நாட்டில் மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவு
நாட்டில் அண்மைக்காலமாக மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் பொது மக்களின் வருமானம் குறைந்தமை காரணமாக மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயங்கள் வெளிப்பட்டன.
விசேடமாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஒன்லைன் முறையின் கீழ் சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதற்கமைய, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இவ்வாறு கலந்துகொண்டனர்.
மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை அடைவதில் சிக்கல்கள் சில காணப்பட்டதாகவும், மதுபான உற்பத்திக்கான எதனோல் குறைந்தமை, டீசல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் இதற்குக் காரணமாக அமைந்தது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், மதுபானத்தின் விலை அதிகரிப்பு, பொது மக்களுக்குக் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மதுபானத்துக்கான தேவை 30% இனால் குறைவடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சட்டவிரோத மதுபானத் தயாரிப்புக்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டதுடன், வரிக் கொள்கைகளை எவ்வாறு மாற்றுவது மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஒன்லைன் மூலம் கலந்துகொண்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், இந்த ஆண்டு இலங்கை கலால் திணைக்களம் பெற எதிர்பார்க்கும் வருமானம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் நளின் பெர்னாந்து, பாராளுமன்ற உறுப்பினர்களான ( கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அனுப பஸ்குவல் மற்றும் (வைத்திய கலாநிதி) காவிந்த ஜயவர்தன ஆகியோரும் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)