இலங்கையில் காலநிலை மாற்ற இராஜதந்திரம்

இலங்கையில் காலநிலை மாற்ற இராஜதந்திரம்

மினோலி குணரத்ன

காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய காலநிலையில் நீண்ட கால, பாரிய மாற்றங்களைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் மோசமான உலகளாவிய காலநிலை நிலைமையைக் கருத்திற் கொண்டு, சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

காலநிலை இராஜதந்திரம் என்பது காலநிலை இலக்குகளை உள்ளடக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டுவதுடன் காலநிலை தொடர்பான கரிசனங்களை மிக உயர் நிலையிலான இராஜதந்திர இடைத்தொடர்புகள் மற்றும் பல கொள்கை களங்களினூடாக வெளிப்படுத்துகின்ற ஓர் மூலோபாய அணுகுமுறையாகும்.

காலநிலை மாற்ற இராஜதந்திரத்தில் தனது வகிபங்கைப் பற்றி அக்கறை கொண்ட இலங்கை, சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நிலைத்ததன்மையான எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்கும் நம்பிக்கையூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளரான  கலாநிதி அனில் ஜயசிங்க, "காலநிலை மாற்றம் தொடர்பான அபிவிருத்திக் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பின்னணியில் பல்வேறுபட்ட செயன்முறைகளின் சிக்கலான தன்மைகளைப் புரிவதுடன், நிவர்த்தி செய்யவும், அங்கீகரிக்கவும் வேண்டும்" என்று ஏற்றுக்கொள்கிறார்.

இது ஓர் "முழுமையான-அரசாங்கம், முழுமையான-சமூகம்" எனும் உத்தியை அவசியமாக்குகின்றது. இது காலநிலை இராஜதந்திரம் மற்றும் தலையீட்டிற்கு பல்வகைமையான உத்தி அவசியம் என்பதை இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பின் உயர் மட்டங்கள் அங்கீகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை காலநிலை மாற்ற இராஜதந்திரத்தில், பிரதான சர்வதேச காலநிலை மாநாடுகளில் முனைப்பாக பங்கேற்பதன் மூலமும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் நலன்களுக்காக பரப்புரையாற்றுவதன் மூலமும் செயலூக்கமான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

நாடு பச்சை வீட்டு வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும் குறைந்த காபன் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கும் தெளிவான உறுதிப்பாட்டை எடுத்துள்ளது. இலங்கை காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும், கடுமையான காலநிலை நிகழ்வுகளுடன் தொடர்புடைய ஆபத்துகளைத் தணிப்பதற்குமென பின்பற்றுகை மற்றும் தாங்குதிறனை கட்டியெழுப்பும் உத்திகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது.

நாடானது பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலைத்ததன்மை இலக்குகளை மேம்படுத்துவதற்குமான உலகளாவிய முயற்சிகளுக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.

இலங்கை காலநிலை நடவடிக்கைகளுக்கான அதன் இயலளவை வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டு ஒத்துழைப்பை முனைப்பாக நாடுகின்றது. காலநிலை மாற்ற பரிசீலனைகள் தேசியக் கொள்கையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதுடன், இது அபிவிருத்தித் திட்டங்களில் காலநிலை தாங்குதிறனை இணைப்பதன் மூலம் பார்க்கப்படுகிறது.

இயற்கை வள பாதுகாப்பு செயற்திட்டங்கள் இலங்கையின் காலநிலை இராஜதந்திர முயற்சிகளில் முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிப்பதற்கான சர்வதேச முயற்சிகளைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கால எல்லைக்குள் காபன் நடுநிலைமையை அடைவதாக இலங்கை உறுதியளித்துள்ளது.

பச்சை வீட்டு வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும் நிலையான நடைமுறைகளைச் செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் குறிப்பான இலக்குகளையும் காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது. சூரிய ஒளி, காற்று மற்றும் நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி முதல்களில் முதன்மையான அவதானம் செலுத்தப்படுகிறது.

இலங்கை தற்போது தனது சக்தி பிரிவை பன்முகப்படுத்துவதற்காக புதுப்பிக்கத்தக்க சக்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவியை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்பதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதே நேரத்தில், நாடு நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதுப்பிக்க முடியாத சக்தி முதல்களில் தங்கியிருப்பதை குறைத்து வருகின்றது. தேசிய கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் காபன் நடுநிலை இலக்குகளை அரசாங்கம் அமுலாக்குவதுடன், நிலையான தொழில்நுட்பத்திற்கு வளங்களை அர்ப்பணிப்பதுடன் பொதுமக்களின் அறிவு மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.

பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்குமென வழக்கமான கண்காணிப்பு மற்றும் செயற்பாடுகளை அறிக்கையிடுவதற்கான ஒரு பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு, பொருளாதார செழிப்பு மற்றும் குடிமக்களின் நலன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்வதற்குமான இலங்கையின் முன்னெச்சரிக்கையான அணுகுமுறை மேற்கூறிய வாக்குறுதியின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆகஸ்ட் 2023 இல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்ததுடன் பாரிஸ் ஒப்பந்தத்தின் 6ஆவது உறுப்புரையுன் கீழ் காபன் வெளியேற்றுகைக்கான கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டார்.

காபன் வெளியேற்றுகைகளில் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வது, பரஸ்பர நன்மை பயக்கும் செயற்திட்டங்களை உருவாக்குவது மற்றும் மூன்றாம் நாடுகளுடன் காபன் சந்தைகளில் சாத்தியமான ஒத்துழைப்பை ஆராய்வது ஆகியவை இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது சிங்கப்பூரை தளமாகக் கொண்ட காபன் வரி செலுத்தும் நிறுவனங்கள் தங்களது வரிக்குட்பட்ட வெளியேற்றுகைகளில் 5% வரை ஈடுசெய்ய அனுமதிக்கும் வகையில், சரிசெய்யப்பட்ட காபன் வெளியேற்றுகைகளின் சர்வதேச பரிமாற்றத்திற்கான இருதரப்பு பொறிமுறையை நிறுவுகிறது.

காலநிலை இராஜதந்திரமானது சர்வதேச காலநிலை கொள்கையில் வெளியுறவுக் கொள்கையின் வகிபங்கை ஏற்றுக்கொள்வதுடன், சிங்கப்பூரின் நீண்ட காலத்திற்கான குறைந்த வெளியேற்றுகை அபிவிருத்தி உத்தி 2050 க்குள் நிகர பூஜ்ஜிய வெளியேற்றுகையை இலக்காகக் கொண்டுள்ளது.

இலங்கையில் காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் ஜனாதிபதி முன்னெடுத்து வருவதுடன், MIT மற்றும் ஹார்வர்டு ஆகிய பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளன.

இலங்கையும் ஜப்பானும் குறைந்த காபன் வளர்ச்சியை அடைவதை நோக்காகக் கொண்ட உறவுமுறையை நிறுவும் குறிக்கோளுடன் ஜப்பானின் கூட்டுக் வெளியேற்றுகை பொறிமுறை தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் 2022 ஒக்டோபரில் கையெழுத்திட்டன.

இலங்கை 2023 பெப்ரவரி மாதத்தில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) ஓர் முறைசார் உடன்படிக்கைக்கு வந்தது. GGGI தற்போதைய சக்தி மற்றும் கடன் போன்ற பொருளாதார தடைகளை கடக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, பசுமை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும், நாட்டின் காலநிலை தாங்குதிறனை மேம்படுத்துவதற்குமென இலங்கை அரசாங்கத்திற்கு தனது உதவியை வழங்கியுள்ளது.

இருதரப்பு பங்காண்மை இலங்கைக்கும் அதன் பங்காளர் நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துகிறது. காலநிலை மாற்ற உறுதிமொழிகள் நேர்மறையான இராஜதந்திர இணைப்புகளுக்கு பங்களிப்பதுடன், மற்றைய விடயங்களில் பாரிய ஒத்துழைப்புக்கான சந்தர்ப்பங்களைத் திறக்கும்.

இதன் விளைவாக, சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நிலை மேம்பட்டுள்ளது. பிற நாடுகளுடனான கூட்டு நடவடிக்கை ஒரு நாட்டின் குரல் மற்றும் செல்வாக்கை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய காலநிலை ஒப்பந்தங்களில் சிறந்த விளைவுகளின் சாத்தியத்தை அதிகரிக்கிறது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறுதியான காலநிலை முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச்செயலாளரின் விரைவுபடுத்தப்பட்ட காலநிலை நிகழ்ச்சி நிரலுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% வீழ்ச்சியடையும் என்று விஞ்ஞானிகள் கணித்த நிலையில், காலநிலை மாற்றத்தின் கடுமையான பொருளாதார விளைவுகளை அவர் வலியுறுத்தினார்.

காலநிலை அபிலாஷைக்கு இலங்கை, புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கத்தை மையமாகக் கொண்ட பசுமை வளர்ச்சி மூலோபாயமான காலநிலை செழுமைத் திட்டத்தை வெளியிடல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைத் தூண்டுவதற்கு காலநிலை நீதி  அமைப்பை நிறுவுவதற்கு ஆதரவளித்தல் என இருமுனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது.

மேலதிகமாக, ஜனாதிபதி சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுதல் மற்றும் உயிர்ப்பல்வகைமை மிக்க அயன மண்டல பிராந்தியத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்காக கொண்ட அயன மண்டல காலநிலை லட்சிய திட்டம் என இரண்டு உலகளாவிய முன்முயற்சிகளை முன்மொழிந்தார்.

இந்த முன்முயற்சிகள், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான திட்டமிடப்பட்ட கடன் நிவாரணத்துடன், பொதுச்செயலாளரின் விரைவுபடுத்தப்பட்ட காலநிலை நிகழ்ச்சி நிரலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நிகழ்வுகள், இருதரப்பு ஒத்துழைப்புகள், உடன்படிக்கைகள் மற்றும் உலகளாவிய முயற்சிகள் ஆகியவற்றின் மூலமாக காலநிலை இராஜதந்திரத்தில் இலங்கையின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது.

உயிர்ப்பல்வகைமையில் சர்வதேச ஒத்துழைப்பையும் இராஜதந்திர பங்கேற்பையும் வெளிப்படுத்தும் வகையில், சர்வதேச உயிர்ப்பல்வகைமை தினத்தில் அங்காரா பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக இலங்கை தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உயிர்ப்பல்வகைமை மற்றும் விவசாய ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தூதுவரும் அங்காரா பல்கலைக்கழகத்தின் ரெக்டரும் கலந்துரையாடினர்.

சுற்றுச்சூழல் முன்முயற்சிகள் மற்றும் சர்வதேச மாநாடுகளில் இராஜதந்திர தொடர்புகளை பிரதிபலிக்கும் வகையில், 2024ஆம் ஆண்டில் உயிரியல் பல்வகைமைக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கான கட்சிகளின் 16 வது மாநாட்டை நடாத்தியமைக்காக தூதுவர் துருக்கியை பாராட்டினார்.

உயிர்ப்பல்வகைமை இலக்குகள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் ஆகியவற்றுடன் இணைந்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு விசேட முக்கியத்துவம் அளித்து, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக இலங்கை அதிகாரிகள் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தனர்.

இது காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள உலகளாவிய நடவடிக்கையின் முக்கியமான தேவையை வலியுறுத்துகின்றது. தணிப்பு நடவடிக்கைகளில் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், அதிக நிலைத்ததன்மையான நடைமுறைகளுக்கு மாறுதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கான தாங்குதிறனை உருவாக்குதல் ஆகியவை உள்ளடங்கும்.

சூழற்தொகுதிகள் காபன் வரிசைப்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையில் முக்கிய பங்கினை வகிப்பதால் இந்த சுற்றுப்பயணம் உயிர்ப்பல்வகைமை காப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிறது. உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல், நிலையான நில பயன்பாட்டு நடைமுறைகள் மற்றும் முக்கிய சூழற்தொகுதி அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இலக்காக கொண்ட செயற்திட்டங்கள் கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.

விரைவுபடுத்தப்பட்ட காலநிலை நடவடிக்கைக்கான உலகளாவிய அர்ப்பணிப்பான கிளாஸ்கோ ஒப்பந்தம், சர்வதேச சமூகத்தின் அபிலாஷைகள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் ஐக்கிய இராச்சியமும் இலங்கையும் தமது முயற்சிகளை இணைத்துக்கொள்வதைக் குறிக்கிறது.

இலங்கையின் சூழலியல் செயற்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவு பொதுவான சூழலியல் கரிசனங்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் இராஜதந்திர ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை ஆகிய இரண்டும் நிகர-பூஜ்ஜிய காபன் உமிழ்வை அடைவதில் உறுதிபூண்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியம் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு தேவைப்படுத்தும் சட்டத்தை இயற்றும் முதல் G7 நாடாக மாறியுள்ளது. காலநிலை இலக்குகளுக்கான இராஜதந்திர ஒத்துழைப்பானது, கொள்கை ஒருங்கிணைப்பு, கூட்டுறவு செயற்திட்டங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை இலக்குகளில் இரு நாடுகளின் பங்களிப்புகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம் ஆகிய உரையாடல்களுடன் புலனாகின்றது.

ஒருவருக்கொருவர் சுற்றுச்சூழல் தடத்தின் பதிவுகளை உருவாக்குவது, ஒவ்வொரு நாட்டின் முயற்சிகளுக்குமான பரஸ்பர அங்கீகாரத்தை குறிப்பதுடன், இது காலநிலை மாற்றத்திற்கு மிகவும் வலுவான மற்றும் வினைத்திறனான உலகளாவிய பதிலளிப்புக்கு பங்களிக்கிறது.

இலங்கை உலகளாவிய பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தில் 1% க்கும் குறைவான பங்களிப்பை வழங்கினாலும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியதாகும். 2017 ஆம் ஆண்டில், பெரிய காலநிலை தொடர்பான பேரழிவுகள் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

இலங்கை காலநிலை மாற்றத்தைத் தீர்ப்பதற்கு செல்வந்த நாடுகளின் காலநிலைக்கான பணம், காலநிலைக்கு புத்திக்கூர்மையான முதலீடு மற்றும் புவிசார் அரசியல் இணைப்புகளை பயன்படுத்த வேண்டும்.

உலகளாவிய காலநிலை நிதியம் இலங்கையில் 47 காலநிலை மாற்ற முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக மொத்தமாக 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 259 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது.

பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையம் பொதுநலவாயத்தின் சிறிய மற்றும் வளர்ந்து வரும் அரசாங்கங்களுக்கான உதவிக்கு முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் அதிகப்படுத்துவதற்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் காலநிலை நிதியுதவி மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும்.

சிறந்த காலநிலை இராஜதந்திரத்துடன், கிடைக்கக்கூடிய காலநிலை நிதியுதவிகளில் நியாயமான பங்கைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இலங்கை உள்ளது.

இறுதியாக, காலநிலை மாற்ற இராஜதந்திரத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பானது, உலகளாவிய காலநிலை பேரழிவால் எதிர்கொள்ளப்படுகின்ற சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயலூக்கமான மற்றும் விரிவான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

நாடு காலநிலை நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது மட்டுமல்லாமல், அதன் நலன்களுக்காக வாதிடுவதற்கும் கூட்டுத் தீர்வுகளைத் தேடுவதற்கும் சர்வதேச மன்றங்களில் முனைப்பாக பங்கேற்றுள்ளது.

சாராம்சமாக, இலங்கையின் காலநிலை இராஜதந்திர முன்முயற்சிகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் மட்டுமல்லாமல், காலநிலை நடவடிக்கை மற்றும் பொருளாதார வெற்றி மற்றும் சமூக நல்வாழ்வின் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதை அங்கீகரிக்க வேண்டும்.

இலங்கை உலகளாவிய முயற்சிகளில் முனைப்பாக பங்கேற்பதன் மூலமும், மூலோபாய உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலமும், ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்வைப்பதன் மூலமும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு செயலூக்கமான பங்காளராக இருப்பதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

நாட்டின் முயற்சிகள் சர்வதேச நோக்கங்களுடன் ஒத்துப்போவதுடன், காலநிலை நீதி தொடர்பான பாரிய கலந்துரையாடலில் சேர்வதுடன், மேலும் இலங்கையை உலகளாவிய காலநிலை இராஜதந்திரக் நகர்வில் பொறுப்பு வாய்ந்த மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் பங்குதாரராக நிலைநிறுத்துகிறது.

மினோலி குணரத்னா கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் பட்டதாரியும் இலங்கை சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவருமாவார்.