அபிவிருத்தி அடைந்து வரும் சந்தைகளுக்கான பாதை
கசுன் திலின காரியவசம்
" டொலர் எமது நாணயம், ஆனால் அது உங்களின் பிரச்சினை”
ஜோன் கோனாலி, அமெரிக்க திறைசேரி செயலாளர் - 1971
கொவிட்டிற்க்குப் பின்னரான உலகப் பொருளாதாரத்தில், அபிவிருத்தி அடைந்து வரும் சந்தைகள் இரட்டை பின்னடைவு சுழலலால் பாதிக்கப்பட்டன. பெருந்தொற்றுக்கு முன்னரே, அபிவிருத்தி அடைந்து வரும் சந்தைகள் (EMs) அதிகரித்த பணவீக்கம், முதலீட்டு பற்றாக்குறை, வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருந்தன.
பின்னர் கொவிட் -19 ஏற்பட்டதுடன், 120 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளியது. பெருந்தொற்று இந்த பொருளாதாரங்களை கடுமையாக பலவீனப்படுத்தியது. 2020 இல் அவர்களின் சராசரி பொதுக் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 64% ஆக இருந்தது.
IMF இனுடைய கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டளவில் இந்த நாடுகளின் பொதுக் கடன் - மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 74% ஆக இருக்கும்.
சில தரப்பினர், நிச்சயமாக, மற்றவர்களை விட வேகமாக செயற்பட்டிருக்கிறார்கள். இந்த வலுவான தரப்புகளில் ஒன்று, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தையும் வலுவான வளர்ச்சி விகிதத்தையும் பேணுகின்ற சீனாவாகும்.
சீனா பல காரணங்களுக்காக EMகளில் ஒரு விதிவிலக்காக உள்ளது. அதன் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமானதுடன், டிசம்பர் 2022 நிலவரப்படி அது மூன்று டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை வெளிப்புற அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள உதவியது.
சீனா மேலும் அதிக அளவான பொருட்களின் கையிருப்பையும் கொண்டுள்ளது. இதன் விளைவாக, அதன் பொருளாதாரத்தை சரிசெய்ய எந்த புள்ளியிலும் பல தெரிவுகள் உள்ளன. அதன் மூடிய மூலதனக் கணக்கு, வெளியேறும் தாங்குதிறனான கொள்கைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது.
திடீர், தீவிரமான வெளியேற்ற நிலைகளில், அதன் மூடிய மூலதனக் கணக்கு அதிர்ச்சிகளைத் தணிக்கின்றது. சீனா தனது சொந்த கடனுக்கான ஓர் பாரிய உள்நாட்டு சந்தையைக் கொண்டிருப்பதால், ஏனைய EM தரப்புகளுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு முகவர்களை நம்பியிருப்பது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
பொது அல்லாத கடன் சற்றே அதிகமாக இருந்தபோதிலும், மற்ற EMகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பொதுக்கடன் குறைவாகவே உள்ளது. மேலும், நாட்டில் பெரிய அளவிலான மொத்த சேமிப்பு உள்ளமை, அதன் வங்கி நிதி நிலைமைக்கூற்று மேலும் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது.
பெருந்தொற்றின் ஆரம்ப மாதங்களில், பெருந்தொற்றுக்கான பிரதிபலிப்பாக பெரும்பாலான EMகள் தங்களின் கட்டணங்களைக் குறைத்தன. நேரடி பணப் பரிமாற்றம் முதல் வரிக் குறைப்பு வரை நிதியியல் மானியங்களை வழங்கும் சில நாடுகளும் இருந்தன.
எவ்வாறாயினும், EM களின் வரையறுக்கப்பட்ட நிதியியல் இயலளவு காரணமாக, இந்த கொள்கைகள் நெருக்கடியை மத்தியஸ்தம் செய்வதிலும் அந்த பொருளாதாரங்களில் வளர்ச்சியை அதிகரிப்பதிலும் மிகக் குறைந்தளவான தாக்கத்தையே ஏற்படுத்தியது.
பெடரல் ரிசர்வ் மற்றும் பிற அபிவிருத்தியடைந்த நாடுகள் அளவறி ரீதியிலான இறுக்கப்படுத்தும் (QT) நடவடிக்கைகளை அமுல்படுத்தியதன் விளைவாக, பெரும்பாலான EM நாடுகள் கீழே விழுந்தன. இந்த நாடுகளில் பல எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் பற்றாக்குறையை சந்தித்தன. அவர்களில் சில திவாலானதாக அறிவித்தன.
அதிகரித்த வட்டி விகிதங்களின் எதிர்மறையான பரம்பல் விளைவுகள் (நிதி சிக்கனத்தன்மையுடன் இணைந்து) அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளின் வளர்ச்சி திறனைக் குறைப்பது மட்டுமல்லாமல், சேவையாற்றக்கூடிய கடனின் அளவையும் குறைக்கும். மேலும், அதிகளவான பொது மற்றும் தனியார் கடனை கொண்டுள்ள நிலையில் அதிகப்படியான பண இறுக்கம் நிதியியல் உறுதியற்ற தன்மை மற்றும் EM களில் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும்.
அமெரிக்க நாணயக் கொள்கையை கடுமையாக இறுக்குவது நாணயத் தேய்மானம், ஆக்கிரோஷமான நிதியியல் வெளியேறுகை, அதிக அபாயமுள்ள வருமானம், பலவீனமான கடன் நிலைகள் மற்றும் ஏற்றுமதி மற்றும் முதலீட்டிற்கு தேவைப்படும் டொலர் கடன் மற்றும் பணப்புழக்கத்திற்கான அணுகல் பற்றாக்குறை ஆகியவற்றை மட்டுமே விளைவாக்க முடியும்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதுடன் அவற்றின் பேரினப் பொருளாதாரக் கொள்கை தெரிவுகளை மேலும் கட்டுப்படுத்தும்.
அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளின் கட்டமைப்பு பலவீனங்கள்
அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளில் இருந்தான ஏற்றுமதிகள் பெரும்பாலும் குறைந்த பெறுமதிசேர் தயாரிப்புகளாகும். இந்த தயாரிப்புகள் மூலப்பொருட்களிலிருந்து இடைநிலைப் பொருட்கள் வரை இருக்கும்.
உலகப் பொருளாதாரத்திற்கு அபிவிருத்தியடைந்து வரும் சந்தை மூலதனப் பொருட்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகும். இந்த விடயத்தில் சீனா மற்றும் தென் கொரியா இரண்டும் விதிவிலக்கான நாடுகளாகும்.
அரிதான புவிக்கனியங்களைத் தவிர்ந்த இந்த நாடுகளின் பெரும்பாலான ஏற்றுமதிகள் உலக சந்தையில் மிகவும் போட்டித்தன்மை கொண்டவையாகும்: புவிக்கனியங்களின் வரையறுக்கப்பட்ட வழங்கல் மற்றும் புவியியல் கட்டுப்பாடு காரணமாக, அரிய புவிக்கனியங்களை ஒருவர் இயற்கையாக மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் என்று அழைக்கலாம்.
இந்தோனேஷியா தற்போதைய பொருளாதார சூழலில் பணவீக்கத்திற்கு ஓரளவான தாங்குதிறனைக் காட்டியுள்ளது, ஏனெனில் அதன் ஏற்றுமதிகள் அரிய புவிக்கனியங்களாகும். அதிகரித்த வட்டிச் சூழலில், குறைந்த பெறுமதி சேர்மானங்கள் மூலதன உறிஞ்சல் மீதான ஓர் அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
பெரும்பாலான குறைந்த பெறுமதி சேர்மான ஏற்றுமதியாளர்களின் நிதி நிலைமைக்கூற்று சிவப்பு நிறத்தில் உள்ளன, ஏனெனில் அவர்கள் மூலப்பொருட்களை வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவற்றின் ஏற்றுமதி விலைகளின் நிச்சயமற்ற தன்மை காரணமாக, அபிவிருத்தியடைந்து வரும் சந்தை ஏற்றுமதிகள் பொதுவாக வலுவான டொலர் காலங்களில் அதாவது இன்று நாம் அனுபவிப்பதைப் போல பலவீனமடைகின்றன.
மேலும், EMகள் குறைந்த பெறுமதி சேர்மானங்களுடன் வளர்ந்து வரும் சேவைத் துறையால் வகைப்படுத்தப்படுகின்றன. அவை விருந்தோம்பல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை உள்ளடக்கியுள்ளது. கைத்தொழில் துறையுடன் ஒப்பிடுகையில் சேவைத் துறை குறைந்தளவான மூலதனப் பங்குகளை வைத்திருக்கிறது. இது பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு பங்களிக்கிறது.
சுழற்சியாக இருப்பதற்கு மேலதிகமாக, இத்தகைய துறைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாகும். உதாரணமாக, இலங்கை ஒவ்வொரு வருடமும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலா வருவாயில் ஈட்டுகிறது. ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் கொவிட்-19 ஆகியவற்றின் விளைவாக, சுற்றுலாத் துறை அதிகமான வருவாயை இழந்தது. அதன் பின்னர் இது பொருளாதார செயற்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொதுவாக, EMக்கள் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குறைந்த நுழைவுத் தேவைப்பாடுகள் காரணமாக சேவைகளைத் தேர்வு செய்கின்றன. EM களின் சேவைத் துறையின் அமைப்பு இதனை தெளிவாக விளக்குகிறது.
பெரும்பாலான சேவைத் துறைகள் குறைந்த திறன் கொண்டவையாகும். இதன் விளைவாக, பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகள் மேம்பட்ட பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவிலான உயர்த்தும் திறனைக் கொண்டுள்ளன. இது அவர்களின் நிதிச் சந்தைகள் சமீபத்திய விகித உயர்வுகளுக்கு பதிலளித்த விதத்தில் இருந்து தெளிவாகிறது.
பெரும்பாலான அபிவிருத்திடைந்து வரும் சந்தைகளில், உற்பத்தித்திறனை அதிகரிப்படவேண்டியுள்ளதுடன் நவீன உட்கட்டமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த முதலீடுகளின் அபாய அளவு குறிப்பாக டொலர் உயரும் சூழலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
இதன் விளைவாக, EMகளில் உள்ள உள்ளூர் வங்கிகள் அபாயத்திற்கான தங்கள் நிலையைக் குறைத்திருக்க வேண்டும். வங்கிகள் EM களுக்கு கடன் வழங்க விரும்பாமையானது கைத்தொழில்மயமாக்கத்திற்கான அவர்களின் முயற்சிகளில் சவாலாக தொடர்கின்றது.
மிகவும் கவலையளிக்கும் வகையில், டொலரின் மதிப்பில் இருந்து எழும் பணத்திரவத்தன்மை சிக்கல் சில நிறுவனங்கள் அந்நியச் செலாவணியைப் பதுக்கி வைக்க வழிவகுக்கின்றது.
இது ஏற்கனவே இருக்கும் டொலர் சூழலின் இறுக்கத்தை மிகையாக்குகிறது. பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளில், ஏற்றுமதியாளர்கள் தங்கள் அந்நியச் செலாவணி வருமானத்தை தங்கள் சொந்த நாணயங்களுக்கு கையளிப்பதில்லை. இதனை இலங்கையிலும் நாம் தெளிவாகக் காண்கிறோம்.
டொலருக்கான அதிகரித்த கேள்வி காரணமாக பெரும்பாலான EMகளில் USDக்கான கறுப்புச் சந்தை விலை ஏற்கனவே உள்ளது. பெரும்பாலான மத்திய வங்கிகளின் அமுலாக்க பொறிமுறைகள் ஓரளவு பலவீனமாக உள்ளன. இதன் காரணமாக, அமுலாக்கம் குறிப்பாக சரியான பெரிய பொருளாதார தீர்வுகள் இல்லாத நிலையில் ஓரளவு மந்தமாக இருக்கும்.
உயர் விகித சூழ்நிலையில் அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளுக்கான கொள்கை தெரிவுகள்
அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளுக்கான மிகத் தெளிவான தீர்வு அமெரிக்க டொலரில் இருந்து துண்டிப்பதாகும். அமெரிக்க டொலர் உலகின் பெரும்பாலான நாடுகளில் விருப்பமான நாணயமாக இருப்பதால், துண்டித்தல் என்பது நீண்ட கால செயன்முறையாகும்.
எந்தவொரு பொருளாதாரமும், அவற்றின் அளவு எதுவாக இருந்தாலும், குறுகிய காலத்தில் மற்ற நாணயங்களில் பல்வகைப்படுத்த முடியாது. தற்போதைய வலுவான டொலர் சூழ்நிலை உலக வர்த்தகத்தில் டொலரின் முதன்மையான நாணயம் என்ற நிலையை வினைத்திறனாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரமே உலகளாவிய வர்த்தகத்தின் பெரும் பகுதியை EM களில் இருந்து உறிஞ்சிக் கொள்கிறது. இருப்பினும், அவர்களின் நாணயம் தொடர்பான அபாயங்களைக் குறைப்பதற்கு, EM க்கள் இறுதியாக தங்கள் நாணய தொகுப்புக்களை பல்வகைப்படுத்த வேண்டும். பல்வகைப்படுத்தல் உத்தியை இரண்டு வழிகளில் செயற்படுத்தலாம்.
முதலில், EMகள் தங்கள் இறக்குமதிகளை பிரிவுகளாக்கி, அவர்களின் USD இறக்குமதிகளுக்கு மாற்றுகளைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக, பெரும்பாலான EMகள் பெட்ரோலியத்தை USD இல் வாங்குகின்றன. வெவ்வேறு நாடுகளில் இருந்து அவர்களின் சொந்த உள்ளூர் நாணயங்களில் வாங்குவதே சிறந்த மாற்றீடாக இருக்கும்.
உலகளாவிய பொருளாதாரத்தில் இத்தகைய தெரிவுகள் உள்ளதுடன், சில EM கள் ஏற்கனவே அவ்வாறு செய்து வருகின்றன. தற்போது எண்ணெய் ரூபிள்களில் இந்தியாவால் வாங்கப்படுவதுடன், மேலும் பல நாடுகள் ஈரானுடன் பெற்றோலிய ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தன.
பெற்றோலியம் - யுவான் என்பது மிகவும் சமீபத்திய வளர்ச்சியாகும். இந்த முயற்சியின் மூலம், ஷாங்காய் பெற்றோலியம் மற்றும் தேசிய எரிவாயு பரிமாற்ற நிறுவனம் இப்போது யுவானில் பெற்றோலியத்தை வாங்குவதற்கு நாடுகளுக்கு உதவுகிறது.
இரண்டாவதாக, EMகள் ஒரு ஏற்றுமதி நிகர உத்தியை செயற்படுத்த வேண்டும். ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் என்பது நடுத்தர முதல் நீண்ட காலத்துக்குரிய விடயமாகும். இந்த உத்தி அரசின் நிதிப் பிரிவால் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டியதுடன், ஒரு கொள்கை கடன் அமைப்பு இதற்கு இணையாக செயற்பட வேண்டும், இதனால் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் வசதிப்படுத்தவும் முடியும்.
மேலதிகமாக, பரஸ்பர ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதில் EM கள் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் EM களுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் இலக்கு வைக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, உலகின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையான சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மூலம் இலங்கை பெரிதும் பயனடையும்.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) என்ற உலகின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தின் தாயகமாகவும் ஆசியா உள்ளது. இது உலக சனத்தொகையில் 30% (2.2 பில்லியன் மக்கள்) பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மேலதிகமாக, இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (USD 29.7 டிரில்லியன்) 30% பங்கைக் கொண்டுள்ளது, இது உலகின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக அமைகிறது.
பழைய பாணியிலான பண்டமாற்று முறையைப் பயன்படுத்தி, எல்லை தாண்டிய வர்த்தகத்தையும் மேற்கொள்ளலாம். ஈரான், மலேசியா, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பண்டமாற்று முறை ஏற்கனவே கலந்துரையாடலில் உள்ளது.
பரிமாற்றத்தின் மையமாக ஒரு பொதுவான நாணயத் தொகுப்பு அல்லது ஒரு பண்டமாற்று விகித முறையைப் பயன்படுத்துவதன் மூலமாக இருக்க முடியும். பண்டமாற்று முறைகளின் பயன்பாடு டொலர் சார்ந்திருப்பதை இலகுவாக்குவது மட்டுமல்லாமல், நாடுகள் தங்கள் பற்றாக்குறையை சிறப்பாக முகாமை செய்ய அனுமதிக்கும்.
எல்லை தாண்டிய தீர்வு என்பது EM களுக்கு கிடைக்கும் மற்றொரு கொள்கைக் கருவியாகும். இந்த தீர்வை அமைக்க ஒப்புளிமுறைமை (Manual) மற்றும் பகுதியான ஒப்புளிமுறைமை என இரண்டு வழிகள் உள்ளன. அவற்றின் மூலம், பெரியளவான வர்த்தகப் பற்றாக்குறையை திரட்டும் அபாயம் இல்லாமல், நாடுகள் மிகவும் நிலையானதாகவும் வினைத்திறனாகவும் வர்த்தகம் செய்ய முடியும்.
கொள்கை தளத்திற்கான மிக சமீபத்திய சேர்மானம் மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC) ஆகும். CBDCகளுடன், வழக்கமான மொத்த விற்பனை தீர்வுகளுக்கு மேலதிகமாக, எல்லை தாண்டிய மொத்த விற்பனை தீர்வும் சாத்தியமாகும்.
CBDC களின் உதவியுடன், EM க்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவீனங்களை சிறப்பாக முகாமை செய்ய அனுமதிக்கின்ற "மாற்று நாணயக் குவிப்பு" என்று அழைக்கப்படுவதை நிர்வகிக்க முடியும்.
மொத்த விற்னை நாணயங்கள் (wCBDC) என்பது நிரல்படுத்தக்கூடிய நாணயங்கள் என்பதுடன், அவற்றை நாடுகள் வெளியிடலாம் மற்றும் பரிமாறிக்கொள்ளலாம்.
மற்ற முயற்சிகளும் தயார்நிலையில் உள்ளன. mBridge எனப்படும் பல்வகை CBDC தளமானது ஹாங்காங் மையம், ஹாங்காங் நாணய அதிகாரசபை, தாய்லாந்து வங்கி, சீன மக்கள் வங்கியின் டிஜிட்டல் நாணய நிறுவனம் மற்றும் UAE மத்திய வங்கி ஆகியவற்றால் நிறுவப்பட்டு BIS புத்தாக்க மையத்தால் கட்டமைக்கப்படுகிறது.
யூரோ மற்றும் சுவிஸ் பிராங்க் மொத்தவிற்பனை மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் (wCBDCs) நேரடி பரிமாற்றத்திற்காக ஜூரா எனப்படும் இரண்டாவது திட்டம் மூன்றாம் தரப்பினரால் செயற்படுத்தப்படும்.
கொடுப்பனவு எதிர் கொடுப்பனவு(PvP), வழங்கல் எதிர் கொடுப்பனவு (DvP) பொறிமுறைகள் ஆகியவற்றை பயன்படுத்தி டிஜிற்றல் மயமாக்கப்பட்ட சொத்து மற்றும் அந்நிய செலாவணி வர்த்தகம் ஆகியவை பாதுகாப்பாகவும் திறமையாகவும் தீர்க்கப்படும். Ubin, Khokha மற்றும் Stella போன்ற செயற்திட்டங்கள் அனைத்தும் இந்த பொறிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
நிச்சயமாக, பொருளாதாரத்தை வலுப்படுத்த குறைந்த பெறுமதிசேர் ஏற்றுமதியிலிருந்து அதிக பெறுமதிசேர் ஏற்றுமதிக்கு மாறுவதே நீண்ட கால உத்தியாக இருக்கும். முன்பே குறிப்பிட்டபடி, பெரும்பாலான EMகள் குறைந்த பெறுமதிசேர் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
வர்த்தகத்தில் அதிக அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு, அவர்கள் தங்கள் பெறுமதிச்சேர்மானங்களை அதிகரிக்க வேண்டும். வலுவான அமெரிக்க டொலர் சூழ்நிலையை சமாளிப்பது அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளுக்கு நிச்சயமாக சவாலாக இருக்கும்.
இத்தகைய சவால்களைத் தணிக்க இந்தப் பொருளாதாரங்கள் முயற்சி செய்யக்கூடிய சில கொள்கைகளை இந்தப் பகுப்பாய்வு ஆலோசித்து பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், அவர்களின் அரசாங்கங்கள் அவற்றை தேர்ந்தெடுக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
கசுன் திலின காரியவசம் சுவீடனில் நிதி முகாமைத்துவத் துறையில் பணியாற்றும் ஓர் பேரினப் பொருளாதார நிபுணராவார். அவரை kasunkt@hotmail.com மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)