வாக்களிக்க வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
கே.எம். றினோஸ்
பஃவ்ரல்
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் கொரோனாவுடனான வாழ்க்கைக்கு மாற்றமடைந்து வரும் நிலையில் வரும் ஆகஸ்டில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம்.
மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்பும் நிலையில் மக்கள் தேர்தல்களில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக மக்கள் பொடுபோக்காக இருப்பதையும் கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தெரிவில் விடுபட்ட தவறுகள் சம்பந்தமான விடயங்களையே இக்கட்டுரையில் எடுத்துரைக்கவுள்ளோம்.
இலங்கைக்கு தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றை கொண்டுவர பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வரும் நிலையில் சுமார் மூன்று தசாப்தங்களாக இலங்கையின் தேர்தல் செயற்பாட்டை அவதானிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் பஃவ்ரல் அமைப்பு, இந்த நாட்டின் அரசியல் தீர்க்கமான ஒரு கட்டத்தை அடைந்துள்ள இத்தருணத்தில் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் விரிவாக்கி இலங்கையில் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பணியாற்ற தயாராக உள்ளது.
அது பஃவ்ரல் அமைப்பின் வகிபாகத்தை வினைத்திறன் மற்றும் பயனுள்ள ஒரு வேலைத் திட்டமாக மாற்றியமைத்து இலங்கையின் அரசியல் செயற்பாட்டில் வேட்புமனு வழங்கும்போது சகல கட்சிகளும் அங்கீகரிக்கக் கூடிய நியதிகள் உள்ளடக்கப்பட்ட யோசனைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்தது.
இந்த யோசனைகளின் ஊடாக ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிலும் தேர்தல் செயற்பாட்டிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் காணப்படுகின்ற எதிர்மறையான நிலைமைகளைத் தணித்து, சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தைக் ஒன்றை கட்டியெழுப்பும் பணியில் உங்களுடனும், சகல மக்கள் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களுடனும் கைகோர்ப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இதைத் தனி ஒரு நபராலோ நிறுவனத்தாலோ செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவே நாம் அனைவரும் இப்பொறுப்புகளை ஏற்று அதற்காக உழைப்பதற்கு முன்வர வேண்டும். மேலும், பஃவ்ரல் அமைப்பு 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைகின்ற பின்வரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இலங்கையிலுள்ள பெரும்பாலான மாவட்டங்களை உள்வாங்கி, பல்வேறு மட்டங்களிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வின் மூலம் மக்கள் நேய அரசியல் கலாசாரம் தொடர்பிலான மக்களின் விருப்பங்கள் ஆய்ந்தறியப்பட்டன. அரசியல் தூய்மையான கலாசாரத்தை உருவாக்க மார்ச் 12 இயக்கம் எனும் கூட்டு அமைப்புக்களின் இயக்கம் உருவாக்கப்பட்டது .
பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தக சமூகம், நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் போன்ற சமூகத்தில் கருத்தியல் ஒன்றை கட்டியெழுப்புவதில் அமுக்கக் குழுக்களாக செயற்படவேண்டிய தரப்புடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்கள் ஊடாக அரசியல் கலாசாரத்தின் சீரழிவுக்கு காரணமான விடயங்களைக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகள் பற்றி கலந்துரையாடி, அதற்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பொதுவான ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
இவ்வாறான கலந்துரையாடல்களின் பயனாக சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை தகமைகள் உள்ளடக்கப்பட்ட யோசனைகளை வரைந்து அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பிக்க முடிந்தது.
மார்ச் 12 இயக்கத்தின் பயணப் பாதை
2015 ஆண்டு மார்ச் மாதம் 12 திகதி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான நியதிகளை அறிமுகப்படுத்தி ஆரம்பமான மார்ச் 12 இயக்கம் தற்போது 05 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. கடந்த 05 வருட காலத்தில் தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முக்கியமான சிலவற்றை இதில் உள்ளடக்கியுள்ளோம். எதிர்வரும் ஆகஸ்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றைச் சந்திக்க தயாராக உள்ளோம். வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் தற்போது பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
புதிய அரசியல் கலாசாரமொன்று ஏன் தேவைப்படுகின்றது?
•சமகால அரசியல் கலாசாரத்தின் சீரழிவு சட்டத்திற்கும் சமூகத்திற்கும் அதேபோல் நாகரீகத்திற்கும் விரோதமான முறையில் நேரடியாக பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளினால் வேட்புமனு வழங்கப்படுதல். மக்கள் பிரதிநிதிகளாக அவர்களைத் தெரிவு செய்ய மக்கள் பங்களிப்பு வழங்கியிருத்தல்.
தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் சமூக விழுமியங்களைச் சீரழித்துள்ளதன் காரணமாக அரசியல் கூட்டுத்தாபனத்தின் நேர்மைத் திறன், நற்பெயர் மற்றும் மாண்பு என்பன சீரழிந்திருத்தல்.
•சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சி. சட்டம் இயற்றுதல் நடைமுறைப்படுத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில், மக்கள் நம்பிக்கையை அற்றவர்களாகவும் ஏமாற்றமடைந்தவர்களாசவும் விரத்தியடைந்தவர்களாக காணப்படுதல்.
•கட்சிகள் பொறுப்புகளை தட்டிக் கழித்தல். பாராளுமன்றம் மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது மக்கள் நேயமுள்ள, கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும், சரியானை தொலைநோக்கு உடைய நபர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பை அந்தந்தக் கட்சிகள் தட்டிக் கழித்துள்ளன.
•பொதுமக்கள் பொறுப்புகளை தட்டிக் கழித்தல், பிரபல்லியம், உபசரணை மற்றும் பணபலம் காரணமாக அரசியல் கலாசாரம் சீரழிந்துள்ளது. இதன் காரணமாக தகுதியானவர்களுக்குப் பதிலாக தகுதியற்றவர்கள் அரசியலில் முன்னுரிமை பெற்றும் அதேபோல், கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்குப் பதிலாக தமது தனிப்பட்ட நலன்களை அடையும் நோக்கத்துடன் மக்கள்தம் பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் தூண்டப்பட்டுள்ளனர்.
•மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை நிறைவேற்றாமை பாராளுமன்றம், மாகாணசபைகள் உள்ளூராட்சி உறுப்பினர்களில் கவனிக்கத்தக்க ஒரு பகுதியினர் தமக்குரிய பொறுப்புகளுக்குப் பதிலாக தமது ஆளுமையைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றனர். இதனால் அவர்கள் உள ரீதியாக, நாட்டுக்காக அல்லது மக்களுக்காக சேவையாற்ற தேவையான மன வலிமையை இழக்கின்றனர்.
•மக்களின் சபையில் விவாதங்கள் கலந்துரையாடல்கள் மற்றும் பகுப்பாய்வுகள் கிரமமாக அருகி வருதல். நாட்டில்ள்ள ஒட்டு மொத்த மக்களின் வாழ்வியல் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமான கொள்கைகளையும் சட்டங்களையும் ஆக்கும் பொறுப்பினைக் கொண்டுள்ள பாராளுமன்றத்திலும், ஏனைய மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் கருத்துள்ள, ஆக்கபூர்வமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பகுப்பாய்வுகள் நடைபெறாமை காரணமாக மக்கள் இறைமை பெறுமதி இழந்துள்ளது. வேட்பு மனு தொடர்பான
வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய உடன் பட்டுக்கொண்ட நியதிகள்
சமகால அரசியல் கலாசாரம் படிப்படியாக முனைமுழுங்குதல், சட்டத்தின் ஆட்சிவிழ்ச்சியடைதல், அரசியல் கட்சிகளும் பிரஜைகளும் தமது பொறுப்புக்களை தவறவிடுதல் மற்றும் மக்களைமையப்படுத்திய பொதுக் கூட்டங்களில் பகுத்தாய்வுரீதியான விவாதங்களும் கலந்துரையாடல்களும் அருகிவருவதை புரிந்துகொண்ட மார்ச் 12 இயக்கம் திடசங்கற்பத்துடனும் துணிவுடனும் இலங்கையில் சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக சிவில் அமைப்புகளுடன் கைகோரத்துள்ளது.
அதன் பயனாக பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான வேட்பாளர்களை நியமிக்கும் போது சகல அரசியல் கட்சிகளும் கவனத்தில்கொள்ளவேண்டிய, சிவில் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நியதிகளுக்கு 2020 மார்ச் 12 திகதி மக்களின் அங்கீகாரம் கிடைத்தது.
மார்ச் 12 நியதிகள் சமகால அரசியல் சூழமைவுக்கு ஏற்ப காலத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என நம்புகிறோம். மார்ச் 12 இயக்கத்தின் நியதிகளை தயாரிக்கும்போது பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததைப் போலவே அவற்றை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மீளாய்வு செய்வதற்கும் நாம் சகல மாவட்டங்களும் அடங்கும் வகையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
அந்த வகையில் நடத்தப்பட்ட சந்திப்புகளின்போது பெறப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்ட புதிய நியதிகளுக்கு 2020 மார்ச் 12ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மீண்டும் அரசியல் கட்சிகளின் உடன்பாட்டை பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதேபோல், அந்த நியதிகளுக்கு இணங்க வாக்காளர்களை வாக்களிக்க அணிதிரட்டவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 2020 மார்ச் 12ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது அரசியல் கட்சிகள் உடன் பட்டுக்கொண்ட நியதிகள்
01.அனைத்து மக்கள் சமூகம் தொடர்பில் கூருணர்வு, சுதேச சிந்தனை, சர்வதேச அரசியல் தொடர்பில் புரிதல் சட்டம், கொள்கை வகுப்பு மற்றும் நிதி முகாமைத்துவ இயலுமையுடைய நடைமுறைக்குச் சாத்தியமான ஒருவராக இருத்தல்.
02.குற்றவியல் சார்ந்த தவறொன்றுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது இடைநிறுத்திய சிறைத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படாத ஒருவராக இருத்தல் வேண்டும்
03.இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் குற்றவாளியாக்கப்படாத சமூக அங்கீகாரம்பெற்ற நன்னடைத்தையுள்ள ஒருவராக இருத்தல் வேண்டும்.
04.மதுசாரம், போதைப்பொருள், சூது, கசினோ விலைமாதர் விடுதி உட்பட நாட்டின் நல்லிருப்பிற்கு பங்கம் விளைக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அல்லது ஈடுபட்டுவரும் ஒருவராக இராதிருத்தல் .
05.உயிர்மூலக் கட்டமைப்பைச் சிதைத்துவிடும் சுற்றாடல்ரீதியாக தீங்கு பயக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த அல்லது ஈடுபட்டுவரும் ஒருவராக இராதிருத்தல் .
06.மக்கள் பிரதிநிதி ஒருவராவதற்கு முன் நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய நிதிசார் ஒப்பந்தங்களைச் செய்து கொண்ட மற்றும் மக்கள் பிரதிநிதி ஒருவராக இருந்துகொண்டு தமது அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்துடன் நிதிசார் ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட அல்லது அத்தகைய ஒப்பந்தமொன்றின் தரப்பினர் ஒருவராக இராதிருத்தல்
07.வேட்புமனு கையளிக்கின்ற வேட்பாளர் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியின் குடியிருப்பாளர் ஒருவராக அல்லது அம்மக்களுடன் உறவைப் பேணும் ஒருவராக இருத்தல்.
08.சமயத் தலைவர்கள் அரசியல் பேதமின்றி மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமானவர்களாக இருக்க வேண்டுமென்பதால், அரசியல் கட்சிகளில் அவர்களுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது
மேற்படி நியதிகள் 2020 மார்ச் 12 திகதி அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்காகமார்ச் 12 இயக்கம் மற்றும் பொதுமக்களின் கூட்டுமுயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனவே பொதுமக்களாகிய இந்நாட்டு பிரஜைகள் வாக்களிக்கும் போது வேட்பாளர்கள் தெரிவில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை கவனத்தில் கொண்டு சமுதாயத்திட்கு தேவையான சிறந்த ஆளுமை மிக்க தூயமையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கக்கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும்.
எமது எதிர்கால சந்ததிக்காக எமது நாட்டை சிறந்த பொருளாதார, அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு ரீதியில் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் இணையுமாறு சகல மதத் தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளை அன்போடு அழைக்கின்றோம்.
தற்போதைய அரசியல் கலாச்சாரத்திலிருந்து தூய்மையான சிறந்த அரசியலை கலாசாரத்தை உருவாக்கி ஆளுமைமிக்க சமுதாயத்தை உருவாக்க 'அனைவரும் வாருங்கள்; ஒன்றாக நம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்'.
Comments (0)
Facebook Comments (0)