ஞானசார தேரரின் சாட்சியத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்தமையினால் சட்டத்தரணி பணிநீக்கம்
-ஏ.ஆர்.ஏ.பரீல்-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியமொன்றினை மெளலவி ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் சட்டவிரோதமாக பதிவு செய்வதற்கு உடந்தையாகவிருந்த சட்டத்தரணி ஒருவரின் சட்டத்தரணி பதவி நீதிமன்றினால் எட்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது. அக்குரஸ்ஸையைச் சேர்ந்த நிஸாம் மொகமட் சமீம் என்ற சட்டத்தரணிக்கே எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து எட்டு மாதங்களுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
புவனேக அலுவிகார, எஸ்.துரைராஜா, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை வழங்கியது.
2020.09.09ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினரான மெளலவி முர்ஷித் முழப்பர், ஆணைக்குழு முன்னிலையில் பொதுபல அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய சாட்சியத்தை இரகசியமாக தனது குறிப்புப் புத்தகத்தின் நடுவில் கையடக்கத் தொலைபேசியை மறைத்து வைத்து பதிவு செய்தமை பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மெளலவி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். சட்டத்தரணிகளைத் தவிர ஏனையோர் ஆணைக்குழுவின் அமர்வு நடக்கும் அறைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட மெளலவி அதனை எவ்வாறு எடுத்துச் சென்றிருந்தார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போதே குறித்த சட்டத்தரணி கையடக்கத் தொலைபேசியை விசாரணை மண்டபத்திற்குள் எடுத்துச் சென்று மெளலவியிடம் வழங்கியமை தெரியவந்தது.
இந்நிலையில் சட்டத்தரணியின் இச்செயற்பாடு தொடர்பில் ஆணைக்குழுவின் செயலாளரினால் உயர்நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த இரு வருட காலமாக இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், பிரதிவாதியான குறிப்பிட்ட சட்டத்தரணி சட்டத்துறையின் ஒழுக்கவிதிகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்மானித்து இத்தடை உத்தரவை வழங்கியது.
Vidivelli
Comments (0)
Facebook Comments (0)