கொமர்ஷல் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்குகிறதா?

கொமர்ஷல் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்குகிறதா?

“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சூழலினால் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களான உங்களுக்கு சிறியதொரு தொகையாக 5,000 ரூபாய் பணத்தினை நாங்கள் வழங்குகின்றோம்,” என்றதொறு விளம்பரம் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதி தொடக்கம் வட்ஸ்அப் மூலம் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்த சலுகையை பெற்றுக் கொள்வதற்காக கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தமது ATM VISA அட்டையின் இரண்டு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற்றுக்கொள்ளும் அந்நபர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன் சிங்கள மொழியில் மாத்திரமே இந்த விளம்பரம் கிடைக்கப்பெற்றது.

மேலும் வழங்கப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரி comercialbank.pvt@gmail.com என்ற சாதாரண நபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஒத்ததாகவே இருந்தது. இதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள கொமர்ஷல் வங்கியின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியை பரிசோதித்தபோது வழங்கப்பட்டிருந்த முகவரியுடன் பொருந்தாத ஒன்றாகவே அது இருந்தது.

இது சம்பந்தமாக வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டபோது அவ்வாறான சலுகைகள் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்கள்.

இந்த விடயம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் முகாமைப் பிரிவின் பிரதி முகாமையாளர் சமீர வீரகோன், "வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு விடுத்தால் இது போலியான செய்தி என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு சொல்லியிருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமது தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை அறிவுறுத்தும்படியும் அவர் அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.

குறித்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்த சலுகையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிளை வங்கிகளுக்கு சமுகமளித்தும் விவரம் கோரிய வாடிக்கையாளர்களுக்கு இது போலிச்செய்தி என்பதற்கான போதுமானளவு தெளிவினை வழங்கியுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் வினவியபோது "கொமர்ஷல் வங்கிக்கு 5,000 ரூபாய் தொடர்பாக விவரம் கோரியவர்களின் தகவல்களை தருவதற்கு வங்கியின் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மேலும் வங்கியினூடாக இதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டார்களா என்ற வினாவுக்கு இன்னமும் மேலதிக விசாரணை நடந்துகொண்டிருப்பதாக" தெரிவித்தார்கள்.

மேலும் வங்கியின் ஊடாக இடம்பெற்று வரும் இலத்திரனியல் மற்றும் டிஜிடல் பணப்பறிமாற்ற சேவைகளில் எந்தவித பாதிப்புகளும் இடம்பெறாது என்றும் வங்கி தொடர்ச்சியாக தமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பணப்பறிமாற்ற சேவைகளை வழங்கும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த போலியான விளம்பரத்தை பரப்பியவர்களின் நோக்கம் டிஜிடல் முறையில் பண மோசடி செய்வதாக இருக்கலாம் என தனியார் வங்கியொன்றில் உதவி முகாமையாளராக பணி புரியும் தனது பெயரை வெளியிட விரும்பாத டிஜிட்டல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "இன்று E-Banking, E-Shopping மற்றும் Self Banking  போன்ற செயற்பாடுகளுக்கு ATM VISA அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அட்டையில் உள்ள இலக்கங்களை மாத்திரம் வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி இருக்கிறது.

இதை தெரிந்து கொண்ட மோசடிகாரர்களின் செயற்பாடாக இது இருக்கலாம். எனவே போலிச்செய்திகளை நம்பி ஒருபோதும் எங்களது பணத்தை இழக்கும் நிலைக்கு நாம் செல்லக்கூடாது,” என தெரிவித்தார்.

குருணாகலில் உள்ள கொமர்ஷல் வங்கி கிளை ஒன்றை தொடர்புகொண்டு இந்த செய்தி குறித்து வினவியபோது "அவர்களுக்கு இந்தப் போலிச்செய்தி தொடர்பாக உயர் அதிகாரிகளால் போதியளவு விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக" கிளை வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார். இதற்காக ZOOM செயலியினூடாக முகாமையாளர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்கள்.

கொமர்ஷல் வங்கி இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் இப்போது வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் "நிலவும் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் இணையதள மோசடிகாரர்கள் உங்களது பயனர் அடையாளம் (User ID), கடவுச்சொல் (Password), கார்ட் விபரங்கள், இரகசிய இலக்கம் (PIN)இ ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) போன்ற முக்கியமான தகவல்களை போலி முகப்புத்தக பக்கங்கள், போலி மின்னஞ்சல் மற்றும் போலியான குறுஞ்செய்திகள் என்பவற்றினூடாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இணையத்தள மோசடி காரர்கள் டிஜிட்டல் சேனல்களை பயன்படுத்தி ஒரு வங்கியாகவோ அல்லது பிரிதொரு நிறுவனமாகவோ நடித்தே இவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். தயவு செய்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் இரகசிய தகவல்களை பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவும். கொமர்ஷல் வங்கி இவ்வாறான இரகசிய தகவல்களை உங்களிடமிருந்து ஒருபோதும் கோராது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://www.combank.lk/newweb/en/news/14-notices/posts/1325-cyber-security-notice

இந்நிலையில் இந்த விளம்பரம் போலியானது என்பதை கொமர்ஷல் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ஹஸரத் முனசிங்ஹ உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் “இந்த போலியான விளம்பரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைதளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை விழிப்பூட்டியுள்ளதுடன் எந்தவொரு தனிப்பட்ட தகவல்கள்களையும் மூன்றாம் தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என்றார்.

-அஹ்ஸன் அப்தர்-