பொதுஜன பெரமுனவின் மத்திய கொழும்பு அமைப்பாளராக உவைஸ் ஹாஜி நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய கொழும்பு அமைப்பாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரான உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷவின் சிபாரிசிற்கமைய கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – 10, மருதானையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் (30) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான உவைஸ் ஹாஜியார்,
"கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பெரும்பாலன முஸ்லிம்கள் வெளியேறினர்.
எனினும் நான் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக அவருடனேயே இருந்து வருகின்றேன். எனினும் அரசாங்கத்திலிருந்து பல தடவைகள் எனக்கு அழைப்பு வந்த போதிலும் அதை நிராகரித்தேன்.
அவ்வாறு அரசாங்கத்தின் பக்கம் சென்றிருந்தால் பல பதவிகளை அனுபவித்திருக்க முடியும். எனினும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த சிலராது மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பொதுஜன பெரமுனவில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான பல விடயங்களை நிறைவேற்றியுள்ளேன். எதிர்காலத்தில் இது போது பல செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன்.
அந்த அடிப்படையிலேயே மத்திய கொழும்பினை நான் தெரிவுசெய்துள்ளேன். பல தசாப்தங்களாக மத்திய கொழும்பு மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ள போதிலும், குறித்த கட்சியினால் எந்தவித நன்மையான செயற்பாடுகளும் இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்படவில்லை.
இதனை எனது கள விஜயத்தின் போது நேரடியாக அவதானிக்க முடிந்தது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் நான் கண்டி மாவட்;டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய போது அப்பிரதேச மக்களுக்கு இன, மத வேறுப்பாடுகளுக்கு அப்பால் சேவையாற்றியுள்ளேன்.
அதுபோன்றே கொழும்பிலும் எதிர்காலத்திலும் மேற்கொள்ளவுள்ளேன். அது மாத்திரமல்லாமல், கண்டி மாவட்டத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்திய உடுநுவர தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்பட்டது.
அதனை நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டையாக மாற்றி, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளராகவும் கடமையாற்றினேன். அதுபோன்று மத்திய கொழும்பினையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டையாக மாற்ற எண்ணம் பூண்டுள்ளேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)