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.
நேர்காணல் : எம்.பி.எம்.பைறூஸ்
சமீபத்தில் உங்கள் தாய் மண்ணான பலஸ்தீனுக்கு விஜயம் செய்திருந்தீர்கள். அங்கு தற்போது மனித உரிமை நிலைவரங்களில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா?
பலஸ்தீனின் மனித உரிமைகள் நிலைவரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஆக்கிரமிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தே வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்களையும் நிர்மாணித்து வருகிறது. பல குடியிருப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீன மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது கூட முன்னரை விட இப்போது அதிகம் இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலஸ்தீன விவசாயிகளுக்கு கூட விவசாயத்தில் ஈடுபடும் உரிமை மறுக்கப்படுகிறது. ஒலிவ் மரங்கள் உட்பட பெறுமதிமிக்க மரங்களை இஸ்ரேல் அகற்றி வருகிறது.
இஸ்ரேலின் தற்போதைய அரசாங்கம் முழு முழுக்க ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடனேயே செயற்பட்டது. அண்மையில்கூட புதிதிதாக 2800 கட்டிடங்களை ஜெரூசலம் மற்றும் ஏனைய பகுதிகளில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கைச்சாத்திட்டுள்ளது.
காஸாவின் தற்போதைய நிலைமைகள் எவ்வாறுள்ளன?
காஸா இன்றும் உலகில் உள்ள மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலையாகவே உள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் பின்னர்தான் உலகம் முடக்கம் என்றால் என்ன என்பதை உணர்ந்துள்ளது. ஆனால் காஸா 13 வருடங்களாக இஸ்ரேலினால் பலவந்தமாக முடக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அடக்குமுறையினால் காஸாவில் வாழும் மக்களின் வாழ்க்கை சகல வழிகளிலும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் காஸா மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
காஸாவின் எல்லைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான கட்டுப்பாட்டையும் இஸ்ரேலே வைத்திருக்கிறது. இதனால் உரிய காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு அறுவடை செய்ய முடியாத நிலைக்கு எமது விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்று முழு உலகுமே கொவிட் 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏலவே இஸ்ரேலின் ஒடுக்குமுறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனில் கொவிட் தொற்று நிலைமைகள் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன?
பலஸ்தீனில் இதுவரை 180,000 இற்கும் அதிகமானோர் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பலஸ்தீனில் கொவிட் 19 நிலைமைகள் மிகவும் வித்தியாசமானவை.
பலஸ்தீனைவிட இலங்கையில் நிலைவரம் எவ்வளவோ மேல் என்று கூறுவேன். இலங்கையில் இன்று சராசரியாக 500 பேர் வரை தொற்றுக்குள்ளாகிறார்கள். ஆனால் மேற்குக் கரையிலோ அல்லது காஸாவிலோ இந்த எண்ணிக்கை இரு மடங்காகும்.
மேற்குக் கரை மற்றும் காஸாவில் 6 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். சனத்தொகை ரீதியாக இலங்கையுடன் ஒப்பிடுகையில் பலஸ்தீனில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும்.
இதற்குக் காரணம் இஸ்ரேலிய அடக்குமுறையே. நாம் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே பல முயற்சிகளை எடுத்தோம். ஆனால் அதற்கு இஸ்ரேல் தடைகளை ஏற்படுத்தியது.
இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அன்றாடத் தொழில் போன்ற தேவைகளுக்காக பலஸ்தீன பகுதிகளுக்குள் சென்றுவர இஸ்ரேல் அனுமதித்தமையே தொற்றுப் பரவ காரணமாகும். பலஸ்தீனில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இஸ்ரேல்தான் காரணமாகும்.
இஸ்ரேல் இப்போது தமது பிரஜைகளுக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தினமும் 2 இலட்சம் பேருக்கு அங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் என்ற வகையில் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பலஸ்தீன மக்களுக்கும் இந்த தடுப்பூசியை வழங்குவதற்கான கடப்பாட்டை இஸ்ரேல் கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
அத்துடன் இஸ்ரேலிய சிறைகளில் வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 4000 பலஸ்தீனு கைதிகளுக்கு தடுப்பூசி வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் இஸ்ரேல் எடுத்துள்ளது.
இஸ்ரேலிய கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் பலஸ்தீனர்களுக்கு கூட தடுப்பூசி வழங்குவதில் இஸ்ரேல் பாரபட்சம் காட்டுகிறது. அவர்கள்தமக்கு தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கைவிடுத்தும் கூட இஸ்ரேல் அதுபற்றி கரிசனை செலுத்தாமல் உள்ளது.
பொதுவாகவே மருத்துவ தேவைகள் என்று வரும்போது பலஸ்தீன மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கூட இறக்குமதி செய்வதற்கு கூட இஸ்ரேல் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
சில சமயங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ இயந்திரங்களை விடுவிக்காது நீண்ட காலத்திற்கு வேண்டுமென்றே தடுத்து வைப்பதால் அவை உபயோகப்படுத்த முடியாதபடி பழுதடைந்து போகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளன.
அப்படியானால் பலஸ்தீனின் உள்ளே வாழுகின்ற மக்களுக்கும் இதுவரை தடுப்பூசி வழங்கப்படவில்லையா?
இந்த வாரம்தான் ரஷ்யாவிடமிருந்து 10 ஆயிரம் ஸ்புட்னிக் (Sputnik V) தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றன. அவை முதற்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அமெரிக்க தயாரிப்பான 2000 மொடர்னா தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. சுகாதாரத்துறையினருக்கு மேலதிகமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் நாட்பட்ட நோயாளர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதி க்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான வேண்டுகோளையும் பலஸ்தீன அரசாங்கம் முன்வைத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் கொவேக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் 37 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன.
மேலும் அதிகமான தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. 3.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலினால் சிறை வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளின் நிலைமை எவ்வாறுள்ளது?
அவர்களது நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன. பலர் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் உள்ளனர். உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாததன் காரணமாக எமது சகோதரர்கள் பலர் சிறைகளுக்குள்ளேயே மரணித்துள்ளனர்.
ஜனவரி வரை 189 கைதிகள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனினும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொவிட் காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் இஸ்ரேல் பலஸ்தீன கைதிகளின் மருத்துவ நலன்கள் மீது அக்கறை காட்டுவதில்லை.
மத்திய கிழக்கு அரசியல் நிலைவரங்கள் பற்றிப் பேசுவோம். அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் தலைமையில் சில நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டன. முதன் முறையாக இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்த சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது. இது பற்றிய பலஸ்தீனின் நிலைப்பாடு என்ன?
இது உண்மையில் அரபுலகில் நடைபெறும் மிக மோசமான அரசியல் நகர்வாகும். இது எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது பலஸ்தீனர்களின் முதுகில் குத்திய செயற்பாடாகும்.
பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை அரபுலகம் காட்டி வந்த அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அரபுலகு முன்னெடுத்துவந்த சமாதான முயற்சிகளை சீர்குலைத்துள்ளது. இதற்கு அமெரிக்காவில் ஆட்சியிலிருந்த ட்ரம்ப் நிர்வாகமே காரணமாகும்.
அவர்கள் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் மிகக் கடுமையான போக்கையே கடைப்பிடித்தார்கள். முழுக்க முழுக்க இஸ்ரேலிய நலன்களுக்கே ஆதரவளித்தார்கள். ட்ரம்ப் நிர்வாகம் அரபு நாடுகள் மீது பிரயோகித்த அதிக அழுத்தங்களே இவ்வாறான உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்ததாக நாங்கள் கருதுகிறோம்.
எனினும் இந்தச் சில நாடுகளின் தீர்மானத்தை பெரும்பான்மையான அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். எகிப்து, ஜோர்தான் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் இஸ்ரேலை அங்கீகரித்தாலும் அந்நாடுகளில் வாழுகின்ற மக்கள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் எப்போதும் பலஸ்தீன மக்களின் பக்கமே உள்ளார்கள்.
தற்போது அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவான ட்ரம்பின் நிர்வாகம் முடிவுக்கு வந்து பைடன் தலைமையிலான ஆட்சி மலர்ந்துள்ளது. புதிய நிர்வாகத்தில் பலஸ்தீனுக்கு சார்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாமா?
அமெரிக்காவில் இதுவரை ஆட்சியிலிருந்து நிர்வாகங்களிலேயே அதிகம் சியோனிச சார்பாக நடந்து கொண்ட ஒரே நிர்வாகம் ட்ரம்புடையதுதான். ட்ரம்பின் நிர்வாகம் தீவிரப்போக்குடையது. அவர்கள் இஸ்ரேலின் உள்ளே இயங்கிய சியோனிச தீவிரவாத சக்திகளுக்கு உதவினர். சட்டவிரோத குடியேற்றத்திட்டங்களை இஸ்ரேல் சட்டபூர்வமாக்கியதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன்தான்.
பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதே கொள்கைகளையே பின்பற்றும் என நாம் கருதவில்லை. ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும் வெவ்வேறுபட்ட கொள்கைகளையே கடைப்பிடித்து வந்துள்ளன.
ஒபாமா இஸ்ரேலிய குடியேற்றத்திட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். அவரது நிர்வாகம்தான் இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைத்தது. புதிய நிர்வாகம் ஒபாமாவின் அதே கொள்கைகளைப் பின்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பலஸ்தீனில் விரைவில் இரு பிரதான தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அறிகிறோம். அது பற்றி?
ஆம். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை நடாத்துவதற்கான வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இரு தேர்தல்களும் இவ்வருடத்திற்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பலஸ்தீன தேசிய சபையில் (PLC) மறுசீரமைப்புகளும் நடைபெறவுள்ளன.
பலஸ்தீனில் பதாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையிலான உறவு எப்படியுள்ளது?
இரு தரப்புகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த இணக்கப்பாடு ஹமாஸ், பதாஹ் உட்பட சகல அமைப்புகளுக்குமிடையிலுமே எட்டப்பட்டுள்ளன.
அடுத்த சில தினங்களில் இந்த அமைப்புகள் அனைத்தும் கெய்ரோவில் சந்தித்து தேர்தல் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. பலஸ்தீன மக்கள் தாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்க தமக்கிடையே ஒற்றுமை அவசியம் என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்.
இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் பலஸ்தீனுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் எவ்வாறுள்ளன?
இலங்கையுடனான எமது உறவு ஸ்திரமானது. நாம் இலங்கையில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களுடனும் நல்ல உறவையே பேணி வந்துள்ளோம். ஆட்சி மாறினாலும் அந்த உறவில் எந்தவித குறைவும் ஏற்பட்டதாக நாம் கருதவில்லை. பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையிலுள்ள சகல அரசியல் தரப்புகளும் மக்களும் தமது இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? இது குறித்து நீங்கள் ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா?
அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) இது தொடர்பாக ஏற்கனவே பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் இலங்கை முஸ்லிம்களை மாத்திரமன்றி உலகெங்கும் வாழுகின்ற சகல முஸ்லிம்களையும் பாதித்துள்ளது. இது உலகிலுள்ள சகல முஸ்லிம்களினதும் இதயத்தைத் தொட்ட விவகாரமாக மாறியுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் மிக விரைவில் தீர்வொன்றைத் தரும் என நாம் எதிர்பார்க்கிறோம். கொவிட்டினால் பாதிக்கப்பட்ட உலகின் எல்லா நாடுகளிலும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இலங்கையில் மாத்திரம் இவ்வாறு மறுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
தொற்றுக்குள்ளான சடலங்களை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவேதான் இலங்கை அரசாங்கம் தேவையான சகல விதமான பாதுகாப்பு வழிமுறைகயையும் பேணி ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
எமது தரப்பில் நான் பெளத்த மத தலைவர்கள் உட்பட சகல சமூகங்களினதும் பிரதிநிதிகளை இது விடயமாக சந்தித்து பேசினேன். எமது இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாகவும் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு எமது நிலைப்பாடுகளை கொண்டு சென்றுள்ளோம்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
என்னிடம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்கும் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது. உங்களது நாடு மிக அழகானது. இது இயற்கையால் கிடைத்த அழக மட்டுமல்ல. இலங்கையில் வாழுகின்ற மக்கள் மத்தியிலான வேறுபாடுகளும் இலங்கைக்கு அழகு சேர்க்கின்றன.
இந்த வேறுபாட்டை பாதகமாக நோக்காது சாதகமாக பயன்படுத்தி சமூகங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இலங்கை மக்கள் தமக்கிடையே ஒற்றுமைப்பட வேண்டும். பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். தமது இறைமையை பாதுகாக்க வேண்டும்.
சில வெளிச்சக்திகள் தமது நலன்களை அடைந்து கொள்வதற்காக இலங்கை மக்கள் மத்தியில் பிளவுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றன. இதனை இலங்கை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் வெளித் தரப்புகள் தலையிட இலங்கை அனுமதிக்க கூடாது. உள்நாட்டு விவகாரங்கள் உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும். அதற்கான வழிகளை இலங்கை கண்டறிய வேண்டும்.
ஒரு பலஸ்தீனியனாக இலங்கை மக்களுக்கு எமது ஒருமைப்பாட்டை தெரிவிக்கிறோம். இலங்கை மக்கள் தமக்கிடையே நல்லுறவுடன் வாழ வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு.
தீவிரவாதம் எந்தவொரு சமூகத்திற்கும் நன்மையைத் தரப் போவதில்லை. சகல சமூகங்களுக்குள்ளும் இருக்கும் தீவிரப் போக்குகளுக்கு எதிராக போராட இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)