பொதுத் தேர்தலில் அதிக சுயேட்சைக் குழுக்கள் களமிறங்குவதை தடுக்க முடியுமா?
றிப்தி அலி
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் 89ஆவது பிரிவின் 'ஆ' பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 18 வயதினை அடைந்து தேர்தலொன்றில் வாக்களிக்க தகுதி பெறும் நபரொருவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 14ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஓகஸ்ட் 5ஆம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாடளாவிய ரீதியிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 7,452 பேர் போட்டியிட்டனர். இதில் அரசியல் கட்சிகளிலிருந்து 3,652 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கிலிருந்து 3,800 வேட்பாளர்களும் களத்தில் குதித்தனர்.
இதில் அதிகமான 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சை குழுக்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே போட்டியிட்டன. இதற்கமைய மாவட்டத்தில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக மொத்தமாக 540 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அதிகமான சுயேட்சைக் குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் 14 அரசியல் கட்சிகளும் 17 சுயேட்சைக் குழுக்களுக்கும் இந்த மாவட்டத்தில் போட்டியிட்டன.
இந்த இரண்டு தேர்தலிலும் திகமாடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைக் குழுக்களும் 750க்கு குறைவான வாக்குகளையே பெற்றிருந்தன. அத்துடன் கடந்த 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 31 அணிகளில் ஐந்து அணிகள் மாத்திரமே 5,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றன.
இதேபோன்று, இந்த முறை நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 34 அணிகளில் எட்டு அணிகள் மாத்திரமே 5,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றன. ஜனசெத பெரமுன மற்றும் நவ சிஹல உருமய ஆகிய கட்சிகள் திகாமடுல்ல மாவட்டத்தில் இறுதியாக இடம்பெற்ற இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் 50க்கு குறைவான வாக்குகளையே பெற்றன.
"இவ்வாறு பல அணிகள் திகாமடுல்ல மாவட்டத்தில் களமிறங்கியமையினால் வாக்களிப்பின் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியதாக" 65 வயதான பாலமுனை பிரதேசத்தினைச் சேர்ந்த அஹமது இஸ்மாயில் தெரிவித்தார்.
சில அரசியல் கட்சிகளின் சின்னங்களும், சுயேட்சைக் குழுக்களின் சின்னங்களும் ஒரே மாதிரியாக காணப்பட்டமையினால் வாக்களிப்பின் போது தடுமாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதில் பெரும்பாலான சுயேட்சைக் குழுக்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், அந்த சுயேட்சைக் குழுக்களின் சின்னங்கள் வாக்குச்சீட்டில் காணப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, "திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைக் குழுக்களும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஆதரவானதாக காணப்பட்டன" என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரான திலின விக்ரமரத்ன குற்றஞ்சாட்டினார்.
"வாக்கெண்ணும் நிலையங்களில் பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை உள்வாங்குவதற்காகவே அதிகமான சுயேட்சைக் குழுக்கள் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திலும் 60 மேற்பட்டவர்கள் காணப்பட்டனர்" என அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடைபெற்றமையினால் சமூக இடைவெளி பேணுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அதிக சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போட்டியிட்மையினால் சமூக இடைவெளி பேணும் விடயத்தில் பாரிய சவாலினை எதிர்நோக்கினோம்" என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கூறினார்.
"குறிப்பாக அதிகமான அரசாங்க உத்தியோகத்தர்களை இந்த மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுத்த வேண்டியிருந்தது. சுமார் ஏழு மில்லியன் ரூபாவிற்குள் நடத்தி முடிக்க வேண்டிய திகாமடுல்ல மாவட்ட தேர்தல், அதிக சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்;சிகள் போட்டியிட்டமையினால் சுமார் 90 மில்லின் ரூபா பணம் தேவைப்பட்டதாக" அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர், வாக்களிப்பு தினத்தில் வாக்குச்சாவடிகளுக்கு எத்தனை தடவையும் நுழைய முடியும். அது போன்று வாக்கெண்ணும் நிலையத்திற்கு அவர் சார்பான பிரதிநிதிகளை அனுப்ப முடியும்.
இதற்கு மேலதிகமாக தேர்தல் காலத்தில் உயிர் அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற வரப்பிரசாதங்களுக்காவே சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் திகாமடுல்ல மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 33 இன் அனில் சின்னத்தில் போட்டியிட்ட ஏ.ஜே.எம்.சாஜித்.
"தேர்தலில் போட்டியிடுவது என்பது ஜனாநாயக உரிமையாகும். இந்த அடிப்படையிலேயே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டோமே தவிர, அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களாக ஒருபோதும் களமிறங்கவில்லை" என அவர் குறிப்பிட்டார்.
எனது சுயேட்சைக் குழு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்த போதிலும் 54 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
"இவ்வாறு அதிகமான சுயேட்சைக் குழுக்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரதான காரணம் 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளாகும்" என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
"இதனால் 40 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த சட்ட மூலத்தில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்தங்களை மேற்கொள்ளும் சமயத்தில் நிச்சயமாக இதில் மாற்றம் கொண்டுவர முடியும்"என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
"இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் பல்வேறு தடவைகள் அழுத்தம் கொடுத்தும் சட்டத் திருத்தங்கள் நடைபெறவில்லை" என அவர் குற்றஞ்சாட்டினார். சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளரொருவர் 2,000 ரூபா பணத்தினை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். இதன் பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மஞ்சுள கஜநாயக்க வலியுறுத்தினார்.
"தேவையற்ற வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுவதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை தேர்தல் ஆணைக்குழு உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல்களை மாத்திரம் மேற்கொள்ளாது களத்தில் இறங்கிய செயற்பட வேண்டும்" என மஞ்சுள கஜநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
எவ்வாறாயினும், "பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒரு நபரின் உரிமையாகும். அதற்கினங்கவே அவர் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார்" என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்ன ஜீவன் கூல் தெரிவித்தார்.
இதன் காரணமாக சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதை கட்டுப்படுத்துவது மிகவும சிரமமான காரியம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)