வீதியினை மறித்து கட்டிடப் பொருட்களை கொட்டி போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்த காத்தான்குடி நகர சபை அனுமதி

 வீதியினை மறித்து கட்டிடப் பொருட்களை கொட்டி போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்த காத்தான்குடி நகர சபை அனுமதி

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் தனிநபரொருவர் வீதியினை மறித்து கட்டிடப் பொருட்களை கொட்டி பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

நகர சபை கட்டளைச் சட்டத்தின் 255 அத்தியாயத்தின் 44 முதல் 50 வரையான பிரிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தகவல் அதிகாரியான நிர்வாக உத்தியோகத்தர் றினோஸா முப்லிஹ் தெரிவித்தார்.

போக்குவரத்து முழுமையாக பாதிக்காத வண்ணம் ஒரு பகுதியை மட்டும் தடை செய்யவே அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் போக்குரவத்திற்கு வேறு வழி இருந்தால் மாத்திரம் முழுமையாக பாதை மூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

குறைந்தது ஆறு மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் போக்குவரத்தினை தடை செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது என நிர்வாக உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் எம்.ஐ.அப்துல் நஸாரினால் கடந்த மே 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு கடந்த மே 29ஆம் திகதி வழங்கிய பதிலிலேயே காத்தான்குடி நகர சபையின் தகவல் அதிகாரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, காத்தான்குடி நகர சபைக்கு நாளாந்தம் 1 – 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டிட நிர்மாணம் மற்றும் கட்டிடப் பொருட்கள் வீதியில் கொட்டப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு, திண்மக் கழிவகற்றல் மற்றும் வடிகான் கழிவு நீர் வீதியில் வீதியில் தேங்கி நிற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, கட்டிட நிர்மாணம் மற்றும் கட்டிடப் பொருட்கள் வீதியில் கொட்டப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு தொடர்பில்  இந்த வருடம் மே 20ஆம் திகதி வரை 09 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிர்வாக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக காத்தான்குடி நகர சபையினால் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.