கட்டாய தகனம் அமுலிலிருந்த காலப் பகுதியில் 101 முஸ்லிம்கள் கொவிட் காரணமாக உயிரிழப்பு
-றிப்தி அலி-
கொவிட் - 19 தொற்று காரணமாக கடந்த வருடம் 2020 மார்ச் 28ஆம் திகதி முதல் இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை உயிரிழந்த முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை 178 ஆகும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் நோக்கும் போது கொவிட் சடலங்களை கட்டாய தகனத்திற்குட்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் அமுலிலிருந்த 2021 பெப்ரவரி 25ஆம் திகதி வரை 101 முஸ்லிம்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.
சுகாதார அமைச்சிற்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக இந்த தகவல் தெரிய வந்தது. கொவிட் - 19 மரணங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வழங்கப்பட்ட பதிலில் காணப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டது.
கடந்த 2020.03.28ஆம் திகதி நாட்டில் முதலாவது கொவிட் - 19 மரணம் பதிவாகியது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தரவுகளின் பிரகாரம், 2020.03.28 முதல் 2021.04.30ஆம் திகதி வரையான ஒரு வருட காலப் பகுpதிக்குள் 678 பேர் கொவிட் - 19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் 390 சிங்களவர்களும், 178 முஸ்லிம்களும், 99 தமிழர்களும், 4 பறங்கியர்களும், ஏழு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர் என என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கிறது. இவர்களில் 428 ஆண்களும் 250 பெண்களும் இக்காலப் பகுதிக்குள் கொவிட் - 19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட 2216/38ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்களின் கட்டாய தகனம் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகரில் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின் பிரகாரம் அடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதித்தது.
இதற்கிணங்க, கடந்த மார்ச் 5ஆம் திகதி முதல் இன்று வரை கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய "கடந்த மார்ச் 5ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 30ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கொவிட் - 19 காரணமாக உயிரிழந்த 84 பேர் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தர்.
இதில், 77 முஸ்லிம்களும், 2 சிங்களவர்களும், 3 கிறிஸ்தவர்களும், 2 இந்துக்களும் உள்ளடங்குகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்குறிப்பிட்ட தரவுகளுக்கு அமைய, 2020.03.28ஆம் திகதி முதல் 2021.02.25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கொவிட் - 19 காரணமாக உயிரிழந்த 101 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)