பொருளாதார நெருக்கடியைக் கையாள இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு IMF பாராட்டு
பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவினை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டாலினா ஜோர்ஜிவா பாராட்டியுள்ள அதேசமயம், சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உறுதியளித்துள்ளார்.
வாஷிங்டன் டிசியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இளவேனில்கால கூட்டமொன்று இடம்பெற்றிருந்த நிலையில் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோதே ஜோர்ஜிவா இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய பூகோள அரசியல் அபிவிருத்திகள் தொடர்பாக உரையாடியிருந்த சீதாராமன் மற்றும் ஜோர்ஜிவா ஆகியோர், உலக பொருளாதாரத்தில் பூகோள அரசியல் அபிவிருத்திகளால் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் தொடர்பாகவும் அதன் காரணமாக சக்தி துறைகளில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றங்களுடன் தொடர்புடைய சவால்கள் தொடர்பாகவும் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதற்தடவையாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையுடன் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது அத்துடன் சடுதியாக அதிகரித்துச் செல்லும் விலைகள் மற்றும் மின் துண்டிப்பு ஆகியவை பாரியளவிலான மக்களின் இயல்பு வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்நிலையினை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்துள்ள அணுகுமுறைக்கு எதிராகவும் பாரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இப்பொருளாதார நிலையானது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவிவிலகவேண்டுமென்ற நிபந்தனைகளுடன் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு வழிகோலியது.
கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா தடுப்பூசித்திட்ட்த்தினை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்காகவும் ஜோர்ஜிவா இந்தியாவைப் பாராட்டியுள்ளார்.
கொவிட்-19 பெருநோயினை கட்டுப்படுத்துவதற்காக நலிவடைந்த நாடுகளுக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்காகவும் அவர் இந்தியாவை பாராட்டியுள்ளார். இந்திய நிதி அமைச்சின் தகவல்களுக்கு அமைவாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்தும் உறுதியான நிலையில் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட இந்தியாவின் கொள்கைகள் ஆதரவாக அமைந்திருப்பதாக ஜோர்ஜிவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய நிதி அமைச்சருக்கும் ஜோர்ஜிவாவிற்கும் இடையிலான சந்திப்பின்போது மூலதன செலவினங்கள் ஊடாக பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பெருநோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சிக்கு பலமான நாணயக் கொள்கைகள், கட்டமைப்பு ரீதியான பாரிய மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் நிதிநிலை உறுதியான ஆதரவினை வழங்கியிருந்தது எனவும் அமைச்சர் நிர்மலா சுட்டிக்காட்டியிருந்தார்
கடந்த சனிக்கிழமை இந்தியாவின் கொவிட் தடுப்பூசி திட்டம் 186.49 கோடிகளை தாண்டியிருந்தது. உலக வங்கியில் நடைபெறும் இளவேனில்கால சந்திப்பு, ஜி20 நிதி அமைச்சர்களின் மாநாடு, மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நிர்மலா வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜி20 மற்றும் நிதிசார் செயற்பாடுகளுக்கான விசேட செயலணி ஆகியவற்றுடனான உத்தியோகபூர்வமான அவரது ஈடுபாட்டுக்கு அப்பால் வாஷிங்டன் டி.சிஐ தளமாகக் கொண்டியங்கும் ஓர் ஆய்வு நிறுவனமான அட்லாண்டிக் கவுன்சிலில் திங்கட்கிழமையன்று இடம்பெற்றிருந்த நிகழ்வுகளிலும் சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த விஜயத்தின்போது இந்தோனேசியா, தென் கொரியா, இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புக்களும் இந்த விஜயத்தின்போது இடம்பெற்றிருந்தது.
மேலும், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸுடனான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்ததாக இந்திய நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் சந்திப்புக்கள் நிறைவடையும் நிலையில் ஏப்ரல் 24ஆம் திகதி சான்பிரான்சிஸ்கோவுக்கு விஜயம் மேற்கொள்ளும் நிர்மலா சீதாராமன், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடனும் அதேபோல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் மாணவர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட உள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)