2020 இல் 312 முறைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆராய்வு

2020 இல் 312 முறைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆராய்வு

இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கடந்த 2020ஆம் ஆண்டில் 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் 207 முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடித் தீர்வளிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 76 முறைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என இது குறித்து இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு எஞ்சிய 29 முறைப்பாடுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் பீட ஒழுக்கக்கோவைக்கு முரணாகப் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் தொடர்பானவையாகும்.
 
இந்நிலையில் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் பீட ஒழுக்கக்கோவையைப் பின்பற்றுவதன் ஊடாக இத்தகைய முறைப்பாடுகளைத் தவிர்த்துக்கொள்வதை பெரிதும் ஊக்குவிப்பதாகவும் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தது.

இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவானது 11 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.

மேற்படி குழுவின் தலைவராகக் கடமையாற்றும் சட்டத்தரணியொருவர் உள்ளடங்கலாக ஊடகவியலாளர்கள் அல்லாத ஆறு பேர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐவரும் ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.