நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக ஆறுமுகம் தொண்டமான் செயற்பட்டார்: பிரதமர்
அமரர் ஆறுமுகம் தொண்டமான் - நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி, பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பாராளுமன்றத்தில் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக ஆறுமுகம் தொண்டமான், இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் குறித்து கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அனுதாப உரை வருமாறு,
"சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகம் தொண்டமானை நினைவுகூறும் போது சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.
அதனால் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார். 1964ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பாட்டனாரின் வழியில் சென்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினூடாக தீவிர அரசியலுக்குள் நுழைந்தார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் 26 வருட காலங்கள் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாக்கியத்தை கொண்டிருந்தார்.
1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அக்கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்ட ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக அவர்களின் சம்பள உயர்விற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவராவார்.
குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை.
முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார்.
சம்பளத்திற்கான போராட்டங்களின் போது மட்டுமன்றி தோட்ட வீடமைப்பு, சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளல், வைத்தியசாலை, நெடுஞ்சாலை, மின்சாரம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகமொன்றை பெற்றுக் கொள்வது வரை பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு மாறுபட்ட அரசியல் நோக்கை அவர் கொண்டிருந்தார்.
அதேபோன்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார். இன, மத, சாதி பாகுபாடின்றி செயற்பட்ட அவர் எப்போதும் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மதிப்பளித்தார்.
பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எம்மை கைவிடாத அவர் அரசியலில் நம்பிக்கைக்குரிய நண்பராவார். இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவருக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளதாக நான் இந்த வேளையில் குறிப்பிட விரும்புகிறேன்.
அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் அவரது பூட்டனாரின் வழியில் சென்று பெருந்தோட்ட மக்களுக்கும், நாட்டிற்கும் சேவையாற்றுவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)