SLBC இன் முன்னாள் தலைவரின் உத்தரவுக்கமையவே நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது
றிப்தி அலி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முன்னாள் தலைவர் ஜஹத் விக்ரமசிங்கவின் உத்தரவின் பிரகாரமே நான்கு உலமாக்களின் உரைகளை SLBC முஸ்லிம் சேவையில் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டது என அதன் பணிப்பாளர் நாயகம் சந்திரப்பால லியனகே தெரிவித்தார்.
"குறித்த உத்தரவிற்கமைய கடந்த 2020.12.04ஆம் திகதி முதல் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல், அஷ்ஷெய்க் முர்சித் முழப்பர், அஷ்ஷெய்க் அப்துல் ஹாலீக் மற்றும் அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா ஆகியோரின் உரைகiளை ஒலிபரப்பவே இந்த தடை விதிக்கப்பட்டது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் நிகழ்ச்சிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், "SLBCமுஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகளில் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தற்போது பங்கேற்கின்றார்" என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது முஸ்லிம் சேவையின் பொறுப்பாளராக செயற்பட்டவர், தற்போது SLBC இன் பயிற்சி மற்றும் ஆய்வு பிரிவின் விரிவுரையாளராக செயற்படுகின்றார். இவருக்கான இந்த நியமனம் கடந்த ஜனவரி 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SLBC முஸ்லிம் சேவையில் சில உலமாக்களின் உரைகளை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு கடந்த ஜுலை 19ஆம் திகதி அதன் பணிப்பாளர் நாயகம் சந்திரப்பால லியனகேயினால் வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தடையின் தற்போதைய நிலை தொடர்பிலும் இந்த தடை தொடர்கிறதா அல்லது இல்லையா என தகவல் அறியும் விண்ணப்பதில் வினவியதற்கு, "நியாயமானது, ஆனால் சரியானதல்ல" என முஸ்லிம் சேவையின் உதவிப் பணிப்பாளராக கடந்த கடந்த ஜனவரி 7ஆம் திகதி நியமிக்கப்பட்ட பெண்மணி பதில் வழங்கியதாக தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜுலை 30) கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் நிகழ்த்திய குத்பா பிரசங்கம், SLBC முஸ்லிம் சேவையில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. SLBC இன் தலைவராக செயற்பட்ட ஜஹத் விக்ரமசிங்க, கடந்த மார்ச் மாதம் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.
Comments (0)
Facebook Comments (0)