அதிக விலையில் கேஸ் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பணிப்புரை
இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் கேஸ் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலரில் கேஸ் கொள்வனவு செய்யப்படாமை குறித்து உடனடியாக ஆராயவும் பணிப்புரை
பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் நியமனம் நிதி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது தாய் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பணிப்புரை வழங்கப்பட்டது
குறைந்த விலையில் கேஸ் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரல் (Term Tender) இரத்துச் செய்யப்பட்டு 129 அமெரிக்க டொலர் வீதம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் கேஸைக் கொள்வனவு செய்வது தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்துமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (05) பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை
நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம், லிற்றோ கேஸ் டேர்மினல் லங்கா (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியன நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதமாகும்போது கேஸ் கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், 280,000 மெற்றிக் தொன்னுக்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாகவும் இதற்காக 30 கேஸ் விநியோகஸ்தர்கள் முன்வந்ததாகவும் இங்கு புலப்பட்டது.
இதில் சியாம் கேஸ் நிறுவனம் 96 அமெரிக்க டொலர் வீதி குறைந்த விலையில் கேள்விப்பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு அமைய குறித்த நிறுவனத்துக்கு இதனை வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இருந்தபோதும், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கேள்விப்பத்திரம் கோரலின் வழங்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய கடன் உறுதிக் கடிதத்தை லிற்றோ நிறுவனம் சமர்ப்பிக்க இந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு முடியாமல் போனமையால் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் கேள்விப்பத்திரம் கோரல் முறையின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய கடன் உறுதிக் கடிதத்தை சமர்ப்பிக்கத் தவறியமையால் எரிவாயுவை வழங்க நிறுவனம் தயக்கம் காட்டியதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் காலதாமதம் காரணமாக தற்காலிகத் தீர்வாக இரண்டு வாரங்களுக்கு அவசியமான எரிவாயுத் தொகையான 15,000 மெற்றின் தொன்னை அவசர கொள்வனவு செய்வது தொடர்பில் சியாம் நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டபோதும், 6600 மெற்றிக் தொன் எரிவாயுவை மாத்திரமே விநியோகிக்க முடியும் என அவர்கள் பதில் வழங்கியதால் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லையென்றும் இங்கு புலப்பட்டது.
அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் கீழ் 129 அமெரிக்க டொலரை வழங்கிய ஓமான் நிறுவனம் மாதமொன்றுக்கு 25,000 மெற்றிக் தொன் வீதம் 4 மாதங்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் லிற்றோ நிறுவனம் தெரிவித்தது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயம் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டு சியாம் கேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய குறிப்பிட்ட காலத்துக்கான கேள்விப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு ஓமான் நிறுவனத்திடம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பதிரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்காக உலக வங்கியிடம் 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி மற்றும் லிற்றோ நிறுவனத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை வழங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவுசெய்யப்படவிருப்பதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயுத் தேவை அத்தியாவசியமான அவசர தேவையாக இருக்கின்றபோதும் குறைந்த கேள்விப்பத்திரத்தை வழங்கிய சியாம் நிறுவனத்துக்குப் பதிலாக அதிக விலையில் ஓமான் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமையும் என்றும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர், கணக்காய்வாளர் திணைக்களத்துக்குத் தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படாத எரிவாயுவை கொள்வனவு செய்வதே பிரச்சினை என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாக ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் நிதியமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.
லிற்றோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு தற்பொழுது 4 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சட்டரீதியாக ஐவர் இருக்க வேண்டும். பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் நிதி அமைச்சின் ஊடாக நியமிக்கப்படுகின்றபோதும், தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியவாறு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் நிதி அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார். நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இரு பதவிகளையும் ஒரே நபர் வைத்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிறுவனத்தின் தலைவர் பதவி மாறினாலும், நிறைவேற்று அதிகாரி பதவி நிரந்தரமாக இருப்பதுடன், நிறுவனம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அதற்காக விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டவுடன் அதனைச் சமாளிப்பதற்கு பணிப்பாளர் சபை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு குழு பரிந்துரைத்தது. லிட்ரோ கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய திறன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், அரச வங்கியில் சுமார் 5 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதன் காரணமாகவே கடந்த காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிந்தது என்றார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, அனுரகுமார திஸாநாயக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி சரத் வீரசேகர, ஜகத் புஷ்பகுமார, இந்திக்க அனுருத்த, எஸ்.எம்.மரிக்கார், ஜயந்த சமரவீர, கலாநிதி நாலக கொடஹேவா, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)