ஈஸ்டர் தாக்குதல்: றிசாத் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் றிசாத் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய நாடாளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய நாடாளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக விசாரணை நடத்தி, அவ்விடயம் தொடர்பான தனது முடிவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமானது, குறித்த முறைப்பாட்டினை மிக தீவிரமாக விசாரணை நடாத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி, ஸ்பெயினின் மட்ரிட் நகரில் நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 208வது அமர்வில், இந்த விடயத்தின் மீதான முடிவு, ஒன்றியத்தின் ஆளும் குழுவால் ஏகமனதாக விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், 'ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும்' குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால், இன்று வரையில் அது தொடர்பான எவ்வித ஆதாரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட இன்ஷாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான கொலஸியஸ் பிரைவட் லிமிட்டட் நிறுவனம், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து ஏற்றுமதி உரிமத்தைப் பெற முயற்சித்ததாக குறிப்பிட்ட குற்றச்சாட்டு கூறுகிறது.
நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மேற்கொண்ட விசாரணைகளிலிலிருந்து, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் றிசாத் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என, அந்த ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த ஒன்றியமானது, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதன் தன்மை, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மை மற்றும் குறித்த வழக்கில் தொடர்ச்சியாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் உட்பட பல காரணிகளை கவனத்தில் எடுத்தது.
றிசாத் பதியுதீன் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உடனடியாக பரிசீலிக்காத நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக, ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
The #IPU is concerned that Mr Bathiudeen has been detained for 6 months under the #SriLanka
Comments (0)
Facebook Comments (0)