அரச நிறுவனங்கள் RTI சட்டத்தைப் பின்பற்றாத விடயம் ஆய்வில் வெளியாகியுள்ளது

அரச நிறுவனங்கள் RTI சட்டத்தைப் பின்பற்றாத விடயம் ஆய்வில் வெளியாகியுள்ளது

நிஷானா வீரசூரிய மற்றும் ஷானன் தலயாரத்ன 

உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் இன்று கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்த ஆண்டின் கருப்பொருள், "தகவல்களை அணுகுவதற்கான ஆன்லைன் வெளியின் முக்கியத்துவம்" என்பதாகும்.

பொதுமக்களின் தகவல் அணுகலை உறுதி செய்வது செழித்து வரும் ஜனநாயகத்தின் அடிப்படை தூணாகும். இது அரசாங்க முடிவுகளின் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது.

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI சட்டம்) முன்னுரையில் இந்தக் கருத்து எதிரொலிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது விவகாரங்களில் முழுமையாக ஈடுபடுவதற்கும், ஊழலை எதிர்ப்பதற்கும், நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் இலங்கையின் குடிமக்களுக்கு அதிகாரமளிக்க அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுமக்களுக்கு தகவல்களை அணுக உதவுகிறது:

(அ) அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைக் கோருவதன் மூலம் மற்றும் (ஆ) அரச நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு சில வகையான தகவல்களை வழங்குவதன் மூலம், உ+தா- தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்துவது.

இலங்கை அரசியலமைப்பின் 14அ உறுப்புரையும் தகவல் பெறுவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. தகவல்களை வெளிப்படுத்துவதற்கான சட்டம்  இலங்கையில் நடைமுறையில் இல்லை என்பதை பிரச்சனையாக கருதமுடியாது, மாறாக அரச நிறுவனங்கள் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற தற்போதைய சட்டத்திற்கு இணங்கத் தவறுவதுதான் பிரச்சினையாக இருக்கின்றது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட RTI சட்டத்தின் கீழ் ஆன்லைனில் தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்தல் குறித்த வெரிட்டே ரிசர்ச்சின் 2022 மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகள், சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

 
Unsatisfactory - திருப்தியற்ற
Moderately Unsatisfactory - ஓரளவு திருப்தியற்ற
Moderately Satisfactory – ஓரளவு திருப்திகரமான
Satisfactory - திருப்திகரமான
Highly Satisfactory - மிகவும் திருப்திகரமான

வடிவம் 1

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்துவது தொடர்பான விதிகளை வெரிட்டே ரிசர்ச் ஆய்வு செய்தது.

(1) சட்டத்தின்படி ஆன்லைனில் தகவல்களை வெளிப்படுத்தியது; மற்றும் (2) மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) தகவல் கிடைப்பதை உள்ளடக்கிய அந்தத் தகவல் பயன்படுத்தக்கூடியதா என்பதை இங்கு மதிப்பிட்டு கண்காணிக்கப்பட்டது. அதன்படி, அரச நிறுவனங்கள் அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஐந்து நிலைகளாக வகைப்படுத்தப்பட்டனர் (வடிவம் 1).

2017 முதல் 2022 வரையிலான சிறியளவு முன்னேற்றம்

2017 இல் ஆரம்ப மதிப்பீடு நடத்தப்பட்ட நிலையில், வெரிட்டே ரிசர்ச் இரண்டாவது முறையாக இம் மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு இணங்குவதில் சிறிது முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்தல் தொடர்பான ஆணைகளை கடைப்பிடிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னுரிமை அரச  நிறுவனங்களால் கொடுக்கப்படவில்லை என்பதே இது எடுத்துக்காட்டுகிறது.

2017ஆம் ஆண்டில், சராசரியாக, 89% அரச  நிறுவனங்கள் தங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் ஓரளவு திருப்தியற்றவர்களாகவே கருதப்பட்டனர். இருப்பினும், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, 77%  அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் 'ஓரளவு திருப்தியற்றவர்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது அவர்கள் தங்கள் இணையதளங்களில் சட்டப்பூர்வமாக தேவைப்படும் தகவல்களில் 40% க்கும் குறைவான தகவல்களையே அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டு காலப்பகுதியில் சட்டத்திற்கு இணங்குவதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பெரும்பாலான அரச நிறுவனங்கள் சட்டத்திற்கு இணங்குவதைப் பார்க்கும்போது இன்னும் குறைவான மதிப்பெண்களையே பெற்றுள்ளனர்.

2022 மதிப்பீட்டில் சிறப்பாகச் செயல்படும் அரச நிறுவனங்கள், அதாவது விவசாய அமைச்சு (57% மதிப்பெண்களுடன்) மற்றும் அரச நிர்வாக அமைச்சு (53% மதிப்பெண்களுடன்) ஆகிய நிறுவனங்களுக்கு கூட வெறும் 50%க்கு மேல் மதிப்பெண்களையே பெற முடிந்தது.

ஆசையும், உந்துதலும் இருந்தால், அதற்கான வழியைக் காணலாம்

11 பிரிவுகள் மற்றும் 30 துணைப்பிரிவுகளிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அரச நிறுவனங்களை உன்னிப்பாக மதிப்பிட்டு மதிப்பெண்களை வழங்குகிறது. சில தகவல் வகைகளில், அரச நிறுவனங்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர், இணக்கம் சாத்தியமானது என்பதை அதனூடாக நிரூபிக்கப்படுகிறது என்று வெரிட்டே ரிசர்ச் கண்டறிந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, சட்டத்தின் 8ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட நிபந்தனையின் கீழ், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுகள் தொடர்பான தகவல்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

அதில் அரச நிர்வாக அமைச்சு  81% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேபோன்று, சட்டத்தின் 9ம் பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தேவைகளின் அடிப்படையில், ஒரு திட்டத்தை  ஆரம்பிபதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அமைச்சர்கள் பொதுமக்களுக்குத் அதனை தெரிவிக்க வேண்டும், விவசாய அமைச்சு  அவ் வகை தகவல் வெளிப்பாட்டில் 68% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மூன்று மொழிகளிலும் தகவல் வெளிப்படுத்தப்பட்டதை ஆய்வு செய்தபோது, மதிப்பீடு செய்யப்பட்ட 31 அரச நிறுவனங்களில், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு மட்டுமே தொடர்ந்து மூன்று மொழிகளிலும் தகவல்களை வழங்கியுள்ளது.

பொதுவாக,  அரச நிறுவனங்கள் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட அரைவாசி தகவல்களை வெளியிட்டுள்ளனர், அதே நேரத்தில் 37% மட்டுமே சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் 29% மட்டுமே தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

திறன் இன்மையா அல்லது மந்தநிலையா?

தகவல்களை முன்கூட்டயே வெளிப்படுத்தலுடன் இணக்கத்தை அடைவது சாத்தியமானது என்பதை இது விளக்குகிறது. இதற்கு எப்பொழுதும் திறன் இன்மை காரணம் அல்ல, மாறாக மந்தநிலையே காரணமாக இருக்கிறது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு ஆகிய நிறுவனங்களால் மூன்று மொழிகளிலும் தொடர்ந்து தகவல்களை வழங்க முடிந்தால், அது மற்ற அரச நிறுவனங்களாலும் அடையக்கூடியதாகவே இருக்க வேண்டும்.

சட்டத்துடன் இணங்குதல் சவாலாக இருப்பதற்கான பல்வேறு காரணங்களை அரச நிறுவனங்கள் வழங்குகின்றனர். எவ்வாறாயினும், அரச நிறுவனங்களின் மதிப்பெண்களை ஒன்றுக்கு ஒன்று ஒப்பிடும்போது, இணக்கத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை முன்நிபந்தனை தெளிவாக உள்ளது: அது தகவல்களைப் பரப்புவதற்கான தயார்நிலை ஆகும்.

நிஷானா வீரசூரிய தற்போது வெரிட்டே ரிசர்ச் சட்ட ஆராய்ச்சி குழுவின் சிரேஷ்ட ஆராய்ச்சி முகாமையாளராக பணியாற்றுகிறார். அவர் நியூயார்க்கில் உரிமம் பெற்ற சட்டத்தரணியாவார் - குற்றவியல் சட்டம் மற்றும் சர்வதேச பொதுச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

வெரிட்டே ரிசர்ச்சில்  இனைவதற்கு முன்பு, நிஷானா நியூயார்க்கில் உதவி மாவட்ட சட்டத்தரணியாக கடமையாற்றியுள்ளார்.  அரசு மற்றும் சர்வதேச உறவுகளில் கவனம் செலுத்திய தனது இளங்கலை கௌரவ பட்டத்தை கிளார்க் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

மேலும் பொது நிர்வாகத்தில் தனது கௌரவ முதுகலைப் பட்டத்தையும் கிளார்க் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுளார், டெம்பிள் பல்கலைக்கழக பீஸ்லி சட்ட கல்லூரியிலிருந்து ஜூரிஸ் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஷானன் தலயாரத்ன தற்போது வெரிட்டே ரிசர்ச் சட்ட ஆய்வுக் குழுவின் கனிஷ்ட ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.

அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது சட்ட இளங்கலை கௌரவ பட்டத்தை பெற்றுள்ளதுடன், இலங்கையில் சட்ட பயிற்சியினை மேற்கொள்ள உரிமம் பெற்ற சட்டத்தரணியாவார்.