மத்ரஸா சட்டமூலம்: ஆராய குழு நியமனம்

மத்ரஸா சட்டமூலம்: ஆராய குழு நியமனம்

றிப்தி அலி

மத்ரஸா பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் பீ.ஆர் ஹரியவசத்தினால் இக்குழு நியமனம் தொடர்பிலான அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் கல்விச் சேவைக்கான மேலதிக செயலாளர் கலாநிதி கே.பி. முனஹம தலைமையிலான இக்குழுவின் செயலாளராக அமைச்சின் நிர்வாகம் மற்றும் காணி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி எம்.எப்.கே நிசா செயற்படுகின்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர்; பேராசிரியர் பரீனா ருசைக், கல்வி அமைச்சின் தனியார் பாடசாலைகள் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.என். பெரேரா, மேல் மாகாண கல்வித் திணைக்களம் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி பீ.டி விக்மரத்திலாக மற்றும் ஏ.எஸ் நஜீப், கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். நௌபர் தீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர் கலாநிதி அஹமட் அஸ்வர்  மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பு குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த ஜுலை 22ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்த விரைவில் சட்டமூலமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற குருத்தலாவ மத்திய மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே மத்ரஸா பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கான குழு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சினால் ஜனாதிபதியின் செயலாளரிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.