இணையத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால கல்வி: ஊடக அமைச்சர்
இணையத்தை அடிப்படையாகக் கொண்டே, எதிர்கால கல்வி காணப்படும் என ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் − நெடுந்தீவு பகுதியிலுள்ள சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு தேவையான இணையத்தள வசதிகள் மற்றும் மடிகணினிகள் உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் இன்று (18) கையளித்தார்.
16 ஆசிரியர்கள் மற்றும் 68 மாணவர்களுடன் இந்த பாடசாலை இயங்கி வருகின்றது. இலங்கையின் கல்வி சமத்துவமின்மையை இல்லாது செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையிலுள்ள மொத்த ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களில் 25 சதவீதம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் என்பதுடன், அவர்களில் வட மாகாணத்தில் மாத்திரம் 53 சதவீதம் பயிற்சி பெறாத ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வியில் சமத்துவமின்மைக்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவை இல்லை என அவர் அமைச்சர் தெரிவித்தார். .
வட மாகாணத்தில் 22 தேசிய பாடசாலைகள் மாத்திரமே உள்ளமையை தான் கல்வி அமைச்சராக இருந்த போது அறிந்துக்கொண்டதாகவும், ஜனாதிபதியின் 1,000 தேசிய பாடசாலைகள் திட்டத்தில் அந்த தொகையை 76 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலுள்ள 10,142 பாடசாலைகளுக்கும் தேவையான இணையத்தள வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் டளஸ் அழகபெரும மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டார்.
Comments (0)
Facebook Comments (0)