சவூதி - இலங்கை தொழிற்பயிற்சி உடன்படிக்கை கைச்சாத்து
-ஏ.ஆர்.ஏ.பரீல்-
சவூதி அரேபியாவில் பணிபுரிவதற்கு இலங்கை பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்களை அனுப்பி வைக்கவுள்ளது. இது தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான உடன்படிக்கையொன்று கடந்த செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்தோடு தொழில்சார் பரீட்சை உடன்படிக்கையொன்று தக்காமுல் நிறுவனத்துக்கும் இலங்கை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
உடன்படிக்கையில் தக்காமுல் நிறுவனத்தின் பிரதிநிதி பெளஸான் அல் முஹைடிப் மற்றும் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆணைக்குழுவின் சார்பில் கலாநிதி ஏ.கே. லலித் அதீர் என்போர் கைச்சாத்திட்டனர்.
இவ்வுடன்படிக்கை சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹம்மூத் அல் கஹ்தானி மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்னிலையில் கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் பங்கு கொண்டிருந்தார்.
இந்த உடன்படிக்கையின்படி இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவின் வர்த்தக துறையின் தேவைக்கேற்ற பயிற்சி பெற்ற பணியாளர்களை அங்கு அனுப்பி வைக்கக்கூடியதாக இருக்கும்.
"கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றாகும். இந்த உடன்படிக்கை மூலம் சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு இலங்கையர்களின் தொழில் பயிற்சி தகைமையை இனங்கண்டு அதற்கமைவான தொழில்களை வழங்கக் கூடியதாக இருக்கும்" என இலங்கையின் கொள்கை திட்டமிடல் அமைச்சின் தேசிய மனிதவள அபிவிருத்தி கவுன்ஸிலின் பணிப்பாளர் கலாநிதி கே.ஆரச்சிகே லலித் அதீர தெரிவித்தார்.
இதேவேளை "இந்த உடன்படிக்கை இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான நட்புறவினை மேலும் வலுப்படுத்துவதாக அமைவதுடன், சவூதி அரேபியாவுக்கு அதிகமான பயிற்சிபெற்ற பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் இலங்கையிலிருந்து பயிற்சிபெற்ற தொழிலாளர்களை எமது தொழிற்சந்தைக்கு உள்வாங்கிக்கொள்ள முடியும்" என சவூதி தூதுவர் காலித் பின் ஹம்மூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)