பயங்கரவாத எதிர்ப்பு அடிப்படைவாதமா?
பா.நிரோஸ்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (ப.த.ச) கீழ் 2020ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி இலங்கையில் கவிஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகித்து, பல அப்பாவி இளைஞர்களின் வாழ்நாள் நாசமாக்கப்படுவதாக, இவ்வாரப் பாராளுமன்ற அமர்வில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
ப.த.ச நீக்கப்பட வேண்டுமென, சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளும் சர்வதேசமும் தொடர்ந்து பல தசாப்தங்களாக அழுத்தங்களை வழங்கி வருகிறபோதிலும், இச்சட்டத்துக்குள் பல அப்பாவி இளைஞர்கள் சிக்குண்டு, தங்களது வாழ்நாளைத் தொலைக்கும் பேரவலம் இலங்கையில் தொடர்கின்றது.
மன்னாரிலிருந்து யுத்தம் காரணமாக, புத்தளம், நுரைச்சோலை, கொய்யாவாடியில் 1990ஆம் ஆண்டு குடியேற்றிய அஹ்னப்பின் தந்தை ஏ.ஜி.எம்.ஜஸீம், 2009ஆம் ஆண்டு, மன்னாருக்கு மீண்டும் வந்து மீள்குடியேற்றியுள்ளார்.
மகனின் கைதால் என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருக்கும் ஏ.ஜி.எம்.ஜஸீம், தமிழ்மிரருக்கு தனது நிலைமைகளை இவ்வாறு விளக்கினார்.
“400 நாள்களுக்கு மேலாக எனது மகனைத் தடுத்து வைத்திருக்கிறார்கள். இதுவோர் அநாகரிகமான செயலாகும். எனது மகனை, தங்காலை தடுப்பு முகாமிலிருந்து அழைத்துவந்து, யாருக்கும் அறிவிக்காமல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி இருந்தார்கள்.
கொழும்பில் மகனை தடுத்து வைத்திருந்தபோது, வாக்குமூலம் வழங்க வேண்டுமென, என்னை சி.ஐ.டிக்கு அழைத்திருந்தார்கள். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள், ‘உங்கள் மகன் பயங்கரவாதத்தைக் கற்றுக்கொண்டார். அதனை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அவரை, அரச சாட்சியாளராக மாற்றி, விடுதலை செய்கிறோம்’ என்றனர்.
இதன்போது, மகனோடு பேசுவதற்கு அனுமதித்தார்கள். ‘என்ன மகன் நடக்குது’ என்று கேட்டேன். ‘எனக்குள்ள இருந்து, பயங்கரவாதம் உருவாக்கப்பட்டதாவும், அத நான் மாணவர்களுக்கு படித்துக்கொடுத்தேனென்டும் ஒத்துக்கொள்ள சொல்றாங்க வாப்பா. இத நா ஒத்துக்கொண்டா நா குற்றவாளி வாப்பா. செய்யாத குற்றத்த எப்படி வாப்பா ஒத்துக்கிறது’ என மகன் கண்ணீரோடு கூறினார். மகன் குற்றத்த பாரமெடுக்க முடியாதெண்டு சொன்னதால, என்ன உடனே அனுப்பிட்டாங்க.
மகன் எழுதின புத்தகத்தில் என்ன பிழை இருக்கிறது? அந்தப் புத்தகத்தில் அடிப்படைவாதம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். துப்பாக்கியைப் படமாகப் போட்டு,
“தூக்கும் துவக்கு
தாக்கும் நமக்கு
தீய்க்கும் நமக்கு
துவக்கிலா போர்
துவக்கு - அது
எழுத்தில் இருக்கு(து)" என்ற கவிதையை மகன் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதையில் என்ன பிழை இருக்கு? இதில் எங்கு அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இருக்கிறது?
மற்றொரு கவிதையில் எதிர்ப்பவர்கள், கிண்டலடிப்பவர்கள், தாழ்த்திப் பேசுபவர்கள் போன்றவர்களை நேருக்கு நேராக எதிர்த்து, துணிந்து வாழ்ந்து காட்டு என்கிறார். இப்படியான நல்ல சிந்தனையை தூண்டும் கவிதைகளை எனது மகன் எழுதியுள்ளார்.
“கொழும்பு, மெகசின் சிறைச்சாலையின் சி.ஆர்.பி பிரிவில், மகன் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து நேற்றுமுன்தினம் (24) தொலைபேசியல் இரண்டு நிமிடங்கள் பேசினார். ‘சிறைல நான் எழுதுன எழுத்துகள், என்ட குரானையும் பறிச்சிட்டாங்க வாப்பா’ என்று மகன் கூறினார்” என அஹ்னப்பின் தந்தை கண்களில் கண்ணீர் தழும்பக் கூறினார்.
அஹ்னப் ஜஸீம் தொடர்பில், அவருடைய சட்டத்தரணியான சஞ்சய வில்சன் ஜயசேகரவுடனும் உரையாடினோம். அவர் கூறும் விடயங்கள் வருமாறு;
“அஹ்னப் ஜஸீம் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்துக்குப் பின்னர், அவருக்கு எதிராக, அவரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கோடு தொடர்புபடுத்தி, அஹ்னப்புக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அஹ்னப் எழுதிய ‘நவரசம்’ புத்தகத்தை மொழிப்பெயர்ப்பு செய்து, அது, சிறுவர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கண்டறிவதற்கு, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் மனநல மருத்துவரின் அறிக்கையைப் பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவை சி.ஐ.டியினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த வழக்கு விசாரணைகளில், அஹ்னப் ஜஸிமுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் முழுமையான அறிக்கையை, நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இவ்வாறு நான் கோரிக்கை விடுத்ததன் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான அதிகாரி ஒருவரும், சி.ஐ.டியினரும் இந்த வழக்கை முன்கொண்டு செல்ல முடியாதென நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
மேலும், அஹ்னப்க்கு எதிரான வழக்கு ஒன்றை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், புதுக்கடையில் உள்ள பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி அந்த வழக்கை, சி.ஐ.டியினர் நிறைவு செய்தார்கள். அஹ்னப் வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராகி வருவதாகவும், அவர் வாக்குமூலம் வழங்கும்போது, அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவோமெனவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்து வந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே டிஐடியின் கட்டுப்பாட்டில் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னப், ஏப்ரல் மாதம் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் முறைப்பாடு செய்திருந்தபோதிலும், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
சர்வதேச ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் அஹ்னப் தமிழ் மொழி ஆசிரியராக இருந்தபோது, முஸ்லிம் மாணவர்களுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அஹ்னப்பை தொடர்ந்து தடுத்துவைத்து, அவரை உளவியல் ரீதியாகப் பாதிப்படைய செய்து, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள போலியான குற்றச்சாட்டை, ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சிக்கிறார்கள்.
‘நவரசம்’ புத்தகத்தில் அடிப்படைவாதம் இல்லை. அப்புத்தகத்தில் ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகளே உள்ளன. இதனை மொழிப்பெயர்த்து நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கிறோம். முஸ்லிம்களுக்கு எதிராக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனவாதப் போக்கின் அடிப்படையிலேயே அஹ்னப் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கில், அஹ்னப்பை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது. அஹ்னப்பை விடுதலை செய்வது தொடர்பில், அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். இது ஓர் அரசியல் வழக்கு. அரசியல் ரீதியாக இந்த வழக்கில் தீர்மானங்கள் எடுக்கப்படும்“ எனவும் தெரிவித்தார்.
123 பக்கங்களைக் கொண்ட ‘நவரசம்’ புத்தகமானது, அஹ்னப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பாகவே உள்ளது. ‘நவரசம்’ என்ற புத்தகம், இறையன்பையும் பொறுமையையும் மனிதத்தையும் முக்கியத்துவப்படுத்துகிறது.
நவரசத்தில் ‘யுத்தம்’ பற்றிய அஹ்னப்பின் எழுத்துகள் அவரது முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகவே உள்ளன. யுத்தம் என்பது யாதெனில், ஆயுதம் கொண்டு மாத்திரம் செய்வதல்ல; ‘அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க, உதிர்ந்திடாது உயர்ந்துடுவது யுத்தம் என்கிறார் கவிஞர்.
‘தண்ணீர்’ என்ற தலைப்பில் அஹிம்சையையும் ஐக்கியத்தையும் பொறுமையையும் போதிக்கும் கவிஞர், பெரும்பாலானக் கவிதைகளில் மனிதத்தை நேசிக்கச் சொல்கிறார்
ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. அப்படியிருக்க, ‘ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகத்தில், சாணம் கரைத்து ஊற்ற வேண்டும்; அவர்கள் கண்ணத்தில் அறைய வேண்டும்; மார்க்கம், நபி வழி என்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் உளறிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்’ எனப் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் கவிதை எழுதும் கவிஞனை, எப்படி ஒரு பயங்கரவாதியாகவும் அடிப்படைவாதியாகவும் பார்க்க முடிகிறது என்பது புரியாத புதிர்.
பயங்கரவாதத்துக்கு எதிராகவும் யுத்தத்துக்கு எதிராகவும் எழுதும் ஒரு கவிஞைனை, அடிப்படைவாதியெனக் கூறிக் கைது செய்யுமளவுக்கு, நாட்டின் பாதுகாப்புத் துறை செயற்படுகின்றது என்பது அஹ்னப்பின் விடயத்தில் அப்பட்டமாகிறது.
நன்றி: தமிழ்மிரர்
Comments (0)
Facebook Comments (0)