கிழக்கில் கால்பதிக்க முனையும் சீனா
றிப்தி அலி
இலங்கைக்கான சீனாத் தூதுவர் குய் சென் ஹாங், கடந்த வாரம் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் இராஜதந்திர மட்டத்தில் முக்கிய பேசுபொருளாகக் காணப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் இந்தியாவினால் அதிகமான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2020 மே மாதம் முதல் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்டு வருகின்ற கோபால் பாக்லே, இதுவரை கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் சீனத் தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு முக்கியத்துவம் செலுத்தி விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இதனாலேயே சீனத் தூதுவரின் குறித்த விஜயம் முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது.
திருகோணமலையில் இயற்கை துறைமுகத்தினைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது. இதனாலேயே இந்திய எண்ணெய் கம்பனியின் எரிபொருள் தாங்கிகள் திருகோணமலை துறைமுகத்தில் காணப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள மின்சார நெருக்கடிக்கு உதவும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றினை இந்தியா விரைவில் நிர்மாணிக்கவுள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்துடன் இந்தியா நெருங்கிச் செயற்படுகின்ற நிலையில், அம்மாகாணத்தில் தங்களது செல்வாக்கையும் நிலை நிறுத்த சீனா முயற்சிக்கிறதா என்ற கேள்வினை சீனத் தூதுவரின் கிழக்கு விஜயம் எழுப்புகிறது.
கடந்த மே 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மூன்று நாட்களைக் கொண்ட இந்த விஜயத்தின் போது மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுக்கும் சீனத் தூதுவர் விஜயம் செய்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவராக குய் சென் ஹாங், கடந்த 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பின்னர் அவர் கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். அது போன்று சீனத் தூதுவரொருவர் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்மத்தின் அழைப்பினை ஏற்றே இந்த விஜயம் அமையப் பெற்றது. இந்த விஜயத்தின் போது மாகாணத்தில் வருமானம் குறைந்த 10,400 குடும்பங்களுக்கு 5,200 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக கல்முனை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில விளையாட்டுக் கழகழங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதேவேளை, வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்த தூதுவர், பல்கலைக்கழகத்திக் சர்வதேச கற்ககைகள் நிலையத்தினையும் திறந்துவைத்தார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரனை சந்தித்து மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் தூதுவர் பேச்சு நடத்தினார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பௌத்த விகாரை, இந்து கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளிலும் சீனத் தூதுவர் ஈடுபட்டார்.
அதுமாத்திரமல்லாமல், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் சீனங்குடா போன்ற பிரதேசங்களிற்கும் தூதுவர் விஜயம் மேற்கொண்டார். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்த விஜயத்தின் போது தூதுவர் அறிவித்திருந்தார்.
இந்தியாவினைப் போன்று சீனாவும் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது என்ற செய்தி தற்போது இந்தியாவிற்கு பாரிய தலையீடியினை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற விஜயமொன்றினை கடந்த வருட இறுதியில் சீனத் தூதுவர் வட மாகாணத்திற்கு மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் பல செயற்திட்டங்களை ஆரம்பிக்க சீன நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய எதிர்ப்பலையின் காரணமாக அனைத்து செயற்திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் தற்போது நிறுத்தியுள்ளது. இவ்வாறான நிலையிலேயே, சீனாவின் பார்வை கிழக்கு மாகாணம் பக்கம் திரும்பியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சீனாவினால் ஆரம்பிக்கப்படும் செயற்திட்டங்களுக்கும் இந்தியா எதிர்ப்பு வெளியிடும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் பட்சத்தில் இலங்கை விடயத்தில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மோதல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதேவேளை, குறித்த விஜயத்தின் போது உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் எவரையும் சீனத் தூதுவர் பிரத்தியோகமாக சந்திக்கவில்லை. மாறாக கிழக்கு மாகாண ஆளநரின் நேரடிக் கண்கானிப்பிலேயே இந்த விஜயம் காணப்பட்டது.
சீனத் தூதுவரை கிழக்கு மாகாண ஆளுநர் பல தடவைகள் கொழும்பிலுள்ள சீனத் தூதுவராலயத்தில் சந்தித்து மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தமையும் முக்கிய விடயமாகும்.
பல மாகாணங்களில் பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சீனா, இதுவரை கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு பாரிய நிகழ்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது கிழக்கு மாகாணம் நோக்கி அவர்களது பார்வை சென்றுள்ளது. அது மாத்திரமல்லாமல் இம்மாகாண மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்குவதாக தூதுவர் இந்த விஜயத்தின் போது அறிவிருந்தார்.
எது எப்படியிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற சீனாவின் ஆசை எந்தளவு சாத்தியப்படும் என்பது கேள்விக்குரியே.
Comments (0)
Facebook Comments (0)