ஜனாஸா எரிப்பு: புதிய அரசாங்கமாவது நீதியை நிலைநாட்டுமா?

ஜனாஸா எரிப்பு: புதிய அரசாங்கமாவது நீதியை நிலைநாட்டுமா?

றிப்தி அலி

"அமைச்சரவையில் மன்னிப்பு பத்திரமொன்றை சமர்ப்பித்து பலவந்த ஜனாஸா எரிப்புக் குற்றத்தினை ஒருபோதும் மறைக்க முடியாது" என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.

குறித்த பத்திரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பகிரங்க மன்னிப்பின் ஊடாக பலவந்த ஜனாஸா எரிப்பு அநியாயத்திலிருந்து எவராலும் தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அநியாயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனால், இந்த அநியாயத்திற்கு துணை போனவர்கள் தானாக முன்வந்து பிழைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கூறினார்.

அதேவேளை, பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் பெயர்களை உள்ளடக்கிய ஞாபகார்த்த இடமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் அரசாங்கத்திடம் முன்வைத்தார்.

கொவிட் - 19 தொற்றுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்த நீர்கொழும்பினைச் சேர்ந்த நபரின் ஜனாஸா கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி பலவந்தமாக எரிக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறியே இந்த பலவந்த எரிப்பு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து சுமார் 300 ஜனாஸாக்கள் பலவந்தமாக இலங்கையில் எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த எண்ணிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த அநியாயத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி பலவந்த ஜனாஸா எரிப்பின் ஐந்து வருட பூர்த்தி நிகழ்வு கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா மலே கூட்டமைப்பு, இலங்கை மேமன் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர்  முன்னணி, ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாம், சலாமா அமைப்பு உள்ளிட்ட 15 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தது.

இதன்போது, மரணித்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினரது ஆறுதலுக்காகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். அப்துல் ஹாலிகினால் விஷேட துஆ பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், முஜீபுர் ரஹ்மான், பைசர் முஸ்தபா,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி உட்பட சிவில் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரதி சபாநாயகரைத் தவிர வேறு எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அடிப்படை மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மீறி பலவந்தமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆறாத வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.

இதனால், பலவந்த ஜனாஸா எரிப்பினால் பாதிப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் வருடாந்தம் கொண்டாடப்பட வேண்டியுள்ளது.

அதேவேளை, இந்த நிகழ்வினை கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் நடத்தப்பட வேண்டும். இதன் ஊடாக பலவந்த ஜனாஸா எரிப்பிற்கான நியாயம் கோரலுக்கு அனைத்து இன மக்களின் ஆதரவினையும் பெற முடியும்.

யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுவது போன்று பலவந்த ஜனாஸா எரிப்பு நிகழ்வும் வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறியே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியிலும் குறித்த அநியாயத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேறினால், ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அமைச்சர் பிமல் ரத்னாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.

எனினும், அனுர குமார திநாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 6 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் பிமல் ரத்னாநாயக்கவினால் வழங்கப்பட்ட குறித்த வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் குறித்த அமைச்சர் பிமல் ரத்னாநாயக்கவிடம் இக்கட்டுரையாளர் பல தடவைகள் வினவிய போதும் அவரால் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. இதேவேளை, பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பல தடவைகள் பாராளுமன்றத்தில் வினவிய போதும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசிலும் பலவந்த ஜனாஸா எரிப்பு நியாயம் கிடைக்காதோ எனும் சந்தேகம் எழுவதற்கு மேற்படி சம்பவங்கள் வலுச் சேர்க்கின்றன. இவ்வாறான நிலையிலேயே பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.  

இந்தப் பிரேரணை தொடர்பில் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி  வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இரண்டு மாதங்கள் கழிந்தும் குறித்த பிரேரணைக்கமைய இதுவரை எந்தவொரு தெரிவுக்குழுவும் நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பிரதி சபாநாயாகர் றிஸ்வி சாலி ஆகியோரிடம் இக்கட்டுரையாளர் பல தடவைகள் வினவிய போதிலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அதேவேளை, குறித்த தெரிவுக்குழுவினை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இக்கட்டுரையாளரிடம் உறுதியளித்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.  

குறித்த அநியாயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

இதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து செயற்பட வேண்டும். மாறாக இந்த தெரிவுக்குழு நியமிக்கும் விடயம் தேர்தலுக்கான வாக்குறுதியாக அமையக்கூடாது.

அரசியலமைப்பினை மீறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அநியாயமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த செயலை முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் நடத்த அநியாயமாக ஒருபோதும் கருத முடியாது.

இந்த அநியாயத்தினை இலங்கை மக்களுக்கு நடந்த அநியாயமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதனால், குறித்த அநியாயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை வெளிப்படுத்துவதற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து  குரல் கொடுக்க வேண்டும்.