80 மீற்றர் கொங்றீட் வீதிப் புனரமைப்பிற்கு 10 இலட்சம் ரூபா செலவு
றிப்தி அலி
வீதியொன்றின் 80 மீற்றர் நீளத்திற்கு கொங்றீட் இட 10 இலட்சம் ரூபா செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபை – செங்கலடி எல்லைக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள 6ஆம் கட்டை வீதியின் புனரமைப்பிற்கே இந்தத் தொகை செலவளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 150 மீற்றர் நீளமான இந்த வீதி, ஏறாவூர் பற்று பிரதேச சபை – செங்கலடியினால் கடந்த 2021ஆம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று வரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த இளம் செயற்பட்டாளரான ஆர். விதுர்ஷன், ஏறாவூர் பற்று பிரதேச சபை – செங்கலடிக்கு இந்த வீதி தொடர்பான தகவலறியும் விண்ணப்பமொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்திற்கு குறித்த பிரதேச சபையின் செயலாளரான வீ. பற்குணன் வழங்கிய பதிலிலேயே வீதியின் 80 மீற்றர் நீளத்திற்கு கொங்றீட் இட 10 இலட்சம் ரூபா செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்தது.
மயிலம்பாவெளி பிரதேசத்தினைச் சேர்ந்த சன சமூக நிலையமொன்றினாலேயே இந்த பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.
புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏறாவூர் பற்று பிரதேச சபை – செங்கலடியின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இந்த வீதியினை முழுவதுமாக புனரமைப்புச் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் செயலாளர் பற்குணன் குறிப்பிட்டார்.
பிரதேச சபையினால் குறித்த வீதியினை அபிவிருத்தி செய்ய அனுமதியும் வழங்கப்பட்டிருக்கவில்லை என அவர் கூறினார்.
"எமது சபையின் நிதி வளம் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னுரிமைப்படுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் காலங்களில் இந்த வீதிப் புனரமைப்பினை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது" என பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)