நீதிமன்ற உத்தரவினால் ஜனாஸா எரிப்புக்கு எதிரான சிறுவனின் நடைபவனி இடைநிறுத்தம்

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் அஷ்ரப் கான்

கொவிட் - 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபவனி போராட்டம் கல்முனை நகர மண்டபத்தினை அண்மித்த பிரதான வீதியில் இடைநிறுத்தப்பட்டது.

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை நடை பவணியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அமைதி வழி போராட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றின் உத்தரவிளை அடுத்தே இடைநிறுத்தப்பட்டது.

இந்த நடைபவனி இன்று (28) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இருந்து ஆரம்பமானது.

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்று குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு  நடைபாதை ஆரம்பமானது.

அக்கரைப்பற்றினை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளை கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய நிறுத்தப்பட்டது. அதாவது  - கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள்  இருந்தும் கல்முனை நகர மண்டபத்துடன் இந்நடை பவனி நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை பொலிஸாரால் நிறுத்தப்பட்டது.

அவ்விடத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பொலிஸாருடன் கலந்துரையாடி  சட்டத்தரணியின்  வாகனத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு அவர்களை அழைத்து சென்றார்

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டி மகஜரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். றிகாசிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.