'இட்டுகம' கொவிட் நிதியத்தின் 90 சதவீத நிதி இன்னும் செலவளிக்கப்படவில்லை
றிப்தி அலி
'இட்டுகம (செய்கடமை)' என்று அழைக்கப்படும் கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற நன்கொடை நிதியில் 10 சதவீதத்திற்கு குறைவான நிதியே செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
"கடந்த 2021 டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்நிதியத்திற்கு 199 கோடி 26 இலட்சத்து 8 ஆயிரத்து 922 ரூபா மற்றும் 62 சதம் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் 19 கோடி 74 இலட்சத்து 6 ஆயிரத்து 824 ரூபா மாத்திரமே செலவளிக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
கொவிட் -19 மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக நலத் திட்டங்களை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்காக 2020 மார்ச் 23ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம், ஜனாதிபதி செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.
கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படுகின்ற முக்கியமான சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், சுகாதார அவசர நிலைகளுக்கான இலங்கையின் நீண்ட கால தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்நிதியம் உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதியின் நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடையுடன் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களினால் தொடர்ச்சியாக நன்கொடை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நன்கொடைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதில் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியான சிரேஷ்ட உதவி செயலாளர் சிசிர ஹென்தஹீரவினால் வழங்கப்பட்டது.
இதன்போதே 'இட்டுகம' நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதியில் 10 சதவீதத்திற்கு குறைவான நிதியே இதுவரை செலவளிக்கப்பட்டுள்ள விடயம் வெளியாகியது.
இதில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக 4 கோடி 26 இலட்சத்து 5 ஆயிரத்து 812 ரூபாவும், ஆலோசனை நிகழ்ச்சித் திட்டத்திற்காக 6 கோடி 75 இலட்சத்து 43 ஆயிரத்து 967 ரூபாவும், தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக 3 கோடி 80 இலட்சத்து 31 ஆயிரத்து 65 ரூபாவும், தேசிய தடுப்பூசியேற்றல் திட்டத்திற்காக 4 கோடி 15 இலட்சத்து 45 ஆயிரத்து 980 ரூபாவும், அவசர சத்திரசிகிச்சை பிரிவிற்கு தேவையான கட்டில்கள் கொள்வனவிற்காக 77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிதியத்திற்கு அதிகூடிய தொகை அன்பளிப்புச் செய்த முதல் 20 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்களை வழங்குமாறு கோரியதற்கு, 'நன்கொடையாளர்களின் அனுமதி பெற்றே அதனை வழங்க முடியும்' என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
எவ்வாறாயினும், 202 கோடி 29 இலட்சத்து 7 ஆயிரத்து 824 ரூபா நிதி இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 9 கோடி 77 இலட்சத்து 92 ஆயிரத்து 176 ரூபா சேகரிக்க வேண்டியுள்ளதாகவும் இடுகம நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.itukama.lk இல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
பதினேழு உறுப்பினர்களைக் கொண்ட இந்நிதியத்தின் முகாமைத்துவ சபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டே நிதி செலவளிப்பு தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது.
மத்திய வங்கியின் ஆளுநரே இந்த நிதியத்தின் தலைவராக செயற்படுகின்றார். இதற்கமைய இந்த நிதியத்திற்கு இதுவரை மூன்று தலைவர்கள் செயற்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வருடம் மே 10 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், 'மிகுதியாகவுள்ள இடுகம நிதியப் பணமான 136 கோடி 9 இலட்சத்து 22 ஆயிரத்து 969 ரூபா மற்றும் 24 சதம் தடுப்பூசியேற்றல் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கம் தடுப்பூசிகளுக்காக செலவிட எதிர்பார்க்கும் தொகையுடன் ஒப்பிடும் போது இது சிறியதொரு தொகையாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
அத்துடன் 10 அம்பியுலன்ஸ் வண்டிகள் கொள்வனவிற்காக 194 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. எனினும் மேற்குறிப்பிட்ட இரண்டு செலவுகள் தொடர்பில் தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் எதுவும் தெரிவிக்கப்படவிலலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டினை நீக்குவதற்காக 'இட்டுகம' நிதியத்தில் பயன்படுத்தப்படாமலுள்ள நிதியினை பயன்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் சிதைவடைந்துள்ள மருத்துவத் துறையினை கட்டியெழுப்ப முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், "இந்நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் முகாமைத்துவ குழுவின் விரிவான கலந்துரையாடலின் பின்னரே நிதி செலவளிப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றது" என 'இடுகம' நிதியத்தின் செயலாளரும், பிரதம நிதி அதிகாரியான ரவீந்திர ஜே. விமலவீர விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதற்கமைய, 1990 சுவசெரிய இலவச அம்பியுலன்ஸ் சேவைக்கு தேவையான 50 ஆம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய 'இட்டுகம' நிதியத்திலுள்ள நிதியினை பயன்படுவது தொடர்பில் இந்நிதியத்தின் முகாமைத்துவ சபை விரிவான கலந்துரையாடலொன்றினை தற்போது முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)