'AstraZeneca தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்திய அரசினால் தடை விதிப்பில்லை'
கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசாங்கத்தினால் எந்தவிதமான தடைகளையும் விதிக்கவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகித்தல் குறித்த ஊடக கேள்விகளுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் வழங்கிய பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த ஏப்ரல் 02ஆம் திகதி, புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வழங்கிய பதிலை உங்கள் கவனத்துக்கு கொண்டுசெல்ல நான் விரும்புகிறேன். கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசாங்கம் எந்தவிதமான தடைகளையும் விதிக்கவில்லை என அவர் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த வாரமும் பல்வேறு பிராந்தியங்களிலுள்ள நாடுகளுக்கான விநியோகப் பணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்திய தயாரிப்பான மொத்தம் 64 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசி கூறுகள் இருதரப்பு பரிசாகவும், கோவாக்ஸ் வசதி மூலமாகவும், வணிக உத்தரவுகளின் மூலமாகவும் வழங்கப்பட்ட 80 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிலையில் கொவிட்-19 தடுப்பூசிகளை இவ்வளவு பாரியளவில் ஏனைய நாடுகளுடன் எந்தவொரு நாடும் பகிர்ந்து கொள்ளவில்லை.
முறையாக அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஷெனெகா கொவிட்-19 தடுப்பூசிகள் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவிலிருந்து பரிசாக வழங்கப்பட்ட நிலையில் இலங்கையில் இத்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியினை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே வழங்க வழிசமைத்தது.
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் ஆரம்பமான சில நாட்களுக்குள்ளேயே இலங்கையின் நெருங்கிய நண்பராகவும், அயல் நாடாகவும் விளங்கும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியில் இலங்கை மக்கள் பயனடையத் தொடங்குவதை இந்தியா உறுதி செய்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1.25 மில்லியனுக்கும் அதிகமான கொவிஷீல்ட் தடுப்பூசி கூறுகள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு தேவை மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி மேலும் அதிகரித்து வருகிறது.
'வக்சின்மைத்ரி' திட்டத்தின் கீழ் இந்தியாவால் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவது, உலக நன்மைக்காக கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உலகளவில் புகழ்பெற்ற இந்திய தடுப்பூசி உற்பத்தித் திறன்களைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் நிலையான உறுதிப்பாட்டை மேம்படுத்துகிறது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)