சீனாவும் ரஷ்யாவும் ஏகாதிபத்தியவாதிகளா?

சீனாவும் ரஷ்யாவும் ஏகாதிபத்தியவாதிகளா?

சிரான் இளன்பெரும

அமெரிக்க தலைமையிலான ஒருமுனை உலக ஒழுங்கை சீர்குலைக்கும் சமீபத்திய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் ஏகாதிபத்தியம் பற்றிய எண்ணக்கரு மீதான விவாதத்தை புதுப்பித்துள்ளன.

போருக்குப் பிந்தைய காலத்தில், மேற்குலகின் (அதாவது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிலுள்ள அதன் பங்காளர்கள், ஜப்பான் மற்றும் இஸ்ரேல்) கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விவரிப்பதற்கு, உலகெங்கிலும் உள்ள தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தொகுதியில் செயற்பட்ட நாடுகளால் இந்த வார்த்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், "ஏகாதிபத்தியம்" என்ற வார்த்தையின் பயன்படுத்துகை, பனிப்போரின் உச்சக்கட்டத்தின் போது கூட, ஒருதலைப்பட்சமான விடயமாக இருக்கவில்லை. மேற்குலகமும், சில மூன்றாம் உலகத் தலைவர்களும் (இலங்கையை பூர்வீகமாக கொண்ட  ஜோன் கொத்தலாவல போன்றவர்கள்), சோவியத் யூனியன் மற்றும் சீனாவில் இருந்தான புரட்சியின் வருகையை ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவமாக சித்தரிக்க முயன்றனர்.

சீன - சோவியத் பிளவைத் தொடர்ந்து, சீனா தானே சோவியத் யூனியனை "சமூக ஏகாதிபத்தியம்" என்று வர்ணித்தது. இலங்கையில், சிலர் இந்தியாவின் தலையீடுகளை இயல்பில் ஏகாதிபத்தியம் (அல்லது துணை ஏகாதிபத்தியம்) என்று வகைப்படுத்தியுள்ளனர்.

மிக சமீபத்தில், உக்ரேனில் ரஷ்யாவின் தலையீடுகள், அத்துடன் சீனாவின் நிலப்பரப்பு சார்ந்த உரிமை கோரல்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஆகியவை மேற்கத்திய தொழிற்துறை ஊடகங்களால் ஏகாதிபத்தியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆக்கத்தின் குறிக்கோள், அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இந்தக் கூற்றுக்கள் ஏன் பொய்யானவை மற்றும் அமெரிக்கா ஏன் உலகில் ஒரே ஏகாதிபத்திய சக்தியாக உள்ளது (அதன் துணை நட்பு நாடுகளைக் கணக்கில் கொள்ளாமல், பல வழிகளில் தம்மை ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகள் போல பார்க்கத் தொடங்கியுள்ளன. - ஜெர்மனி மிகவும் தெளிவான உதாரணம்).

பெருங்கடல்கள் மற்றும் நட்பு நாடுகளால் சூழப்பட்டிருந்தாலும், அமெரிக்கா உலகின் மிகப்பெரிய இராணுவ பாதீட்டைக் கொண்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு சுமார் 801 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழிக்கிறது.

இது சீனா மற்றும் ரஷ்யா உட்பட அடுத்த ஒன்பது பெரிய செலவழிப்பாளர்களின் ஒருங்கிணைந்த பாதீட்டை விட அதிகமாகும். ரஷ்யா மற்றும் சீனாவிற்கான ஒற்றை இலக்கங்களுடன் ஒப்பிடுகையில், 80 நாடுகளில் 750 தளங்களில் செயற்படும் மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவப் பிரசன்னத்தையும் அமெரிக்கா கொண்டுள்ளது.

இறையாண்மையுள்ள நாடுகளில் அமெரிக்காவின் தலையீடுகள், இராணுவத் தலையீடுகள் முதல் நிதியியல் ரீதியான ஆதரவு சதித்திட்டங்கள் வரை, இதேபோன்று இணையற்றவையென்பதுடன் இங்கு குறிப்பிடுவதற்கு மிக அதிகமானவையாகும், இருப்பினும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஆகியவை சமீபத்திய மற்றும் பேரழிவு தரும் உதாரணங்களாகும்.

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் நிலப்பரப்பு மோதல்கள் மற்றும் சர்ச்சைகளை கொண்டிருந்தபோதிலும், அவை இயல்பில் தற்காப்பு தன்மை கொண்டவை (நேட்டோவின் விரிவாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக உக்ரைனில் ரஷ்யாவின் தலையீடு போன்ற) அல்லது வரலாற்றில் மூழ்கியவை (பிரதான மற்றும் தைவான் அரசாங்கங்கள் இரண்டும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொள்கின்றவிடத்து தைவான் பிரச்சினை போன்றவை).

பொருளாதார ஏகாதிபத்தியத்தின் பிரகாரம், அமெரிக்க டொலர் தனித்த உலகளாவிய இருப்பு நாணயமான நிலையைப் பெறுவதுடன், இது அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி மிக அடிப்படையான நுகர்வுப்பொருளான எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு நாடுகளை இராணுவ ரீதியாக வற்புறுத்தும் திறனால் ஆதரிக்கப்படுகிறது.

நிதிச் சமுதாயத்தில் ஒரேயொரு பணக் கொள்கைதான் முக்கியமானது, அதுதான் அமெரிக்க பெடரல் ரிசர்வின் பணக் கொள்கை என்று ஒரு பழமொழி உண்டு.

உலக இருப்பு நாணயத்தை அச்சிடக்கூடிய உலகின் ஒரே மத்திய வங்கி பெடரல் ரிசர்வாகும். பெடரல் ரிசர்வின் விகிதங்கள் குறையும் போது, டொலர்கள் உலகப் பொருளாதாரத்தை மூழ்கடித்து, சொத்துக்களை உயர்த்துகின்றன.

விகிதங்கள் அதிகரிக்கும் போது, மூலதனம் மீண்டும் Wall Street இற்கு வருவதுடன், இது நாணய நெருக்கடிகள், திவால்நிலைகள் மற்றும் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அமெரிக்க இராணுவமயமாக்கல் என்பது டொலர் மேலாதிக்கத்தின் அரசியல் செயற்திட்டத்தின் ஒரு பகுதி மற்றும் பொதியாகும், அத்துடன் அதன் முக்கிய பயனாளர்கள் அமெரிக்க குடிமக்கள் கூட அல்ல, ஆனால் நிதியியல் உயரடுக்குகளின் சிறுபான்மையினராவார்.

சமீபத்தில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு மேற்கொண்டதைப் போல் உலகளாவிய நிதியியல் அமைப்பின் மீதான அமெரிக்க அதிகாரம் நிதியியல் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான ஒருதலைப்பட்சமான அதிகாரத்தை வழங்குகின்றது.

ரஷ்யாவும் சீனாவும் தங்களுடைய சொந்த நலன்களைக் கொண்டிருப்பதுடன், எந்தவொரு விவேகமான தேசிய அரசும் செய்ய எண்ணுவதைப் போல, தங்கள் பொருளாதார வலிமையை உயர்த்த முயல்கின்றன.

இருப்பினும், வற்புறுத்தல் மற்றும் துப்பாக்கி முனையிலான இராஜதந்திரம் மூலம் அவ்வாறு செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, இரு நாடுகளும் அணிசேரா இயக்கத்தின் வாரிசுகளாகக் கருதப்படும் BRICS மற்றும் SCO போன்ற முன்னணிகளின் மூலமாக கூட்டணிகளை உருவாக்க முயல்கின்றன.

சர்வதேச வர்த்தகம், மாற்றுக் கட்டண முறைமைகள் (MIR மற்றும் CIPS) மற்றும் மாற்று நிதியியல் நிறுவனங்கள் (AIIB மற்றும் NDB) ஆகியவற்றில் தேசிய நாணயங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளும் அழுத்தம் கொடுத்துள்ளன.

அமெரிக்க டொலருக்கு மாற்றாக, புதிய இருப்பு ஆதரவைக் கொண்ட உலகளாவிய இருப்பு நாணயத்தை உருவாக்கும் நோக்கில் BRICS செயல்பட்டு வருவதாக அக்டோபர் மாதம் ஜனாதிபதி புடின் கூறினார்.

இந்த நகர்வுகள் உலகப் பொருளாதார ஒழுங்கை புறநிலையாக ஜனநாயகமயப்படுத்தி பரவலாக்குவதுடன், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு கூட பயனளிக்கின்றது. எனவே இந்த நாடுகளில் உள்ள தனிப்பட்ட தலைவர்கள் அல்லது அரசியல் அமைப்புகள் தொடர்பில் ஒருவர் என்ன நினைத்தாலும் அது விடயத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாகும்.

இந்த நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளாக சித்தரிப்பதற்கான மேற்கத்திய தொழிற்துறை ஊடக நிறுவனங்களின் உந்துதல், உலகளாவிய ஊடக சதுப்பு நிலத்திலும் அறிவு மற்றும் விடய உருவாக்கத்திலும் அவர்கள் அனுபவிக்கும் மேலாதிக்க நிலையின் காரணமாக மட்டுமே சாத்தியமாகும்.

சீனாவும் ரஷ்யாவும் உலக அரங்கில் தங்கள் கதைகளைச் சொல்ல முயற்சித்துள்ளன, ஆனால் அவை அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்க அளவிலான உலகளாவியளவில் பயணிக்கும் ஊடகப் பேரரசுகள் அல்லது சிந்தனைக் குழுக்கள் மற்றும் பரப்புரைக் குழுக்களின் வலையமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை.

அநேகமாக மிக முக்கியமாக, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை மொழியியல் மற்றும் கலாச்சார ரீதியாக அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற உலகளாவிய நடுத்தர வர்க்க பார்வையாளர்களைகொண்டிருக்காமல் இருக்கலாம்.

இலங்கையிலும் அவ்வாறு தான் இருக்கிறது, உள்ளூர் உயரடுக்குகள் மேற்கத்தைய நாடுகளின் பிடியில் உறுதியாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இது உதாரணமாகும் - இதுவே உண்மையான ஏகாதிபத்தியவாதிகள் யார் என்பதற்கு ஒரு சான்றாக இருக்க முடியும்.

ஷிரான் இளன்பெரும ஒரு ஊடகவியலாளரும் அபிவிருத்தி, அரசியல் பொருளாதாரம் மற்றும் பொருளாதார வரலாறு தொடர்பான சுயாதீன ஆய்வாளருமாவார்.

Factum என்பது ஆசியாவை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.