பாராளுமன்றத்தில் நாளை அரசாங்கத்தின் கணக்கு வாக்கெடுப்பு விவாதம்
எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி தொடக்கம் 2020ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை 1,300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரும் அரசாங்கத்தின் கணக்கு வாக்கெடுப்பு நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் 2 (1)ஆம் பிரிவின் கீழ் 750 பில்லியனை விஞ்சாத தொகையொன்றை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் கடனாகப் பெறுவதற்கான தீர்மானமொன்றும் விவாதிக்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையொன்றும் பாராளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் மஹிந்த
யாப்பா அபேவர்த்தனவினால் சபையில் முன்வைக்கப்படும்.
அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவையும் நாளை அங்கீகரிக்கப்படும். 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதுடன், இரு தினங்களும் மதியபோசன இடைவேளையின்றி விவாதத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னறிவித்தல் வழங்கப்பட்ட பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு, 27ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)