துறைமுகத்தில் 3 மாதங்களாக தேங்கிக் கிடந்த குர்ஆன் பிரதிகள் விடுவிப்பு

 துறைமுகத்தில் 3 மாதங்களாக தேங்கிக் கிடந்த குர்ஆன் பிரதிகள் விடுவிப்பு

றிப்தி அலி

கொழும்பு துறைமுகத்தில் கடந்த மூன்று மாதங்களாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழியிலான புனித அல்குர்ஆன்கள், சுங்கத் திணைக்களத்தினால் கடந்த செவ்வாய்;க்கிழமை (10) விடுவிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தின் பெயருக்கு மக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் இந்த குர்ஆன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதனை விடுவிப்பதற்கான அனுமதியினை திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு,  கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சும் இக்குர்ஆன்களை விடுவிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருந்தது.

எனினும், இக்குர்ஆன்களை வெளியில் எடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் நாட்டுக்கு அனுப்பியவரினால் எடுக்கப்படாமையினால், அவை களஞ்சியசாலையில் தேங்கிக் கிடந்தன. இவ்வாறான நிலையில் குறித்த அரபு மொழியிலான புனித அல்குர்ஆன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் முன்னெடுத்திருந்தார்.

சுங்கத் திணைத்தினைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த அரபு மொழியிலான புனித அல்குர்ஆன்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு செலுத்த வேண்டியிருந்த சுமார் 35 இலட்சம் ரூபாவும் விலக்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வரியாக செலுத்த வேண்டிய சுமார் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் வேண்டுகோளிற்கமைய சில தனந்தவர்களினால் செலுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியிலான புனித அல்குர்ஆன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்த அனைத்து தரப்பினர்களுக்கும் முஸ்லிம் சமூகம் நன்றி செலுத்தியுள்ளது.

இதேவேளை, அரபு மொழியிலான இந்த புனித அல்குர்ஆன்களுடன் அனுப்பப்பட்ட 26 ஆயிரம் தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்புகளுடனான புனித அல்குர்ஆன்கள் மற்றும் மொழிபெயர்ப்புக்களுடனான இஸ்லாமிய நூல்கள் இன்னும் களஞ்சியசாலையில் தேங்கிக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை விடுவிப்பதற்கான அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவினால் இதுவரை வழங்கப்படவில்லை.