RTI ஆணைக்குழு 'வெளிப்படைத் தன்மைக்கு சிறந்த உதாரணம்: IMF

RTI ஆணைக்குழு 'வெளிப்படைத் தன்மைக்கு சிறந்த உதாரணம்: IMF

தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளையும், விதிகளையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

அது போன்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட சட்டமூலங்கள் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் அதிகாரங்களை கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக தனியுரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய வரைபுச் சட்டங்களில்  சரியான சமநிலை நிரூபிக்கப்படாவிட்டால், வெளிப்படைத் தன்மைக்கான சிறந்த உதாரணம் அதன் செயற்திறனில் இருந்து பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.  

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி அதன் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றினை வெளியிட்டது. குறித்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் இடம்பெறும் ஊழல் பாதிப்புகள் மற்றும் நிர்வாக பலவீனங்கள் மீதும் சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

பொதுமக்களின் தகவல் பெறும் நடவடிக்கையினை தகவலறியும் ஆணைக்குழு வினைத்திறனாக நிரூபித்துள்ளது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவல்களை பாராளுமன்றம் வெளியிட வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு ஆணைக்குழு வழங்கிய உத்தரவினையும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டின் போது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் கட்டளையினை மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மற்றும் சிறுபான்மை குழுக்கள் உட்பட ஊழல் மற்றும் அரச அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படுகின்ற தகவல் கோரிக்கைகள் வருவதால் ஊழல் எதிர்ப்பு முயற்சிக்கு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பங்கு மிக முக்கியமானதாகும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையை நிறைவேற்றுவதற்கான திறனை மேம்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் "சிறந்த அரச நிர்வாகத்தினை உள்ளடக்குவதற்கு" இன்றியமையாததொன்றாகும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்கள் தொண்டர் அடிப்படையில் தங்களாவே முன்வந்து தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஊடக அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட அனைத்து செயற்திட்டங்களினதும் விலைமனுக் கோரல்களை வெளிப்படுத்துவதற்காக தகவலறியும் ஆணைக்குழுவின் மேற்பர்வையுடன் வெளிப்படைத் தன்மையான இணையத்தளமொன்று எதிர்வரும் 2024 மார்ச் மாத்திற்குள் நிதி அமைச்சினால் உருவாக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் 18  முன்னுரிமைப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் சில விதிகளில் தகவல் வெளிப்படுத்துபவர்கள் ஆபத்துள்ளது. இதனால் தகவல்களை வெளியிடுபவர்களை பாதுகாப்பு தேவையான சரியான நடைமுறை விதிகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உருவாக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.