அரபுக் கல்லூரிகள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

அரபுக் கல்லூரிகள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

றிப்தி அலி

தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசீம் போன்றவர்களை உருவாக்கும் அரபுக் கல்லூரிகளையும், மத்ரஸாக்களையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஜனாதிபதியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த மக்கள், இந்த தற்கொலை தாக்குதல் குற்றவாளிகளை எப்போது தண்டிப்பார்கள் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அதேபோல், அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் என்ற பெயரில் சஹ்ரான் போன்றவர்களை உருவாக்க காரணமான நபர்களையும் தண்டிக்க வேண்டும்" எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இந்து அறநெறி பாடசாலைகளில் ஏனைய மதத்தவரை கொலை செய்ய வேண்டும் என கற்பிப்பதில்லை. ஆனால் அரபுக் கல்லூரிகளின் மத நடவடிக்கைகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார்.  

அமைச்சர் விமல் வீரவன்சவின் கடும் விமர்ச்சித்திற்குள்ளான இந்த அரபு கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்கள் என்பது எமது நாட்டுக்கு புதிய விடயமொன்றல்ல.

வரலாற்றுப் பின்னணி

"18ஆம் நூற்றாண்டிலிருந்து அரபு கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்கள் இலங்கையில் செயற்படுவதாக" பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய 'இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தினை புரிந்துகொள்ளல்' எனும் நூலில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி திணைக்கள அறிக்கைகளின் பிரகாரம், 1883ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் 5,910 குர்ஆன் மத்ரஸாக்கள் காணப்பட்டுள்ளன. இவை முஸ்லிம் கல்வி நிலையங்களாகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியான மகிய்யா அரபுக் கல்லூரி தென் மாகாணத்தில் காலி, தல்பிட்டிய பிரதேசத்தில் 1870ஆம் ஆண்டு யெமன் நாட்டினைச் சேர்ந்த ஷெய்க் அஹமத் சாலியினால் ஸ்தாபிக்கப்பட்டதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள தகவல் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, 1884ஆம் ஆண்டு வெலிகம பாரி மற்றும் புத்தளம் காசீமியா ஆகிய அரபுக் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட்டன. 1892 இல் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியும், 1899ஆம் ஆண்டு கிண்ணியா சாதீயா அரபுக் கல்லூரியும், 1915 இல் மாத்தறை முர்ஸியா அரபுக் கல்லூரியும், 1931ஆம் ஆண்டு மகஹரம கபூரியா அரபுக் கல்லூரியும்  உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட அரபுக் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட முன்னர், இலங்கையர்கள் தென்னிந்தியாவின் கீழக்கரை மற்றும் காயல்பட்டிணம் ஆகிய பாரம்பரிய நகரங்களிலுள்ள அரபுக் கல்லூரிகளில் கற்றே உலமாக்களாக வெளிவந்ததாக பேராசிரியர் நுஃமான் கூறினார்.

'வக்பு'

அரபுக் கல்லூரிகள் பள்ளிவாசலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இன்று தனி நிறுவனங்களாக செயற்படுகின்றன. எகிப்தின்  ஜாமீயுல் அஸ்ஹர் பள்ளிவாசலில் இருந்தே உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அல் - அஸ்கர் உருவாகியுள்ளது.

மருத்துவம், சட்டம், பொறியில் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைக் கொண்ட இந்த பல்கலைக்கழகம் மார்க்கக் கல்விக்கே பிரபல்யம் பெற்றதாகும். இந்த பல்கலைக்கழகத்திற்கு உலகளாவிய ரீதியில் 'வக்பு' சொத்துக்கள் காணப்படுகின்றன.

இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கப் பெரும் வருமானத்தின் ஊடாகவே இந்த பல்கலைக்கழம் நிர்வகிக்கப்படுவதுடன்  சுமார் 65,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசிலும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்லாத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'வக்பு' முறையின் ஊடாகவே உலகளாவிய ரீதியில் 'அறக் கட்டளைகள்' உருவாகியுள்ளன. இந்த அறக் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டே உலகின் முன்னணி பல்கலைக்கழங்களான  ஓக்ஸ்போர்ட் மற்றும் ஹாவேர்ட் பல்கலைக்கழகங்கள் செயற்படுகின்றன.

இது போன்றே, எமது நாட்டில் ஆரம்ப காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரபுக் கல்லூரிகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் வக்பு செய்யப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.

"சில தனவந்தர்கள் இன்று தனது தாய் அல்லது தந்தையின் பெயரில் அரபுக் கல்லூரிகளை உருவாக்குகின்றனர். இதற்காக எந்த சொத்துக்களையும்  வக்பு செய்யவதில்லை.

இதனால், கொவிட் - 19 தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரன காலப் பகுதியில் பல அரபுக் கல்லூரிகள் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியன" என முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வளர்ச்சி

இதேவேளை, அரபுக் கல்லூரிகளின் வளர்ச்சி வீதம் 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

"1884ஆம் ஆண்டு தொடக்கம் 1950ஆம் ஆண்டு வரை 15 அரபு கல்லூரிகள் ;மாத்திரமே நாட்டில் செயற்பட்டுள்ளன. 1950ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 101 அரபுக் கல்லுரிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன" என பேராசிரியர் நுஃமான் தெரிவித்தார்.

எனினும் 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான 19 வருடங்களுக்குள் 216 அரபுக் கல்லூரிகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"பெரும்பாலன அரபுக் கல்லூரிகளில் இந்தியாவின் மௌலானா முல்லா நிலாமுதீனினால் 18ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட தாருஸ் நிலாமி பாடத்திட்டமே கற்பிக்கப்படுகின்றது" என அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக அரபு மொழி இலக்கியம், ஷரீஆ, தத்துவம் மற்றும் தப்ஸீர் ஆகியனவும் தற்போது அரபுக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன.

"எனினும் பெரும்பாலான அரபுக் கல்லூரிகளில் தமிழ் மொழி மூலமே விரிவுரைகள் இடம்பெறுவதனால் உலமாக்களின் அரபு புலமையில் போதியளவான முன்னேற்றமில்லை" என பல்கலைக்கழக விரிவுரையாளரொருவரை மேற்கோள்காட்டி பேராசிரியர் நுஃமான் தெரிவித்தார்.

பதிவு

சுகந்திரத்திற்கு பின்னர் அரபுக் கல்லூரிகளை பதிவுசெய்யும் நடவடிக்கையினை கல்வி அமைச்சே முன்னெடுத்திருந்தது. எனினும் 1981ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் உருவாக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை கல்வி அமைச்சினால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கமைய கடந்த 2019 ஏப்ரல் வரை  317 அரபுக் கல்லூரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் பதிவுசெய்யப்படாத சுமார் 175 அரபுக் கல்லூரிகள் நாட்டில் செயற்படுவதாக பாராளுமன்ற அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரபுக் கல்லூரிகளில் அதிகமானவை கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன. 50 சதவீதமான பதிவுசெய்யப்பட்ட அரபுக் கல்லூரிகளில் 50க்கு குறை மாணவர்களே காணப்படுவதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 மாணவர்களுடன் செயற்படும் அரபுக் கல்லூரிகளும் நாட்டில் காணப்படுகின்றமை கவனிக்கத்தக்க விடயமாகும். 100க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அரபுக் கல்லூரிகள் சிலவும் செயற்படுகின்றன. கண்டி – தஸ்கர ஹக்கானிய அரபுக் கல்லூரியிலேயே அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

விமர்சனம்

இவ்வாறான நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்கள் தொடர்பான சந்தேகப் பார்வையொன்று நாட்டில் ஏற்பட்டது.

குறித்த தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசீம், அரபுக் கல்லூரியில் கற்று வெளியாகியவர் என தெரிவிக்கப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாகும். இதனால் அரபுக் கல்லூரிகள் பாரியளவில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டன.

இதனால் அரபுக் கல்லூரிகளை பதிவுசெய்யும் நடவடிக்கையினை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பங்காளதேஷில் நடைமுறையிலுள்ள மத்ரஸா கல்விச் சட்டத்தினை ஒத்த வகையிலான முறையொன்றினை நாட்டில் அறிமுகப்படுத்த கடந்த அரசாங்கம் தீர்மானித்தது.

உத்தேச மத்ரஸா ஒழுங்குபடுத்தல் சட்டம்

இதற்கமைய, மத்ரஸா கல்வி ஒழுங்குபடுத்தல் சட்ட மூலமொன்றினை தயாரிக்குமாறு அப்போதைய தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு முன்னாள்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சினால் மத்ரஸா கல்வி ஒழுங்குபடுத்தல் உத்தேச சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தின் ஊடாக மத்ரஸா கல்வி சபையொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்களினை  ஒழுங்குபடுத்தல், பதிவுசெய்தல், கண்காணித்தல், மற்றும் அதன் கல்வியினை அபிவிருத்தி செய்தல் ஆகிய அதிகாரம் இந்த சபைக்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக வழங்கப்படும் எனவும் குறித்த வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தப்ஸீர், ஹதீத், பிஹ்க், கலாம், உசூல் போன்ற துறைகள் கற்பிக்கப்படும் நிலையங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிக்கள், குர்ஆன் மற்றும் அரபு மொழி கற்பிக்கும் அனைத்தும் நிலையங்களும் இந்த சபையின் கீழ் புதிதாக பதிவுசெய்ய வேண்டும்.

ஏற்கனவே முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பதிவுசெய்யாதிருந்தாலும் இந்த புதிய சட்டத்தின் கீழ் அனைத்து நிலையங்களும் மீண்டும் பதிவுசெய்யப்பட வேண்டும்.

அவ்வாறு மத்ரஸா கல்வி ஒழுங்குபடுத்தல் சட்ட மூலத்தின் கீழ் பதிவுசெய்யப்படாத அரபுக் கல்லூரிகள், மத்ரஸாக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது .

ஒன்பது முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த மத்ரஸா கல்வி சபை முஸ்லிம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்படும். இந்த சபையில், மத்ரஸா கல்வி துறையில் தேர்ச்சி பெற்ற மூன்று உலமாக்கள், கல்வித்துறையில் நீண்ட அனுபவத்தினைக் கொண்ட முக்கியஸ்தர்கள், கல்வி, திறன் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்குவர்.

இதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர், பரீட்சை திணைக்கள பதிவாளர் மற்றும் மத்ரஸா மேற்பார்வையாளர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாவர்.

இந்த சபை கொள்கை ரீதியான ஆலோசனைகளை அமைச்சருக்கு வழங்கும். இதற்கு மேலதிகமாக அரபுக் கல்லூரி மற்றும் மத்ரஸாக்களினை பதிவுசெய்தல், ரத்துச் செய்தல் நிறுத்தி வைத்தல் ஆகிய அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிறந்த தர நியமங்களின் அடிப்படையில்  பரீட்சைகள் மற்றும் பயிற்சிகளை அரபுக் கல்லூரி மற்றும் மத்ரஸாக்களில் வழங்குவதற்கு மேலதிகமாக அரபு மொழி மற்றும் இலக்கியம், இஸ்லாமிய வரலாறு, இலங்கையின் வரலாறு, சிங்கள மற்றும் ஆங்கில மொழிகள் ஆகியவற்றினை கற்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.

மாணவர் அனுமதி, கற்பிக்கும் ஆசிரியர்களின் தகைமை, கல்லூரிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் ஆகியன தொடர்பில் இந்த சபை அபிவிருத்தி செய்வதுடன் தேசிய ரீதியாக இந்த சபையினால் நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு சான்றிதழ், டிப்ளோமா மற்றும் தேசிய உயர் டிப்ளோமா அகிய தரங்களில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதற்கு மேலதிகமாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள், பதக்கங்கள், உதவித் தொகைகள் மற்றும் பரிசுகளும் இந்த சபையினால் வழங்க முடியும்.  அத்துடன் அரபுக் கல்லூரிகள் மத்ரஸாக்களின் உட்கட்டமைப்பினை கல்வி, உயர் கல்வி மற்றும் திறன் அபிவித்தி ஆகிய அமைச்சுக்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு இந்த சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் ஊடாக மத்ரஸா நிதியொன்றும் உருவாக்கப்பட்டு அதற்கான உதவிகள், நன்கொடைகள், மானியங்கள் பெறுவதற்கான ஏற்பாடொன்றும் இந்த சட்டமூலத்திலுள்ளதுடன் இந்த நிதியத்திற்கான வங்கி கணக்கு அரச வங்கியொன்றிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.

இந்த சட்டமூலத்தின் முதலாவது வரைபு 2019 மே 6ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட போது, மேலும் சில திருத்தங்களினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இந்த சட்ட வரைபினை தயாரிக்கும் பணியினை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க கடந்த 2019 ஜுலை மாதம் அமைச்சரவை தீர்மானித்தது.

இதற்மைய கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைபில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகாரரிக்கப்பட்டது. எனினும் குறித்த வரைபு இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்ற துறைசார் குழுவின் அறிக்கை

இவ்வாறான நிலையில், பாராளுமன்ற தேசியப் பாதுகாப்பு பற்றிய துறை சார் மேற்பார்வை குழுவினால் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட 120 பக்ககங்களைக் கொண்ட அறிக்கையில் அரபுக் கல்லூரிகள் தொடர்பிலும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையினை 75ஆகக் குறைத்தல், 18 வயதுக்கு மேற்பட்ட அல்லது சாதாரன தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை மாத்திரம் இணைத்தல், அரபுக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையினை கல்வி அமைச்சு மேற்கொள்ளாது முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மேற்கொள்ளல், அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் 27,000 மாணவர்களை 2023ஆம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலை கல்விக்குள் உள்ளீர்த்தல், மத்ரஸா கல்வி சபையில் அகில இலங்கை ஜம்இய்யல் உலமா சபையின் பிரதிநிதிகiளை உள்வாங்காதிருத்தல் உள்ளிட்ட 10 பரிந்துரைகளை குறித்த குழு முன்வைத்துள்ளது.

எனினும், குறித்த குழுவின் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அல்லது சாதாரன தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை மாத்திரம் இணைத்தல் மற்றும் மத்ரஸா கல்வி சபையில் அகில இலங்கை ஜம்இய்யல் உலமா சபையின் பிரதிநிதிகiளை உள்வாங்காதிருத்தல் ஆகிய பரிந்துரைகளுக்கு அரபுக் கல்லூரிகளின் ஒன்றியம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், உத்தேச வரைபினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்ட மூலமாக்குவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்.

இவ்வாறு சட்ட மூலமாக்கப்படுவதன் ஊடாக அரபுக் கல்லூரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரங்களை முடிவுக்கொண்டு வர முடிவதுடன், அரபு கல்லூரிகளின் பெயரில் முஸ்லிம் சமூகத்தில் இடம்பெறும் குளறுபடிகளை தடுத்து நிறுத்த முடியுமாகவிருக்கும்.