இலங்கைக்கு 100 தொன்கள் ஒட்சிசனை விநியோகித்த இந்தியக் கடற்படைக் கப்பல் சக்தி

இலங்கைக்கு 100 தொன்கள் ஒட்சிசனை விநியோகித்த  இந்தியக் கடற்படைக் கப்பல் சக்தி

கொவிட்-19க்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் இந்திய கடற்படைக் கப்பலான சக்தி விசாகபட்டினத்திலிருந்து 100 தொன்கள் (5 கொள்கலன்கள்) திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பை வந்தடைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் 27500T கடற்படை கப்பலான சக்தியின் உதவியுடன் இத்தொகுதியினை துரிதமாக விநியோகிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் இந்திய கடற்படையின் ஒத்துழைப்பு குறித்து இலங்கை - இந்திய கடற்படைகளின் தளபதிகளுக்கிடையில் கடந்த வாரம் விரிவான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமுத்திரசேது - 2 நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய கடற்படை கப்பல் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்திய கடற்படை கப்பல் சக்தி வருகை தந்து சில மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை கடற்படையின் கப்பலான சக்தியும் 40 தொன்கள் திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் கொழும்பை வந்தடைந்த மையானது, இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் இருதரப்பு கடற்படையினர் இடையிலான ஒன்றிணைவை எடுத்தியம்புவதாக அமைகின்றது.

இந்நிலையில் நேற்று (23) திங்கட்கிழமை இந்திய கடற்படை கப்பல் சக்தியின் கட்டளை அதிகாரி அவர்கள் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோரால்
கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் இலங்கை கடற்படைக்கு சிறந்த முறையில் ஆதரவினை வழங்கிவருவதாக வைஸ் அட்மிரல் உலுகேதென்ன சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் இந்திய கடற்படையின் கப்பலான சக்தி மூலமாக இந்நடவடிக்கை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படையினருக்கும் அவர் தனது நன்றியினை தெரிவித்திருந்தார். வழமையான வினியோக மார்க்கங்கள் சீரமைக்கப்பட்டுவரும் நிலையில் நட்பு நாடுகளுக்கிடையில் கொவிட்-19 சிகிச்சைக்குரிய அத்தியாவசியமான மருந்துப்பொருட்களை விநியோகிப்பதில் இந்திய கடற்படையின் மிஷன் சாகர் திட்டம் மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருவதாக உயர் ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 20 முதல் 23 வரையிலான தினங்களுக்குள் இந்தியாவிலிருந்து 180 திரவநிலை மருத்துவ ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இன்னும் பல தொகுதிகள் வருகை தர உள்ளன.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொடர்ந்தும் ஒட்சிசனை விநியோகிப்பதற்கு ஏதுவாக திரவநிலை மருத்துவ ஒட்சிசன் வெற்றுக் கொள்கலன்கள் இந்திய கடற்படை கப்பல் சக்தி மூலமாக மீண்டும் விஷாகபட்டினத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.டி நியூ டைமண்ட் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் ஆகிய கப்பல்களில் ஏற்பட்டிருந்த தீயினை அணைக்கும் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவின் அயலவர்க்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்திய கடற்படை மற்றும் கரையோர காவல்படையினர் துரிதமாக பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் அவ்வாறான அனர்த்தங்களை தொடர்ந்து கடற்பரப்பில் மீன்பிடியை உறுதி செய்யும் நோக்கில் இந்திய கடற்படை கப்பல் சர்வேக்‌ஷாக் ஆய்வுப் பணிகளையும் முன்னெடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அவசியமான மருந்துப் பொருட்கள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்கள் மூலமாக கொவிட்- 19க்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து தனது ஆதரவினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.