இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவு

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு  சங்கத்தின் தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவு

இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (22) வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இச்சங்கத்தின் கூட்டத்திலேயே இத்தெரிவுமேற்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோர் இதில் கலந்துகொண்டதுடன், இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த நியமிக்கப்பட்டார்.

இச்சங்கத்தின் உப தலைவர்களாக வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, அரவிந்த குமார் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், உதவிச் செயலாளராக மொஹமட் முஸம்மிலும், பொருளாளராக இஷாக் ரஹ்மானும் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, "கி.மு 206ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் காணப்படுவதாகவும், 1957ஆம் ஆண்டு முதல் உத்தியோகபூர்வமாக இரு நாட்டுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டதாகவும்" தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு சீன அரசாங்கம் இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்களைப் பாராட்டிய சபாநாயகர், இலங்கையின் அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்குக் கிடைத்துள்ள முதன்மையான ஆதாரமாக சீனா காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு நாட்டுக்கும் இடையில் காணப்பட்ட உயர்மட்ட தொடர்புகள் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின், 2014ஆம் ஆண்டு மேற்கொண்ட விஜயம், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் இதற்கு சிறந்த உதாரணங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், எட்டாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கு சீன அரசாங்கம் பெற்றுக்கொடுத்த சுற்றுப் பயணங்களுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், 2016ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தூதுக்குழுவுடன் சீனா செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தமையையும் நினைவுகூர்ந்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய சீனத் தூதுவர், "இலங்கை- சீன நட்புறவு சங்கத்தை மீண்டும் ஸ்தாபித்தமைக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். இது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் கூறினார்.