மக்கள் காங்கிரஸிலிருந்து இஷாக், அலி சப்ரி இடைநிறுத்தம்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து இரு வாரங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சியின் தீர்மானத்துக்கு புறம்பாக செயற்பட்டு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஆதரித்த அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்புரிமையிலிருந்து இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சிஐடி தடுப்புக் காவலில் உள்ள நிலையில், கட்சித் தலைவரின் அதிகாரங்கள் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
தலைவரின் அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்த கடந்த மே 4ஆம் திகதி கட்சியின் அரசியல் உயர் பீடம் அவருக்கு அனுமதியளித்திருந்தது. இந்நிலையிலேயே கட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பதில் தலைவராக செயற்படும் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டினால் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான கடிதங்கள் நேற்றிரவு குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுவதற்காக என்.எம். சஹீட்டினால் ஒப்பமிடப்பட்டன. கடந்த மே 4 ஆம் திகதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பது என ஏகமனதாக முவெடுக்கப்பட்டது. அத்துடன் குறித்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கக் கூடாது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் செயலர் எஸ். சுபைர்தீனினால் அனுப்பியும் வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் நேற்று (20) துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர் சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களித்தபோதும், இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்றி ரஹீம் ஆகியோர் சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
முன்னதாக கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி 20ஆவது அரசியல் திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போதும், ஆளும் கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முடிவுக்கு மாற்றமாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தவிர ஏனையோர் செயற்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் கட்சியின் ஒழுக்காற்று குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே, துறைமுக நகர ஆணைக் குழு சட்டமூலம் தொடர்பிலான கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகிய எம்.பி.க்கள் செயற்பட்டிருந்தனர்.
-எம்.எப்.எம்.பஸீர், ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
Comments (0)
Facebook Comments (0)