ஷிகா வைரஸ்: டெங்குடன் சேர்ந்து பரவும் அபாயம்
டெங்கு நோயைப் பரப்பும் ஈடிஸ் ஈஜிப்டை (Ae.aegypti), ஈடிஸ் அல்போபிக்டஸ் (Ae.albopictus) நுளம்பு இனங்களே ஷிகா வைரஸையையும் பரப்புவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தற்போது ஷிகா வைரஸ் பரம்பல் ஏற்பட்டு அதிகரித்து செல்கின்றது. தமிழ் நாட்டிற்கு எல்லையிலிருக்கும் திருவானந்தபுரம் நகரத்திலும் ஷிகா வைரஸ் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதால் குறித்த வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடிய சூழல் அதிகம் காணப்படுகின்றது.
இலங்கையில் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஈடிஸ் ஈஜிப்டை, ஈடிஸ் அல்போபிக்டஸ் நுளம்பினங்கள் அதிகம் பரவிக்காணப்படுவதனால் இந்தியாவிலிருந்து ஷிகா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நம் நாட்டினுள் பிரவேசித்தால் நமது நாட்டின் எப்பிரதேசத்திலும் ஷிகா வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுகின்றது.
ஷிகா வைரஸை காவிய நிலையில் ஈடிஸ் ஈஜிப்டை நுளம்புகள் (infective mosquitoes)இந்தியாவிலிருந்து விமானம், கப்பல், படகுகள் மூலம் நமது நாட்டிற்குள் நுழையக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுவதனால் விமான நிலையம், துறைமுகம் சார்ந்த பகுதிகளிலும் தலை மன்னார் பிரதேசத்திலும் ஷிகா வைரஸ் பரவுவதற்குறிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.
இந்நோய் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு காய்ச்சல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, சொறி, உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இந்நிலைமை 2 - 7 நாட்களுக்கு தொடரும்.
இந்நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை இல்லாததால் தொற்றுக்குள்ளானவர்கள் ஓய்வு எடுப்பதுடன் அதிகம் நீர் ஆகாரம் உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், நோவு போன்றவற்றிற்கு பொதுவான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதுடன் வைத்தியரை நாடுவதே சிறந்ததாகும்.
கர்ப்பிணித் தாய்மாருக்கு ஷிகா வைரஸ் தொற்றுதல் ஏற்படுமாயின் அது கர்ப்பத்திலுள்ள சிசுவையும் பாதிக்கும். குழந்தையின் நரம்புத் தொகுதி, மூளை போன்றவற்றில் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஷிகா வைரஸினால் பாதிக்கப்பட்ட சிசு பிறக்கும் போது ஒரு சாதாரண தலையின் அளவை விட சிறிய அளவிலான தலையுடனான ஒரு குறைபாடுள்ள குழந்தையாகவே பிறக்கின்றது.
டெங்கு நோயைப் போன்று ஷிகா வைரஸுக்கும் குறிப்பிட்ட மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் இந்நோயைப் பரப்பும் ஈடிஸ் இன நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாமலாக்குவதன் மூலம் மட்டுமே ஷிகா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
குறிப்பாக மூளை, நரம்புத் தொகுதி பாதிப்படைந்த சிசுக்களை பிரசவிப்பதிலிருந்து கர்ப்பினித் தாய்மார்களை பாதுகாக்கலாம். பருவப் பெயர்ச்சி மழை காலங்களில் ஈடிஸ் ஈஜிப்டை இன நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக இருப்பதனால் இக்காலப் பகுதியிலேயே டெங்கு நோயின் பரம்பலும் அதிகமாக காணப்படுகின்றது.
எனவே, டெங்குடன் ஷிகா வைரஸும் சேர்ந்து பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. ஷிகா வைரஸினது பல நோய் அறிகுறிகள் டெங்கு நோயின் அறிகுறிகளை ஒத்ததாக இருப்பதனால் மேற்கூறப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்திசாலைக்கு செல்வது சிறந்ததாகும். விசேடமாக கர்ப்பினித் தாய்மார்கள் தாமதிக்காது வைத்தியசாலையை நாடுவது சிறந்ததாகும்.
நுளம்பினால் காவப்படும் ஷிகா வைரஸ் முதன்முதலாக குரங்குகளில் 1947ஆம் ஆண்டு உகண்டா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மனிதர்களில் 1952 இல் உகண்டாவிலும் தன்சானியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
1960 - 1980 வரையான காலப்பகுதியில் ஆபிரிக்க, அமெரிக்க, ஆசிய மற்றும் பசிபிக் கண்டங்களிலும் 2013, 2015ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரான்ஸ், பிரேஸில் போன்ற நாடுகளிலும் பாரிய ஷிகா வைரஸ் பரம்பல் பதிவாகியுள்ளது.
எமது அண்டை நாடான இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமத்பாத் நகரில் 2016ஃ2017 காலப்பகுதியில் ஷிகா வைரஸ் பரம்பல் பதிவாகியுள்ளதுடன் சென்ற மே மாதம் கேரளா மாநிலத்தில் ஷிகா வைரஸ் பரம்பல் ஆரம்பித்து தொடர்கின்றது.
தமிழ்நாடு மாநிலத்திற்கு எல்லை நகரமான திருவானந்தபுரத்திலும் ஷிகா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதனால் எமது நாட்டிற்குள்ளும் ஷிகா வைரஸ் நுழைவதற்கு நீண்ட காலம் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வைரஸ் தொடர்பில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது இன்றியமையாததொன்றாகும்.
கே.ஏ. ஹமீட்.
சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர்,
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,
கல்முனை.
Comments (0)
Facebook Comments (0)