கொவிட் - 19 மரணம்: இறக்காமத்தில் அடக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளேன்: அம்பாறை GA
"கொவிட் - 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் நான் வழங்கவில்லை" என அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
"எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரை இறக்கமத்தில் நல்லடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் பரிந்துரை செய்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை இன்று 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்".
"கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை இன்று 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.
சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார துறையினூடாக இதற்கான அனுமதியை பெறுவதற்கு பல தடைகளுக்கு மத்தியில் முழு மூச்சுடன் செயற்பட்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் சட்டத்தரணி கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்" போன்ற பதிவுகள் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் நேற்று (29) சனிக்கிழமை இரவு பதிவேற்றப்பட்டிருந்தது.
இந்த பதிவுகளில், அம்பாறை மாவட்ட செயலாளரினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடந்த மே 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுப்பபட்ட கடிதமொன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களை இறக்கமத்தில் அடக்கம் செய்வதற்கான பரிந்துரை தொடர்பிலேயே குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நோக்கில் விடியல் இணையத்தள fact checking குழுவினர் அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவினை இன்று (30) ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்டு வினவினர்.
இதன்போது மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில், "கொவிட் - 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான பரிந்துரையினையே சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கினேன்.
மாறாக அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் வழங்கவில்லை. குறித்த கடிதத்தின் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
இறக்காமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்" என்றார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கமைய கிண்ணியாவின் மகமாறு பிரதேசத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த 25ஆம் திகதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)