சூற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றதாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்?

சூற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றதாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்?

றிப்தி அலி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுத்தல்களையும் மீறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் வகையிலான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்காக இவர்கள் பயன்படுத்துகின்றன சுவரொட்டிகள், பதாகைகள் சுற்றுச்சூழலுக்கு பாரியளவில் தீங்கு விளைவிக்கப்படுகின்றன. அது மாத்திரமல்லாமல், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வருகின்ற ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களினாலும் பாரியளவில் சுற்றுச்சூழல் மாசடைகின்றன.

இதற்கு மேலதிகமாக பிரச்சார மேடைகளை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களிலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அத்துடன் பிரச்சாரக் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒலிபெருகிகள் மூலம் சூழல் மாசடைகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவிக்கின்றது.

பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைகளை தடை செய்வது தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு 6 - 7 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, பொலித்தீன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை அரசியல், சமய, சமூக, கலாச்சார நிகழ்வுகளிற்கு பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளின் போது மீறப்பட்டு வருகின்றன. இதேவேளை, 2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காட்சிப்படுத்தல் மாசடைவு தொடர்பான ஒழுங்குபடுத்தல் ஏற்கனவே அமுலிலுள்ள உள்ளது. குறித்த ஒழுங்குபடுத்தலை மீறியே தற்போது தேர்தல் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரச நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்தது. இது தொடர்பில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உரிய நிறுவனங்களுக்கு கடிதம் எழுதிய போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினைத் தவிர வேறெந்த நிறுவனத்திற்கும் இந்த ஒழுங்குபடுத்தல் தொடர்பில் எதுவும் தெரியாது என்ற விடயம் தெரியவந்துள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் காரணமாக ஏற்படுகின்ற சூற்றுச்சூழல் மாசடைவை குறைப்பதற்கு அனைத்து தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

அவ்வாறில்லாத பட்சத்தில் காலநிலை மாற்றம் தொடர்பில் எமது நாடு எதிர்காலத்தில் பாரிய சவால்களை முகங்கொடுக்க வேண்டி வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தேர்தல் பிரச்சாரங்களின் போது தற்போதுள்ள சுற்றுச்சூழல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறும் சுற்றாடல் மாசடைவதைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

வேட்புமனு காலம் முடிந்த பின்னர் எந்தவொரு வேட்பாளரும் சுவரொட்டிகளை ஒட்ட அனுமதிக்கப்படமாட்டார். அதனையும் மீறி ஒட்டும் வேட்பாளர்களின் சுவரொட்டிகளை அகற்ற நாடளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பல மில்லியன் ரூபாக்களை செலவளிக்க வேண்டியுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு பாரிய சுமையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாறியுள்ளதாக அதன் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது எங்களிடம் குப்பைகளை நிரப்புவதற்கான இடமுமில்லை, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை மீள் சூழற்சி செய்தற்கான வசதியுமில்லை. இவ்வாறான நிலையில் தேர்தல் பிரச்சாரங்களின் போது வெளியாகும் குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றுவதில் பாரிய சவால்களையும் எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அனுமதியின்றி மற்றும் கட்டணம் செலுத்தமால் வீதிகளில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சார அலங்கரிப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற சுவரொட்டிகளுக்கு வேட்பாளர்களிடமிருந்து கட்டணம் அறவிடும்  முறையினை அமுல்ப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே சிபாரிசொன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் குற்றசாட்டினை மறுத்திய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் யூ.டி.சி. ஜயலால், தேர்தல் பிரச்சாரங்களின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை தேர்த்ல ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடம் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது போன்றே சுற்றாடல் அமைச்சும் சூற்றுச்சுழல் மாசடையாத வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

எவ்வாறான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் வகையிலேயே அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களதும் பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதை நேரடியாக அவதானிக்க முடிகின்றது.

ஏற்கனவே அமுலிலுள்ள சட்டங்களை மீறி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரோ பிளாஸ்டிக் அமைப்பின் ஸ்தபகரான நிசங்க டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த விடயத்தில் குறிப்பிட்ட அளவிலான தலையீட்டினை மேற்கொள்ள முடியும் என்பதனால், மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறோ, சுற்றுச்சூழலுக்கு தீங்கினை விளைவிக்காத வண்ணம் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களின் பிரச்சார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வேட்பாளர்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிளாஸ்டிக் பாவனைக்கு எதிரான செயற்பாட்டாளர் நிசங்க டி சில்வா குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கினை விளைவிக்காத வகையில் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அனைத்து வேட்பாளர்களதும் பொறுப்பாகும்.

அவ்வாறில்லாத பட்சத்தில் சுற்றுசூழல் பாரியளவில் மாசடைந்து காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களேயாகும்!