''COP28' காலநிலை மாநாடு இலங்கைக்கு பயனுள்ளதாக அமையும்'
இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை பல்கலைக்கழகத்தின் ஊடாக இலங்கை எதிர்நோக்கும் காலநிலை தொடர்பான பல்வேறு பிரைச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வியாழக்கிழமை (30) ஆரம்பமான COP28 என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இலங்கைக்கு பயனுள்ளதாக அமையும் என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் தெரிவித்தது.
"இலங்கை போன்ற காலநிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற நாடுகளின் எதிர்கால இலக்குகளை அடைவதற்கு தேவையான உதவிகளை இந்த மாநாட்டின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்" என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான காலநிலை நடவடிக்கையின் இணைப்பாளர் மொஷாஹருல் ஆலம் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை பல்கலைக்கழகத்தின் மூலம் இலங்கை எதிர்நோக்கும் காலநிலை தொடர்பான பல்வேறு பிரைச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகளின் ஆறாவது சுற்றுச்சூழல் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 1ஆம் திகதி வரை கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்காக 'காலநிலை நீதி' தொடர்பான வரைபு பிரேரணையொன்று இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டினை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து இலங்கை கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான காலநிலை நடவடிக்கையின் இணைப்பாளர் மொஷாஹருல் ஆலமுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொண்ட நேர்காணலின் முழுமை:
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் இலங்கையுடன் இணைந்து எவ்வாறான செயற்த்திட்டங்களை முன்னெடுத்துள்ளது?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் இலங்கையுடன் இணைந்து சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக சுற்றாடல் அமைச்சு, இலங்கை நிலைபெறுதகு அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து வாகன புகையின் தரநிர்ணயம் மற்றும் எரிபொருட்களின் தரம் ஆகிவற்றினை மேம்படுத்துவது தொடர்பான திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.
அத்துடன், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் எரிபொருள் பொருளாதார கொள்கையினை அபிவிருத்தி செய்வதிலும் எமது நிகழ்ச்சித் திட்டம் செயற்பட்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக விவசாய நிலங்களை முகாமை செய்தல், நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் போன்ற துறைகளுடனான செயற்திட்டங்களிலும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் இலங்கையில் பணியாற்றி வருகின்றது.
அது மாத்திரமல்லாமல், பிளாஸ்டிக் மாசடைவு தொடர்பான கண்காணிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்காகவும் எமது உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் ஊடாக ஹன்வெல்ல மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேசங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியாகும் 1,400 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் தோல் வெண்மையாக்கும் அழகு சாதப் பொருட்களில் இருந்து இரசத்தினை அகற்றுவதற்காக உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகளின் சூற்றுச் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தினால் தலைமை தாங்கி முன்னெடுக்கும் திட்டத்தில் காபோன் மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒன்றாக உள்ளது.
சுற்றுச்சூழல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்த்திட்டங்களை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் எவ்வாறு நோக்குகின்றது?
இந்த பரந்த விடயத்தில் இலங்கையுடன் தொடர்ச்சியாக ஒத்துழைப்பதில் ஐக்கிய நாடுகளின் சூற்றுச்சூழல் திட்டம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது.
அண்மையில், ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டதை நாம் வரவேற்கின்றோம்.
அத்துடன், ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் 5ஆவது மாநாட்டின் இணை ஏற்பட்டாளர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அம்மாநாட்டினை கொழும்பில் நடத்தியது.
காலநிலை மாற்றம், இயற்கை இழப்பு மற்றும் மாசடைவு ஆகிய பாரிய மூன்று பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தயார் என்பதை இந்த மாநாட்டின் ஊடாக இலங்கை உலகிற்கு காட்டியுள்ளது.
அத்துடன், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மாற்றியமைத்தல் உட்பட மேற்படி ஒன்றோடொன்று இணைந்த நெருக்கடிகளை உலகளாவிய ரீதியிலும் இப்பிராந்தியத்திலும் உள்ள பல நாடுகளைப் போன்று இலங்கையும் முன்கொண்டு வருகின்றது.
காலநிலை மீள்தன்மையை கட்டியொழுப்புதல் மற்றும் புகைகளை குறைத்தல் போன்ற திட்டங்களை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பினை நாங்கள் வரவேற்கின்றேம்.
எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பினை ஐக்கிய நாடுகளின் சூற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் எதிர்பார்க்கின்றது.
ஐக்கிய நாடுகளின் ஆறாவது சுற்றுச்சூழல் கூட்டத்தொடர் பற்றிக் கூற முடியுமா?
சூற்றுச்சூழல் சவால்களுக்கு சர்வதேச ரீதியான காத்திரமான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் கூட்டத்தொடர் பங்களிப்புச் செலுத்துகின்றது.
இதன் 6ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 1ஆம் திகதி வரை கென்யாவின் தலைநகரான நைரோபியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் சூற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நிறைவேற்றப்படுவதற்கு பொருத்தமான தீர்மானங்களை உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்க முடியும். அந்த அடிப்படையில், 'காலநிலை நீதி' தொடர்பிலான வரைபுப் பிரேரணையொன்று இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடருக்கு முன்னர், பிராந்திய ரீதியிலான ஏற்பாட்டுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டங்களில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று விரைவில் எடுக்கப்படும்.
ஐக்கிய நாடுகளின் சூற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் எதிர்காலத்தில் இலங்கையுடன் எவ்வாறு இணைந்து செயற்படவுள்ளது?
2050ஆம் ஆண்டுக்குள் பூச்சிய நிகர புகை வெளியேற்றம் என்ற இலங்கையின் இலக்கினை அடைவதற்கு புதுபிக்கத்தக்க சக்திகள் மிகவும் முக்கியமாதாகும்.
இதேவேளை, 2050ஆம் ஆண்டளவில் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்திகளின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு தேவையான காற்று மற்றும் சூரிய வளங்கள் இலங்கையில் காணப்படுவதாகவும், அவற்றினை சேமித்து வைப்பதற்கான தொழிநுட்பங்களும் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய மேற்கொண்ட கற்கையொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை தவிர்ப்பதன் மூலம் வருடாந்தம் 18 – 19 பில்லியன் அமெரிக்க டொலரினை சேமிக்க முடியும்.
மின்சார வாகன தொழிநட்பத்தினை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் போக்குவரத்து துறையினை மின் மயமாக்கல் முக்கிய பணியாகும்.
இதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சூற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்தினால் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஆதரவினை தொடரவுள்ளது.
அனைத்து நாடுகளையும் போல சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் சுத்தமான மின்சக்தி செயன்முறையுடன் தொடர்புடைய பிற பொருட்களிலிருந்து வரும் கழிவுகளை நிர்வகிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெறுகின்ற COP28 என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இலங்கைக்கு பயனளிக்குமா?
உலகளாவிய ஸ்டொக்டெக் இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது. காலநிலை நடவடிக்கையில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகும். காலநிலை பிரச்சினைகள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வே இதுவாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக கடுமையாக பாதிக்கும் நாடுகளுக்கு இதன் ஊடாக பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுபோன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றம் தொடர்பில் தேவையான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த மாநாடு சிறந்த இடமாகும்.
இலங்கை போன்ற காலநிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற நாடுகள் இக்கலந்துரையாடலை வினைத்திறனாகப் பயன்படுத்த முடியும். அத்துடன் தேசிய ரீதியாக செயற்படுத்தவுள்ள காலநிலை திட்டங்களையும் இங்கு முன்வைக்க முடியும்.
அது மாத்திரமல்லாமல், எதிர்கால இலக்குகளை அடைவதற்கு தேவையான உதவிகளையும் இந்த மாநாட்டின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்புள்ளது. இதனால் இம்மாநாடு இலங்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இலங்கையில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை பல்கலைக்கழகம் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
இலங்கையில் காலநிலை பல்கலைகழம் ஸ்தாபிக்கப்படவுள்ளமை நல்லதொரு விடயமாகும். காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சாதமான நடவடிக்கைகளில் இதுவுமொன்றாகும்.
இலங்கையின் புவியியல் பிராந்தியங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தேவைகளை மையமாகக் கொண்டு விஞ்ஞர்ன அறிவினை உருவாக்கும் இலக்கிற்கு உதவும் வகையில் பீடஙகளையும் மாணவர்களையும் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாக உருவாக்க முடியும்.
காலநிலை நெருக்கடிக்கு தீர்வினை பெறுதற்கான நடவடிக்கைகளை வடிவமைத்து அமுல்படுத்துவதற்கு தேவையன உள்ளூர் அறிவு மற்றும் காத்திரமான தீர்மானங்களை இலங்கையிலுள்ள பல்துறை சார்ந்தோர் மேற்கொள்வதற்கும் இப்பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கும்.
Comments (0)
Facebook Comments (0)