'நாட்டை கட்டியொழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்'
எமது நாட்டினை கட்டியொழுப்புவதற்காக அனைத்து இன மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிரிசேன அழைப்பு விடுத்தார்.
இலங்கைத் தாய் நாட்டினை கட்டியொழுப்பும் நோக்கில் பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையர்களுடன் லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் நெருங்கி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அடிப்படையிலேயே ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்புடன் இணைந்து நோன்பு திறக்கும் 'இப்தார்' நிகழ்வினை ஏற்பாடு செய்தாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
எமது நாட்டினை கட்டியொழுப்புவதற்காக பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற பங்களிப்பிற்கு நன்றி கூறுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் தலைவர்களான டி.பி ஜாயா, சேர் ராசீக் பரீட், எம்.சீ.எம். கலீல், பதியுதீன் முஹம்மத், ஏ.சீ.எஸ். ஹமீட் மற்றும் எம்.எச். முஹம்மத் போன்ற முஸ்லிம் தலைவர்கள் நாட்டுக்கு அளப்பெரிய சேவையினை மேற்கொண்டதாக உயர் ஸ்தானிகர் சரோஜா சிரிசேன மேலும் கூறினார்.
கொவிட் - 19 பரவல் காரணமாக கடந்த சில வருடங்களாக நடைபெறாது இருந்த ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் வருடாந்த இப்தார் கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்றது.
உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மர்யம் ஜெஸீமின் கிராஆதுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் ஹரோ நகரிலுள்ள இலங்கை முஸ்லிம் கலாசார நிலையத்தின் இமாம் ஷெய்க் தல்ஹா சித்தீகி சிறப்புரை நிகழ்த்தினார்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவரான சாஹீர் நவாஸின் நெறிப்படுத்தில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
Comments (0)
Facebook Comments (0)