திட்டமிட்ட முறையில் இயங்காமையினால் குப்பை மேடாக மாறிய அஷ்ரப் நகர் நில நிரப்புதளம்
திண்மக்கழிவுகளை வைத்து மின்சார உற்பத்தி
வெற்றியளிக்காத நிரப்புதளத்தினால் மாதாந்தம் 858,682 ரூபா நட்டம்
இனங்காணப்பட்ட பிரச்சினைகள் எதுவும் 7 வருடங்களாக சீர்செய்யப்படவில்லை
சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய சுற்றாடல் அதிகார சபை
றிப்தி அலி
ஒலுவில் - அஷ்ரப் நகரிலுள்ள பொறியியல் முறையிலான நில நிரப்புதளம், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலுக்கு முரணாக செயற்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாகத் தெரிய வந்துள்ளது
"இதனால், குறித்த நிரப்புதளத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் கடந்த ஏழு வருடங்களாக வழங்கப்படவில்லை" என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்ற இந்த நிரப்புதளத்தினால் பாரிய சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றமையினாலேயே குறித்த உரிமம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிடுகின்றது.
1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 56ஆம் இலக்கச் சட்டம், 2000ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 1533/16ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கழிவுகளை சேகரிக்க மற்றும் சேமிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மிகவும் அவசியமானதொன்றாகும்.
இதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த நில நிரப்புதளத்திற்கு வழங்கப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வேண்டி முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பின் போது அடையாளம் காணப்பட்ட சுற்றாடல் பிரச்சினைகளை சரிசெய்யுமாறு கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி எழுத்து மூலம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி மீண்டும் மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனையின்போது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட பிரச்சினைகள் மிக மோசமான நிலையில் சீர்செய்யப்படாமல் காணப்பட்டுள்ளன.
குறித்த பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தி கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு கடிதமொன்று எழுதப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பிரச்சினைகள் சரிசெய்யப்படாமையினால் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை புதுப்பிப்பதற்கான கோரிக்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி எழுத்து மூலமாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டும் உள்ளது. இதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நில நிரப்புதளம் தொடர்பான கோப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலகத்தின் சட்டப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1947ஆம் ஆண்டின் மாநகர சபை கட்டளைச் சட்டம், 1939ஆம் ஆண்டின் நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் கழிவு சேகரித்தல் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாகும்.
எனினும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு திண்மக்கழிவு அகற்றல் என்பது தொடர்ந்தும் ஒரு சவாலான விடயமாக காணப்பட்டு வருகின்றது.
இதனால், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மாநகர சபைகளையும் நாவிதன்வெளி, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளையும் உள்ளடக்கியதாக தின்மக் கழிவுகளை அகற்றுவதற்கான பொறியியல் முறையிலான நில நிரப்புதளத் திட்டம் முன்மொழியப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையைத் தொடர்ந்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதன் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட அஷ்ரப் நகரில் பல கோடி ரூபா செலவில் 20 வருடங்களுக்கு செயற்படுத்தும் நோக்கில் இந்த பொறியியல் முறையிலான நில நிரப்புதளம் அமைக்கப்பட்டது.
ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்போடு நிர்மாணிக்கப்பட்ட இந்த நில நிரப்புதளம், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை யுனொப்ஸ் நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இதன் பணிகள் அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நில நிரப்புதள திட்டமானது 1993ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட 772/22ஆம் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டிய குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
இதனால் குறித்த திட்டத்திற்கு சூழல் மதிப்பீடு செய்யப்படவில்லை. எவ்வாறாயினும், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இத்திட்டத்திற்கு சுற்றாடல் சிபாரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நிரப்புதளத்தில், தற்போது நாளொன்றுக்கு 100 தொன் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தெரிவிக்கின்றது.
இதனால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மாதாந்தம் 2 இலட்சத்து 75 ஆயிரத்து எட்டு நூற்று 98 ரூபா வருமானமாக கிடைக்கப் பெறுகின்றது. அதேவேளை, இந்த நிரப்புதளத்தின் பராமரிப்பிற்கதக 11 இலட்சத்து 34 ஆயிரத்து ஐநூற்று 80 ரூபா மாதாந்த செலவீனம் ஏற்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தெரிவிக்கின்றது.
சுற்றாடல் பாதுகாப்பு உரிமமின்றி சட்டவிரோதமாக தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிரப்புதளத்தினால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு 8 இலட்சத்து 58 ஆயிரத்து அறு நூற்று 82 ரூபா மாதாந்த நட்டம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு, அக்கரைப்பற்று, நிந்தவூர், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, சம்மாந்துறை, ஆகிய பிரதேச சபைகள் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றின் திண்மக்கழிவுகளே தற்போது இந்த நிரப்புதளத்தில் சேகரிக்கப்படுகின்றன.
இங்கு கொட்டப்படும் திண்மக் கழிவுகள் தரம் பிரித்தே சேகரிக்கப்படுவதாக தகவலறியும் கோரிக்கைக்கான பதிலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூறுகின்ற போதிலும் தரம் பிரிக்காமலேயே இங்கு கழிவுகள் சேகரிக்கப்படுவதை எமது கள விஜயத்தின் போது நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இதனால், குறித்த நில நிரப்புதளத்தினை அண்டிய பகுதிகள் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இப்பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மேட்டுநில பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையினால் இங்கு சேகரிக்கப்படும் உக்காத பொலித்தீன் கழிவுகளால் விவசாய நிலம் மாசடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
அதேவேளை, இந்த நில நிரப்புதளத்திலுள்ள கழிவுகளை உட்கொள்வதற்காக யானைகள் படையெடுக்கின்றன. இங்குள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிகளை உட்கொண்டமையினால் கடந்த எட்டு வருடங்களில் சுமார் 20 யானைகள் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கடந்த 2022ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டியிருந்தன.
எனினும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள தகவல்களின்படி 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐந்து யானைகள் இறந்துள்ளமை தெரிய வருகின்றது.
இங்குள்ள பொலித்தீன்களை உணவாக உட்கொண்டதன் காரணமாகவே குறித்த யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டது.
இதேவேளை, இந்த நிரப்புதளத்திற்குள் யானை நுழைவதைத் தடுக்கும் நோக்கில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார வேலி தற்போது செயலிழந்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தெரிவிக்கின்றது. இவ்வாறான நிலையில் நில நிரப்பு நிலையத்தினைச் சுற்றி அகழிகளும் தோண்டப்பட்டுள்ளன.
அகழி தோண்டல் நடவடிக்கையானது யானைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதன் காரணமாக அகழி தோண்டும் நடவடிக்கை தற்போது நீதிமன்றத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்ட பதில்களின் மூலமே மேற்படி விடயங்கள் தெரியவந்தன.
"இந்த நிரப்புதளம் செயற்பட ஆரம்பித்து 17 வருடங்கள் கழிந்துள்ள போதும், திட்டமிட்ட முறையில் இது செயற்படுத்தப்படவில்லை" என தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வாளருமான கலாநிதி அஸ்லம் சஜா தெரிவித்தார்.
இதன் காரணமாக, குறித்த நிரப்புதளத்தினை அண்மித்து வாழும் மக்களும், வனவிலங்குகளும் பல்வேறு சவால்களை முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வினைத்திறனாக இந்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என உரிய தரப்பினரிடம் கலாநிதி அஸ்லம் சஜா வேண்டுகோள் விடுக்கின்றார்.
இதேவேளை, குறித்த நிரப்புதளத்திலுள்ள குப்பைகளைக் கொண்டு சில மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்க அட்டாளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கை எடுத்து வருகின்றமை தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தரொருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு எதிரான எமது சட்ட நடவடிக்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உறுதியளிக்கப்பட்ட காலப் பகுதிக்குள் குறித்த மாற்றுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் நிச்சயமாக எமது அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
"இந்த நில நிரப்புதளத் திட்டம் வெற்றியளிக்கவில்லை" என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான் தெரிவித்தார்.
எதிர்பார்த்த அளவினை விட அதிகளவிலான திண்மக் கழிவுகள் இந்த நிலையத்தில் கொட்டப்பட்டமையே இதற்காக காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இங்குள்ள திண்மக் கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தியினையும் உலோகப் பொருள் தயாரிப்பினையும் மேற்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
"சூழலுக்கு எந்தவித பாதிப்புமில்லாத இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்காக ஜேர்மனைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்று முன்வந்துள்ளது. இது மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட செயற்த்திட்டம் என்பதனால் இதற்கான அனுமதி உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மட்டத்தில் பெற வேண்டியுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது" என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
படங்கள் சமூக ஊடகங்கள்
Comments (0)
Facebook Comments (0)