மட்டு. மாவட்டத்தில் 37,509 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்

மட்டு. மாவட்டத்தில் 37,509 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்

றிப்தி அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு 37,509 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் காணப்பட்ட விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

இதில் அதிகூடிய 5,345 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மண்முனை வடக்கு – மட்டக்களப்பு பிரதேச செயலக எல்லைக்குள் வாழ்கின்றன. அதேவேளை, கோரளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லையில் ஆகக் குறைந்த 1,238 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் காணப்படுகின்றன.

இந்த மாவட்டத்தில் விவாகரத்து, இயற்கை மரணம், யுத்தம், தற்கொலை, விலங்கு தாக்குதல், கொவிட், விபத்து, அனர்த்தம், கொலை என 10 பிரிவுகளாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் 23,375 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இயற்கை மரணம் காரணமாக ஏற்பட்டுள்ளன. யுத்தம் அல்லது காணாமல் போனமை காரணமாக 3,194 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பினைச் சேர்ந்த கு. வேணுஜாவினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் விபரம் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு தகவலறியும் கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மாவட்ட செயலகத்தின் பெண் அபிவிருத்தி தொடர்பான மாவட்ட இணைப்பாளர் திருமதி எஸ். அருனலியினால் வழங்கப்பட்ட பதிலிலிலேயே மேற்படி விடயங்கள் தெரியவந்துள்ளன.