இந்திய எக்ஸிம் வங்கியின் மூவர் குழு இலங்கைக்கு விஜயம்
தேசிய ஏற்றுமதிக் காப்புறுதிக் கணக்கின் கீழான கடன் (BC-NEIA) வசதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொல்ஹாவெல மற்றும் அளுத்கம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக டிசம்பர் 07-09 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின்
மூவர் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்தது.
பொது முகாமையாளர் திருமதி ஷில்பா வாக்மரே, உதவிப் பொது முகாமையாளர் திருமதி மிதாலி பெந்தர்கர் மற்றும் தலைமை முகாமையாளர் ரஞ்சன் ரோய் ஆகியோரடங்கிய குழு 2021 டிசம்பர் 09 ஆம் திகதியன்று இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லேயினை சந்தித்து, இத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வருகை குறித்து விளக்கமளித்தனர்.
இந்திய எக்ஸிம் வங்கி இலங்கையில் நான்கு திட்டங்களுக்கு ஆதரவளிக்க 441.42 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கியுள்ளது, அதில் இரண்டு திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. பொல்ஹாவெல மற்றும் அளுத்கமவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களுக்காக முறையே USD 91.80 மில்லியன் மற்றும் USD 164.90 மில்லியன் நிதி உதவி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு (NWSDB) வழங்கப்பட்டுள்ளது.
பொல்ஹாவெல திட்டமானது VA Tech Wabag Ltd நிறுவனத்தாலும், அளுத்கமவில் Ion Exchange (India) Ltd நிறுவனத்தாலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு திட்டங்களும் கிட்டத்தட்ட 90 வீதமான முன்னேற்றத்தை அண்மித்துள்ளன.
இந்த விஜயத்தின் போது, எக்ஸிம் குழுவினர் அளுத்கம மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களில் உள்ள திட்டங்களைப் பார்வையிட்டு, அவற்றை மதிப்பீடு செய்து ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடினர்.
நிதியமைச்சின் வெளியுறவு திணைக்களம் மற்றும் NWSDB ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் கொழும்பில் சந்திப்புகளை நடத்திய எக்ஸிம் வங்கிக் குழுவினர் இரு திட்டங்களையும் விரைவாக முடிப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன் எதிர்காலத்தில் BC-NEIA திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படக்கூடிய திட்டங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர். இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்கள் சமூகத்தை மையமாகக் கொண்ட முன்னுரிமை திட்டங்களாகும்.
தம்புள்ளையில் உள்ள 9 நீர்த்தேக்கங்களுக்கான நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நிர்மாணம் மற்றும் அவற்றின் விநியோகப்பணிகளுக்கான திட்டம் ஏற்கனவே இக்கடனின் கீழ் VA Tech Wabag Ltd நிறுவனத்தால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில துறைகளில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இறையாண்மையுள்ள அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இந்திய எக்ஸிம் வங்கியால் வழங்கப்படும் சலுகைக் கடன் வசதியே BC-NEIA என்பதை கவனத்தில் கொள்ளவும். தற்போது, 91 நாடுகள் BC-NEIA திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பட்டியலில் உள்ளன.
Comments (0)
Facebook Comments (0)