'தனிச் சிகரெட், காப்போத்தல் சாராய விற்பனை தடை செய்யப்பட வேண்டும்'
றிப்தி அலி
புகையிலையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை பாவிப்பதனால் ஏற்படும் நோய்கள் காரணமாக ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் உயிரிழக்கின்றனர்.
அத்தோடு, 'இரண்டாம் நிலை புகைத்தல்' எனப்படும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் வாழ்கின்றமையினால் 600,000 பேர் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் உயிரிழக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், புகையிலையுடன் தொடர்புடைய நோய்கள் காரணமாக வருடாந்தம் 20,000 பேர் இலங்கையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான தரவுகள் கூறுகின்றன. இதன்படி, தினசரி 57 பேர் உயிரிழக்கின்றனர்.
இரண்டு நுகர்வோரில் ஒருவரை கொள்ளும் உற்பத்திப் பொருளாக சிகரெட் காணப்படுகின்றது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது. இதேவேளை, தினமும் சுமார் 208 மில்லியன் ரூபாவினை சிகரெட்டுக்காக இலங்கையர்கள் செலவளிப்பதாக மதுபானம் மற்றும் போதைவஸ்து தகவல் நிலையம் கூறுகிறது.
புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றினை விற்பனை செய்யும் கம்பனிகள் இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் இலகுவில் கவரும் வகையில் பல்வேறு செயற்த்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
எனினும், இதன் பாவனையிலிருந்து பொதுமக்களையும் இளைஞர்களையும் பாதுகாக்கும் நோக்கில் சுகாதார அமைச்சின் சிபாரிசுடன் பல்வேறு செயற்த்திட்டங்களை அரசாங்கம் தொடர்;ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாகவே கடந்த வெள்ளிக்கிழமை (12) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தில் தனிச் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், மதுபானங்களின் விலையும் பல்வேறு வகையில் அதிகரிக்கப்பட்டன.
அது மாத்திரமல்லாம் புகையிலை நோய்த் தொற்றுப் பரவலுக்கு பொறுப்புக் கூறும் வகையில், 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலகின் முதலாவது சுகாதார உடன்படிக்கையான உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு சாசனத்திற்கு (WHO-FCTC) அமைவாக புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றினால் ஏற்படும் பிரச்சினைகளை முதன்முதலாக இனங்கண்ட நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாகும்.
இதேவேளை, மதுபானம் மற்றும் புகையிலை ஆகியவற்றின் பாவனையினை எமது நாட்டில் கட்டுப்படுத்துவதற்கான முன்னோடி அரச நிறுவனமாக 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபை சட்டத்தின் கீழ் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை உருவாக்கப்பட்டது.
மதுபானம் மற்றும் புகையிலை பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றுவதே சுகாதார அமைச்சின் கீழுள்ள இந்த அதிகார சபையின் தூரநோக்கமாகும். எல்லே குணவன்ச தேரர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட 14 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அதிகாரசபையின் தலைவராக தற்போது வைத்தியர் சமதி ராஜபக்ஷ பணியாற்றுகின்றார்.
புகையிலை மற்றும் மதுபானத்தினால் ஏற்படும் தீங்குகள் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வுகளை முன்னெடுத்தல், ஆய்வுகள் மேற்கொள்ளல், கொள்கை வகுப்பினை மேற்கொள்ளல், அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல் போன்ற பல்வேறு செயற்த்திட்டங்களை இந்த அதிகாரசபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பில் அதிகார சபையினால் பொதுமக்கள் மத்தியில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. நேரடி மற்றும் இணையத்தளம் ஆகியவற்றின் ஊடாக கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் ஊடாக தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (12) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
தனிச் சிகரெட் குச்சி மற்றும் காப்போத்தல் சாரயம் ஆகியவற்றின் விற்பனையை உடனடியாக நாட்டில் தடை செய்வதை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்ற தகவல் இந்த ஆய்வில் வெளியாகியுள்ளது. அது மாத்திரமல்லாமல், பாடசாலையிலிருந்து 500 மீற்றர் தூரப் பகுதியில் புகையிலை மற்றும் மதுபான பொருட்கள் விற்பனையினை தடை செய்வதையும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
எவ்வாறாயினும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளில் இருந்து குறைந்தது 100 மீற்றர் தூரத்திலேயே மதுபான விற்பனை நிலையங்கள் காணப்பட வேண்டும் என கடந்த ஒக்டோபர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புகையிலை தொடர்பில் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்ட 1,032 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 62 சதவீதமானோர் ஆண்களும், 38 சதவீதமானோர் பெண்களுமாவார். இதில் 12.9 சதவீதமானோர் புகையிலை பயன்படுத்துபவர்களாவர்.
இதேவேளை, மதுபானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்ட 1,027 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 62 சதவீதமானோர் ஆண்களும் 38 சதவீதமானோர் பெண்களுமாவார். இதில் 23.8 சதவீதமானோர் தற்போது மதுபானம் அருந்தும் அதேவேளை, 36.2 சதவீதமானோர் ஒருபோதும் மதுபானம் அருந்தாதவர்களாவர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற புகைப்பிடிப்பவர்கள் உள்ளிட்ட 94.7 சதவீதமானவர்கள் புகைப்பிடிக்காத மற்றும் மதுபானம் அருந்தாத பொது இடங்களையே எமது நாட்டில் விரும்புகின்றனர். எனினும் வடிவமைக்கப்பட்ட புகைப்பிடிக்கும் பிரதேசங்கள் அல்லது அறைகள் உருவாக்குவது இதற்கு ஒருபோதும் தீர்வாக மாட்டாது என அறிக்கையின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்கள் மற்றும் விற்பனையில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாக்கவே இலங்கையர்கள் விரும்புகின்றமை இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் நாட்டுக்குள் தடை செய்ய வேண்டும் என இந்த ஆய்வில் பங்கேற்ற 79.3 சதவீதமானோரும், அனைத்து வகையான மதுபான பொருட்களையும் நாட்டுக்குள் தடை செய்யுமாறு 69.3 சதவீதமானோரும் குறிப்பிட்டுள்ளனர்
சிகரெட் விற்பனை செய்யப்படும் இடங்கள் பதிவுசெய்வது சிறந்தது என 39.6 சதவீதமானோர் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, புகையிலை மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்த அதிகாரசபையினால் '1948' எனும் தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போதிய விழிப்புணர்வு இதுவரை பொதுமக்களை சென்றடையவில்லை என்பது குறித்த ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 34.2 சதவீதமானோருக்கு மாத்திரமே இந்த தொலைபேசி சேவையினை அறிந்துள்ளனர். இதனால் இந்த தொலைபேசி சேவை தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டியது இந்த அதிகாரசபையின் தலையாய கடமையாக மாறியுள்ளது.
இதேவேளை, மதுபான பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விளம்பரம் மதுபான போத்தல்களில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என இந்த ஆய்வில் கலந்துகொண்ட 80.2 சதவீதமானோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது போன்ற விளம்பரம் ஏற்கனவே சிகரெட் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் டிஜிடல் ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இவ்வாறு பல்வேறு முன்மொழிவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையினை விரைவில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கவுள்ளோம்" என இந்த அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் சமதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
"அத்துடன் இந்த அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்கவுள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கட்டம் கட்டமாக மேற்கொண்டு புகையிலை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதிகார சபையின் சிபாரிசுக்கமையே கடந்த மூன்று வருடங்களின் பின்னர் சிகரெட்டின் விலை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டதாக வைத்தியர் சமதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதன் ஊடாக நாட்டில் புகையிலை மற்றும் மதுபான பாவனைiயினை ஓரளவு குறைக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
Comments (0)
Facebook Comments (0)